pஅப்பல்லோவில் சிசிடிவி அகற்றப்பட்டது ஏன்?

public

ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதாகவும் அது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என விசாரணை ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளதாகவும் மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தைத் தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், அரசு மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன் இன்று (பிப்ரவரி 21) விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது எனவும் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் முதன்முதலில் நானும் எனது தந்தை பி.எச்.பாண்டியனும்தான் குரல் கொடுத்தோம். விசாரணை ஆணையத்தில், எனக்குத் தெரிந்த விவரங்களையும் மருத்துவமனையில் கண்டதையும் தெரிவித்தேன். சசிகலா மீது ஜெயலலிதாவின் சந்தேகப் பார்வை எவ்வாறு இருந்தது என்பது குறித்தும் தெரிவித்தேன்.

மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரது புகைப்படம் வெளியிடப்படுமா எனத் தமிழக மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் வெளியிடப்படவில்லை. மேலும், சிகிச்சையின்போது புகைப்படமோ, வீடியோவோ எடுக்க ஜெயலலிதா அனுமதிக்கவில்லை. அதனால் எந்தப் புகைப்படமோ வீடியோவோ எடுக்கவில்லை என்று அவர் அப்பல்லோவில் இருந்தபோது டிடிவி. தினகரன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் தற்போது சிடி எப்படி வந்தது என்பதை விசாரிக்க வேண்டும் என்று ஆணையத்தில் கூறியுள்ளேன். ஜெயலலிதாவின் விருப்பத்துக்கு எதிராக எவ்வாறு வீடியோ எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளேன்.

மேலும், ஜெயலலிதா எந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார்; போயஸ் கார்டனில் இருந்து அப்பல்லோவுக்கு போன் செய்த டிஎஸ்பி யார்; அப்பல்லோவில் இருந்து போயஸுக்கு வந்த ஆம்புலன்ஸில் வந்த மருத்துவர்கள் யார் யார்; மருத்துவமனையிலிருந்து 27 சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது ஏன்; யார் அவற்றை அகற்றச் சொன்னார்கள் போன்ற கேள்விகளையும் விசாரணை ஆணையத்தின் முன் வைத்துள்ளேன்.

தனது குடும்பத்துடன் சேர மாட்டேன் என சசிகலா கூறியதையடுத்துதான் ஜெயலலிதா அவரைச் சேர்த்துக்கொண்டார். ஆனால் மருத்துவமனையில் முழுக்க முழுக்க இருந்தது சசிகலாவின் குடும்பம்தான். ஜெயலலிதாவின் அனுமதி இல்லாமல் இவர்கள் எப்படி வந்தனர் என்றும் விசாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளேன்” என்று தெரிவித்தார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *