gமகாராஷ்டிரத்தில் விவசாயக் கடன் ரத்து!

public

உத்தரப்பிரதேசத்தை தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்திலும் விவசாயிகளின் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்துள்ளது அம்மாநில அரசு. மகாராஷ்டிர மாநில விவசாயிகள் கடந்த வருடமே பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், அதற்கு மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மறுத்துவிட்டார். இந்நிலையில் இந்த வருடமும் மகாராஷ்டிர மாநிலம் கடும் வறட்சியை சந்தித்தது. இதனால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதையடுத்துதான் விவசாயிகள் மத்தியில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

அரசியல் கட்சிகள் ஆதரவு

மேலும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகளும், அவர்களுடன் சேர்ந்து ஆளும்கூட்டணி கட்சியான சிவசேனாவும் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்யக் கோரிக்கை வைத்தன. ஆனால், பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய முதலமைச்சர் சம்மதிக்கவில்லை. அதற்குப் பதில், ‘விவசாயிகளை கடனற்றவர்களாக மாற்றுவோம்’ என்று முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார். பட்ஜெட்டிலும் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகவில்லை. இதைத் தொடர்ந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் சட்டசபையைப் புறக்கணித்தனர்.

இதையடுத்து, விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். ஆனால், மே மாத இறுதி வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. இது விவசாயிகள் மத்தியில் மிகுந்த அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் உண்டாக்கியது.

விவசாயிகள் போராட்டம்

இந்த நிலையில், பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயத்துக்கு இலவச மின்சாரம், விவசாயிகளுக்கு ஓய்வூதியம், பாலுக்குக் கூடுதல் கொள்முதல் விலை, வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு நியாயமான கொள்முதல் விலை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ‘கிஷான் கிராந்தி மோர்ச்சா’ என்ற விவசாயச் சங்கம் ஜூன் 1ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் செய்வோம் என அறிவித்தது.

இதுதொடர்பாக அந்தச் சங்கத்தைச் சேர்ந்த விவசாயப் பிரநிதிகளுடன் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இதையடுத்து, தேவேந்திர பட்னாவிஸ் விவசாயிகளின் காலவரையற்ற போராட்டத்தை ஒத்திவைக்கும்படி கேட்டுக்கொண்டார். எனினும், முதல்வர் கோரிக்கையை விவசாயிகள் நிராகரித்துவிட்டனர். இதையடுத்து விவசாயிகள் அறிவித்தபடி 1.6.2017 அன்று முதல் விவசாயிகள் தங்கள் காலவரையற்றப் போராட்டத்தைத் தொடங்கினார்கள்.

வன்முறை

மாநிலம் முழுவதும் சாலை மறியல் நடந்தது. அகமது நகர், ஷீரடி, பண்டர்பூர், அவுரங்காபாத், புனே உள்ளிட்ட பகுதிகளில் நகரப்புறங்களை நோக்கி சென்ற பால் வண்டிகளை மறித்து நிறுத்தினர். பாலை, சாலையில் திறந்துவிட்டு அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் சாலைகளில் பாலாறு பெருக்கெடுத்து ஓடியது. புனே, டாவுண்ட் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் விவசாயிகள் ஏற்றுமதிக்காக லாரிகளில் ஏற்றப்பட்டிருந்த காய்கறிகளையும், பழங்களையும் சாலையில் வீசி எறிந்தனர். பல இடங்களில் விவசாய உற்பத்திப் பொருள்கள் கால்நடைகளுக்குத் தீனியாக போடப்பட்டன. அகமதுநகர் மாவட்டம் கோபர்காவில் காய்கறி ஏற்றிவந்த லாரி ஒன்று தீ வைத்து கொளுத்தப்பட்டது.

அவுரங்காபாத்தில் காய்கறி சந்தையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பழ வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, வன்முறையாக மாறியது. பழ வியாபாரிகள் தாக்கியதில், கிஷான் கிராந்தி விவசாய அமைப்பின் தலைவர் சூர்யவன்ஷி உள்பட ஆறு பேர் காயமடைந்தனர்.

இதற்கிடையே முதலமைச்சரோடு நடந்த பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்பட்டதாகவும் அதனால் போராட்டம் கைவிடப்பட்டது என்றும் சில விவசாயிகள் ஜூன் நான்காம் தேதி அறிவித்தனர். ஆனால், இதை மற்ற விவசாயச் சங்கங்கள் ஏற்கவில்லை. இதையடுத்து அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டு போராட்டங்கள் தொடர்ந்தன.

அரசு அறிவிப்பு

இந்நிலையில்தான் இன்று (12.6.2017) மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை நேற்று (11.6.2017) ஏற்றது மகாராஷ்டிர அரசு.

சிறு மற்றும் குறு விவசாயிகள் வங்கிகளில் பெற்றுள்ள 30 ஆயிரம் கோடி மதிப்பிலான விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சில நிபந்தனைகளுக்குட்பட்டு மாநில அரசு இந்த முடிவெடுத்துள்ளதாக மாநில வருவாய்த்துறை அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார். மேற்கண்ட நிபந்தனைகள் குறித்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த தனிக்குழு அமைத்துள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். இதுதொடர்பாக கடன் தள்ளுபடிக்குக் குழு அமைக்கப்பட்டு வரைமுறைகள் உருவாக்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அரசின் அறிவிப்பை அடுத்து, இன்று நடைபெற இருந்த மாபெரும் போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விவசாயச் சங்கங்கள் தெரிவித்துள்ளன.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *