தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவலர்களுக்கான தேர்வு நடைமுறையை நிறுத்திவைக்கச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 20) உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீயணைப்புத்துறை, சிறைத்துறை ஆகியவற்றில் நிரப்புவதற்கு 8,888 பணியிடங்களுக்கான காவலர் தேர்வைச் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது.இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். எழுத்துத் தேர்வு, உடற் தகுதித் தேர்வு என அனைத்து தேர்வுகளும் முடிந்து கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த தேர்வில் முறைகேடு நடந்தது வெளிச்சத்துக்கு வந்தது. வேலூரில் 1019 பேரும், விழுப்புரத்தில் 763 பேரும் தேர்வானதாகவும், இவர்கள் அனைவரும் ஒரே பயிற்சி மையத்தில் பயின்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. எனவே இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி திருவண்ணாமலையைச் சேர்ந்த 15 தேர்வர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், ”தேர்வில் கலந்து கொண்டவர்களின் கட் ஆஃப் மதிப்பெண் விவரங்கள் மற்றும் தமிழ் மொழியில் படித்தவர்களுக்கான இட ஒதுக்கீடு விவரங்களும் முறையாக வழங்கப்படவில்லை. எனவே தற்காலிக தேர்வு பட்டியலை ரத்து செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சீருடை பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் உதவியுடன், தனியார் பயிற்சி மையங்கள் காவலர் தேர்வுகளில் முறைகேடுகள் செய்து வருவதாகவும், இதனை மாநில போலீசார் விசாரித்தால் உண்மை வெளியில் வராது. எனவே சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் அனைத்து அரசுப் பணியாளர் தேர்விலும் முறைகேடுகள் நடப்பது கேலிக்கூத்து என்று தெரிவித்த நீதிபதி இதுபோன்ற முறைகேடுகள் அரசு மீதான நம்பிக்கையை மக்களிடம் இழக்க செய்யும் என்றார்.
மேலும், குறிப்பிட்ட பயிற்சி மையத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வானது எப்படி? குறிப்பாக அவர்கள் ’69.5’ என ஒரே மாதிரியான மதிப்பெண்கள் பெற்றது எப்படி? எழுத்துத் தேர்வில் தோல்வியுற்றவர்கள் உடல்தகுதி தேர்வில் எப்படிப் பங்கேற்றார்கள்? இப்படி பணியில் சேர்ந்தால் காவல்துறையின் நிலை என்ன ஆவது? என்று அரசுத் தரப்புக்குச் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.
தமிழர்கள் ஆகிய நாம் நேர்மையை இழந்துவிட்டதாகத் தெரிவித்த நீதிபதி, கிராமப் புற மக்கள் அரசு வேலையைப் பெரிய விஷயமாக நினைக்கின்றனர். ஆனால் இதுபோன்ற நிகழ்வுகளால் அவர்கள் எண்ணம் மாறும் என்று குறிப்பிட்டு, வழக்கை சிபிஐக்கு மாற்றுவது குறித்து மார்ச் 5ஆம் தேதிக்குள் பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார். 8,888 பணியிடங்களுக்கான காவலர் தேர்வு நடைமுறைகளையும் நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், கடந்த 10ஆண்டுகளாக நடைபெற்ற தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் எதுவும் நிகழவில்லை, அனைத்து ஆவணங்களையும் பார்த்த பின்னர் இறுதி உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.�,