இது முஸ்லிம் தயாரித்த இனிப்பல்ல: பேக்கரி உரிமையாளர் கைதாகி விடுதலை!

public

சென்னை தி.நகரை சேர்ந்த ஜெயின் பேக்கரிஸ் அண்ட் மிட்டாய்ஸ் என்ற நிறுவனம் சார்பில் சமூக தளங்களில் ஒரு விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அதில், ‘ஜெயின் ஊழியர்களால் இனிப்புகள் செய்யப்படுகின்றன. முஸ்லிம் ஊழியர்களால் அல்ல’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

இந்த விளம்பரம் நேற்று சமூக தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து போலீசாருக்கும் தகவல்கள் சென்றன. இதையடுத்து மாம்பலம் போலீஸார் தாங்களாகவே முன் வந்து அந்த பேக்கரி உரிமையாளர் மீது வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனர். அவர் மீது 295 ஏ (வேண்டுமென்றே தீங்கிழைக்கும் செயல்கள், மத உணர்வுகளை சீர்குலைக்கும் நோக்கம் கொண்ட மதத்தை அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பது ) மற்றும் 504 (பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்) பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விளம்பரம் குறித்து பேக்கரி ஊழியர்களிடம் விசாரித்தபோது, “இந்த விளம்பரம் வகுப்புவாத நோக்கம் கொண்டதல்ல. முஸ்லிம்களால் தயாரிக்கப்பட்ட பேக்கரி தயாரிப்புகளை வாங்க வேண்டாம் என்று வாட்ஸப்பில் வதந்தி பரவுகிறது. இதையடுத்து பலரும் எங்களுக்கு தொலைபேசி செய்து, ‘உங்கள் நிறுவனத்தில் முஸ்லிம் ஊழியர்கள் பணி செய்கிறார்களா?’ என்று கேட்கத் தொடங்கினர். அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாகத்தான், ‘ஜெயின் ஊழியர்களால் தயாரிக்கப்பட்டது. முஸ்லிம்களால் அல்ல’ என்று விளம்பரம் வெளியிட்டோம்” என்று சொல்லியிருக்கிறார்கள். இதைக் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

சமீபகாலமாகவே முஸ்லிம் மக்கள் மீது தேவையற்ற வெறுப்புணர்வு பரபப்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. தப்லீக் மாநாட்டில் பங்கேற்கச் சென்றவர்களை மையமாக வைத்து ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மீதும் கொரோனா பரப்பாளர்கள் என்று சமூக தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் தங்கள் கடைகளில் முஸ்லிம் ஊழியர்கள் இல்லை என்று விளம்பரமாகவே வெளியிடும் அளவுக்கு நிலைமை போய்விட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.நூர்முகமது, மாநிலப் பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர்,

“உலகமே கொரானா வைரஸ் தாக்குதலில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது. அரசுகள், அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள் என அனைவரும் போராடி வருகின்றனர். ஆனால் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இந்துத்துவ சக்திகள் தொடர்ந்து சிறுபான்மை முஸ்லீம் மக்கள் மீது வெறுப்பை உமிழ்ந்து கொண்டும், ஒரு பகுதி மக்களை வெளியேற்றி கொண்டும் வருகின்றனர்.

ஜெயின் பேக்ரீஸ் தனது நிறுவனத்தில் முஸ்லீம்கள் பணி வைக்கப்படவில்லை என விளம்பரம் செய்துள்ளது. அதேபோல இந்து தமிழர் கழகம் என்ற அமைப்பு ’துலுக்கனை வெட்ட வேண்டும் என்றால் எத்தனை பேர் ஆயுதம் எடுப்பீர்கள்’ என முகநூலில் கருத்து பகிர்ந்து வெறியை கிளப்பிவிட்டு வருகின்றது.

ரமலான் நோன்பு காலத்தில் வெள்ளிக்கிழமை கூட மசூதிக்குச் செல்வதை தவிர்த்து முஸ்லீம்கள் வீட்டிலேயே நமாஸ் செய்து வருகின்றனர். மசூதிகளில் நோன்பு கஞ்சி தயார் செய்து வழங்குவதும் இல்லை, ரமலான் கால ஈகை செய்வதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்ட போது கூட கொரானா நோயின் தீவிரத்தை உணர்ந்து செயல்பட்டு வருகின்றனர். ஏன், மதுரை கள்ளழகர் விழாவும், திருவண்ணாமலை கிரிவலம் உள்ளிட்ட இந்து கோவில்களிலும் கூட பெயரளவிலேயே விழாக்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் பேக்கரி அதிபரை காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுத்திருப்பதை வரவேற்கிறோம். ஆனால் சம்மந்தபட்ட குற்றவாளி விடுதலை செய்யப்பட்டுள்ளது காவல்துறை நடவடிக்கை கண்துடைப்பாக அமைந்துள்ளதோ என எண்ண தோன்றுகிறது. எனவே உரிய சட்டத்தின் அடிப்படையில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்” என்று கூறியுள்ளனர்.

**-வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *