என்.எல்.சி விபத்து: மேலாளர் சஸ்பெண்ட், விசாரணைக்கு உத்தரவு!

public

என்.எல்.சி விபத்தையடுத்து 2ஆவது அனல்மின் நிலைய பொதுமேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இன்று (ஜூலை 1) பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் அருண்குமார், பத்மநாபன், வெங்கடேசப் பெருமாள், சிலம்பரசன், நாகராஜன், ராமநாதன் ஆகிய 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட 17 பேருக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அனல்மின் நிலைய விபத்தில் தொழிலாளர்கள் இறந்தது வேதனை அளிப்பதாகவும், படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்த உள் துறை அமைச்சர் அமித் ஷா, “இதுதொடர்பாக தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யத் தயாராக இருக்கிறது” என்றும் ட்விட்டரில் தெரிவித்தார்.

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ஆறு நபர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பது ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பாதுகாப்பு என்பது மிக மிக மோசமான நிலைமையில் இருப்பதை இந்த விபத்து உணர்த்துவதாக குற்றம்சாட்டிய ஸ்டாலின், “.இனியொரு முறை விபத்து ஏற்படாது என்றும், இனியொரு தொழிலாளி பாதிக்கப்பட மாட்டார் என்றும் நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம் உறுதியளிக்க வேண்டும். நிறுவனத்தைப் புதுப்பித்து உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அனல்மின் நிலைய செயல்பாடுகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டுமென மதிமுக பொதுச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார். இந்த மோசமான கவனக்குறைவுகளுக்கு யார் பொறுப்பு எனக் கேள்வி எழுப்பிய விசிக தலைவர் திருமாவளவன், இவற்றின் முழுமையான பின்னணியைக் கண்டறிய சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், என்.எல்.சி. 2-ஆவது அனல் மின் நிலையத்தின் பொது மேலாளர் கோதண்டம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

என்.எல்.சி நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “என்.எல்.சி இயக்குநர் (பவர்) தலைமையிலான மூத்த நிர்வாகிகளுடன் விசாரணைக் குழு இதுகுறித்து விசாரணை நடத்தும். அத்துடன், விபத்துக்கான காரணம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2ஆவது அனல்மின் நிலையத்தின் தலைவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *