kமராத்தியர்கள் போராட்டம்: பணிந்தது அரசு!

public

மராத்தா சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மராத்தா கிரந்தி அமைப்பினர் நடத்திய மாபெரும் பேரணியால் மும்பை நகரம் ஸ்தம்பித்தது.

மகாராஷ்டிராவில் மராத்தா இனத்தவர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். அம்மாநில மக்கள் தொகையில் மராத்தியர்கள் பங்கு என்பது 32 சதவிகிதமாக உள்ளது. இந்நிலையில், தங்களைச் சிறுபான்மையினராக அறிவித்து கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தங்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மராத்தியர்கள் இன்று (ஆகஸ்ட் 9 ) மாபெரும் பேரணி சென்றனர்.

மராத்தா கிரந்தி மோர்சா அமைப்பினர் ஏற்பாடு செய்த இந்த அமைதி பேரணியில் லட்சக்கணக்கான மராத்திய மக்கள் கலந்துகொண்டனர். பேரணியில் 3 லட்சத்துக்கும் அதிகமான மராத்தியர்கள் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. பைகுலா பகுதியில் தொடங்கிய பேரணி மாலையில் ஆசாத் மைதானத்தில் நிறைவு பெற்றது. இந்தப் பேரணியில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்றனர். குறிப்பாக, குழந்தைகள் மராத்திய மன்னன் சிவாஜி வேடம் தரித்து பேரணியில் கலந்துகொண்டு கோஷம் எழுப்பினர்.

சிவசேனா அமைப்பும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து சட்டசபை வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான பாபுராவோ பச்சார்னி மற்றும் விஜய் காலே ஆகியோரும் பேரணியில் கலந்துகொண்டனர். மும்பையில் உணவு விநியோகத்தில் ஈடுபட்டுள்ள டப்பாவாலாக்களும் இந்த பேரணியில் பங்கெடுத்தனர்.

இதுபோல் மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் மருத்துவர்களும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். தங்களின் மருத்துவர்களில் 30 சதவிகிதம் பேர் இந்தப் பேரணிக்கு ஆதரவு அளித்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கமும் அறிவித்துள்ளது. இதேபோல், பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்து. இந்த மாபெரும் பேரணி காரணமாக மும்பையில் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போனது.

பேரணி நடைபெற்ற வழி எங்கும் லட்சக்கணக்கான மராத்தியர்கள் குவிந்தனர். பேரணியில் பங்கேற்ற ஒருசிலருக்கு உடற் அயற்சி ஏற்பட்டதையடுத்து ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாம்களில் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. பேரணியில் கலந்துகொண்டவர்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் திரும்பிச் செல்வதற்கு ஏதுவாக மத்திய ரயில்வே சிறப்பு புறநகர் ரயில் சேவைகளை அறிவித்திருந்தது. மேலும்,பேரணி நிறைவு பெற்றது. பேரணி நடைபெற்ற வழியில் இருந்த குப்பைகளை அகற்றும் நடவடிக்கையிலும் மராத்தா கிரந்தி மோர்சா அமைப்பினர் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இந்தப் பேரணியை மும்பை போலீசார் ட்ரோன், சிசிடிவி, போக்குவரத்து சர்வைலென்ஸ் கேமரா போன்றவை மூலம் கண்காணித்தனர். இதுபோல், பேரணியை வன்முறையாக மாற்றும் செய்திகள் ஏதேனும் பகிரப்படுகிறதா என்பதற்காக ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களையும் தீவிரமாகக் கண்காணித்தனர். சமீபகாலத்தில், மும்பையில் நடைபெற்ற மிகப்பெரிய பேரணியாக இது பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மராத்திய மக்களின் மாபெரும் எழுச்சியை அடுத்து அவர்களின் கோரிக்கைக்கு அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபத்னாவிஸ் செவி சாய்த்துள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அவர்,” மராத்திய மாணவர்கள் தங்கி படிப்பதற்கு ஹாஸ்டல் அமைப்பதற்கு ரூ. 5 கோடி நிதி மற்றும் நிலம் ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார். அனைத்து மாவட்டங்களிலும் இது செயல்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார். இதுபோல், பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படுவது போல் மராத்திய மாணவர்களுக்கும் கல்வியில் சலுகை வழங்கப்படும் என்று தெரிவித்தார். வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக கள நிலவரத்தை அறியக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பேரணி நிறைவு பெற்றதும் மராத்தா மோர்சா அமைப்பினர் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் முதல்வர் தேவேந்திர ஃபத்னாவிஸை சந்தித்து இது தொடர்பாக பேசினார்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *