mவிஷாலின் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியது!

public

தமிழ் சினிமா 365: பகுதி – 23

இராமானுஜம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான நிர்வாகிகளின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைய உள்ளது. ஆட்சிக் காலத்தில் மக்களுக்கான நலத்திட்டங்களில் கவனம் செலுத்தாமல், தேர்தல் நெருங்குகிற போது அவசர அவசரமாக ரோடு போடுவது, குடிநீர் குழாய் அமைப்பது போன்ற வேலைகளை செய்து பரபரப்பைக் கூட்டுவது அரசியல் கட்சிகள் பாணி. அரசியல்வாதியாக ஆக ஆசைப்பட்ட நடிகர் விஷால் தயாரிப்பாளர்கள் சங்க வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சொந்த கட்டிடம் கட்டும் பணி நடப்பதால் அந்த சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. நடிகர் சங்கத்தில் விஷாலுக்கு எதிர்ப்புகள் குறைவு. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கணிசமான எதிர்ப்பாளர்கள் உள்ளனர். நடிகர் சங்க வளர்ச்சிக்கு கவனம் செலுத்தியது போன்று தயாரிப்பாளர்கள் சங்கதிற்கு தலைவராக கவனம் செலுத்தவில்லை என்ற குற்றசாட்டு தொடக்கம் முதலே இருந்து வருகிறது.

தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஆன பின்பு நடைமுறைக்கு சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அரசியல்வாதி போன்று அறிவித்தார் விஷால். வருகிற மார்ச் 3அன்று தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சங்க வைப்பு நிதியில் இருந்த 7 கோடி ரூபாய் பணத்தை செயற்குழு ஒப்புதல் பெற்று தற்போதைய நிர்வாகக் குழு செலவு செய்ததற்கு விஷால் எதிர் தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு நேரடியாக எந்த பதிலையும் தயாரிப்பாளர் சங்க தலைவர் என்ற முறையில் இதுவரை விஷால் கூறவில்லை. ஆனால் மீண்டும் தலைவராக தானோ அல்லது தனது பிரதிநிதி ஒருவரை போட்டியிட வைக்க விஷால் திட்டமிட்டு வேலைகளை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் தான் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை செலவு செய்யப்பட்ட வைப்பு நிதி தொகையை சமன் செய்ய முயற்சிக்கிறார் என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.

தலைவர் பொறுப்புக்கு வந்த நாள் முதல் சிறு பட தயாரிப்பாளர்கள் நலனுக்காக எந்த முயற்சியும் எடுக்காதவர் விஷால். அவர்கள் ஏதேனும் பிரச்சினைக்காக ஃபோன் செய்தால் தொலைபேசியை எடுத்துப் பேசாத விஷால் அவர்கள் நலனுக்காக முயற்சிப்பதாக ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கும் வேலைதான் நேற்றைய தினம் முதன்முறையாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மைக்ரோப்ளக்ஸ் வசதி என்று விஷால் அறிவித்தது என்கின்றனர் சிறுபட தயாரிப்பாளர்கள் தரப்பில்.

சங்க முயற்சியில் எதையும் செய்யாமல் மைக்ரோப்ளக்ஸ் நிறுவனம் மாஸ்டர் யூனிட் வசதி செய்துகொடுத்திருப்பதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய விஷால் “இதனால், தயாரிப்பாளர்களுக்கு செலவுகள் குறையும். குறிப்பாக சிறு பட தயாரிப்பாளர்கள் மிகுந்த பயனடைவார்கள்” என்றார். அந்நிகழ்ச்சியில் மைக்ரோபிலிஸ் ஆல்பர்ட் பேசும்போது, “தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ஒரு மாஸ்டர் யூனிட் வேண்டும் என விஷால் என்னிடம் பலமுறை கேட்டார். இதனால் சிறு பட தயாரிப்பாளர்கள் பயனடைவார்கள் என்றார். ரூபாய் 2 லட்சம் செலவழித்து சங்கத்தை வளர்க்க அவர் எடுக்கும் முயற்சியைப் புரிந்துகொண்டு இந்த வசதியை செய்து தர ஒப்புக்கொண்டேன்” என்றார்.

சங்க துணைத் தலைவர் பார்த்திபன் பேசும்போது, “ஒரு மனிதன் தன் வாழ்நாளில் முதன்மையாகக் கருதுவது திருமணம் தான். ஆனால் அதைவிட தலைவர் பொறுப்பில் இருக்கும் போதே சங்கத்திற்கு சிறந்ததை செய்துவிட வேண்டும் என்கிற விஷாலை நான் தரிசிக்கிறேன். ஆல்பர்ட் உடனும், ரஞ்சித்துடனும் அவர் பேசிக்கொண்டிருந்ததை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். இதைவிட தெளிவாக, சங்கத்திற்கு நன்மை செய்துவிட முடியுமா? என்று ஆச்சரியமாக இருந்தது. இதில் அரசியல் இல்லை. நான் யாருக்கும் விரோதி அல்ல. தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மிகப்பெரிய தொகையை வைப்பு நிதியாக சேமித்து வைக்க நினைக்கும் விஷாலின் திட்டத்திற்கு எனது பங்களிப்பும் இருக்கும் என்பதில் மகிழ்ச்சி” என விஷால் புகழ் பாடிய பிறகு விஷால் பேசவந்தார்.

“இந்த ‘மைக்ரோப்ளக்ஸ்’ வசதி ‘ஐடி’ நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தான் அமைந்திருக்கும். ஆனால், முதன்முறையாக தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு அதற்கான அலுவலகம் அமைந்திருக்கிறது. முக்கியமாக இலவசமாக கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. அதற்காக ‘மைக்ரோப்ளக்ஸ்’ ஆல்பர்ட்டுக்கு நன்றி. இதுபற்றி ஒரு நாள் பேசிக்கொண்டிருந்தேன். முதன்மை அலுவலகம் இருக்கிறது. அதேபோல் தி.நகரிலும் அலுவலகம் இருக்கிறது. ஆனால், இந்த இடம் சிறு தயாரிப்பாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும். பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு, படத்தின் பிரத்யேக காட்சிகள் மற்றும் இசை வெளியீட்டு விழா ஆகியவற்றிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அலுவலகத்திற்கு வாடகை கிடையாது. தமிழ் திரையுலகத்திற்கு மிகப்பெரிய நிறுவனமான மைக்ரோப்ளக்ஸ்-ன் ரஞ்சித்தை வரவேற்கிறேன்.

அதேபோன்று, ‘ப்ரைம் போக்கஸ்’ உடன் இணைவதிலும் மகிழ்ச்சி. ஏனென்றால், தயாரிப்பாளர்களாகிய நாங்கள் பல வருடங்களாக எங்களுக்கு சம்பந்தமே இல்லாத புரொஜெக்டருக்கு செலவழித்து வருகிறோம். இந்த விவாதத்திற்கு இப்போதுதான் ப்ரைம் போக்கஸ் மூலம் ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் அந்த தொகையைக் குறைத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு தொகையை அளித்து மாஸ்டர் யூனிட்டை அமைக்கலாமா என்ற எங்களது யோசனையை நிஜமாக்கித் தந்தவர் ஆல்பர்ட். மேலும் ஒரு சிறப்பம்சம் 50 ரிப்லைனிங் இருக்கைகள் கொண்ட ஒரு ப்ரீவியூ தியேட்டர் இருக்கிறது. அதை சென்சார் மற்றும் திரைப்பட வெள்ளோட்டத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்கள்.

நான் படம் தயாரிக்கும் போது தான் ஒரு தயாரிப்பாளருடைய கஷ்டம் புரிந்தது. ஆனால், அவர்கள் தயாரிக்காமலே தயாரிப்பாளர்களின் கஷ்டத்தைப் புரிந்துகொண்டு இந்த சலுகையை அளித்திருக்கிறார்கள். எந்த விஷயமாக இருந்தாலும் அலுவலகம் வாருங்கள் என்று சொல்வது தான் பெருமையாக இருக்கும். இனிமேல் நாங்கள் அதைக் கூறுவோம். எங்களுக்கென்று ஒரு அலுவலகம் அமைந்திருக்கிறது. இளையராஜா 75′ விழா பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் YMCA நந்தனத்தில் கோலாகலமாக நடைபெறும். இந்த விழாவை இசைஞானிக்காக நடத்துவதில் பெருமையடைகிறேன் இப்படிப்பட்ட மாமனிதருக்கு விழா எடுப்பது எல்லோருடைய கடமை” என்று கூறி தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் நடிகர் விஷால் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.

**முந்தைய பகுதி: [அஜித் ஏன் பேசினார்?](https://minnambalam.com/k/2019/01/22/79)**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *