நேற்று எத்தனை லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது?

Published On:

| By Balaji

தமிழ்நாட்டில் ஆறாம் கட்ட தடுப்பூசி முகாமில் 22.33 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் மெகா தடுப்பூசி முகாம், இந்தவாரம் மது மற்றும் அசைவ பிரியர்களுக்காக சனிக்கிழமை நடத்தப்பட்டது. அதன்படி நேற்று(அக்டோபர் 23) ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

சென்னையில் துரைப்பாக்கத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அதுபோன்று துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெரம்பலூர், அரியலூர்,திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை ஆய்வு செய்தார்.

சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற முகாமை ஆய்வு செய்தார். அதுபோன்று, அந்தந்த மாவட்டங்களில் உள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் முகாமை ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் நேற்று மட்டும் 22,33,219 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், 8,67,573 பேர் முதல் தவணையையும், 13,65,646 பேர் இரண்டாவது தவணையையும் செலுத்திக் கொண்டனர்.

நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றதால், இன்று(அக்டோபர் 24) தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share