pகாவல்துறை உபகரணங்கள் டெண்டரில் முறைகேடா?

public

தமிழகக் காவல்துறைக்கு, கேமரா, சி.சி.டி.வி., டிஜிட்டல் மொபைல் ரேடியோ உள்ளிட்ட தகவல் தொடர்புக் கருவிகள் கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் ரூ.350 கோடி ஊழல் நடந்து இருப்பதாக திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

இதுதொடர்பாக கடந்த நவம்பர் 15ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், காவல்துறைக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் 350 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக உள்துறை செயலாளர் விசாரிக்க ஆணையிட்டும், இன்னும் லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறை எந்தவித விசாரணையும் நடத்தாமல் இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி, அதிமுக அரசு ஊழலை ஊறப்போடவும், விசாரணையை முடிந்தவரை தாமதப்படுத்தவும் வெட்கம் எதுவுமின்றி முயற்சி செய்கிறது என்பதை உணர்த்துகிறது என்றும் காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கிய வழக்கினை உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இதுபோன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், ஊழல் செய்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று கூடுதல் டிஜிபி அசோக்குமார் தாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக காவல் துறையில் தொழில்நுட்ப கருவிகள் ஆப்கோ மற்றும் டிஜிட்டல் மொபைல் ரேடியோ (டிஎம்ஆர்) திட்டங்களை அமல்படுத்துவதற்கான டெண்டர் செயல்முறைகளில் ரூ.350 கோடி முறைகேடுகள் நடந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழகத்தின் 10 மாவட்டங்களுக்கான (டிஎம்ஆர் திட்டங்களின் டெண்டர்கள் நடைமுறைகளை மீறி ‘வி லிங்க் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இதற்காக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் எந்த முறைகேடும் நடக்கவில்லை. இரண்டு நகரங்களில் ரூ.86.57 கோடிக்கு ஆப்கோ திட்டம் நிறைவடையும் நிலையில் உள்ளது. இத்திட்டம் ‘வி லிங்க் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட்’ மூலம் செயல் படுத்தப்படவில்லை. 10 மாவட்டங் களுக்கான டிஎம்ஆர் திட்டங்கள் மொத்தம் ரூ.57.49 கோடிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.3.49 கோடி மதிப்புள்ள ஒரு மாவட்டத்துக்கான டெண்டர் மட்டுமே இறுதி செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள மாவட்டங்களுக்கு டிஎம்ஆர் திட்ட டெண்டர்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. டிஎம்ஆர் மற்றும் ஆப்கோ திட்டங்களில் எந்த ஒரு ஒப்பந்ததாரருக்கும் இதுவரை எந்தத் தொகையும் வழங்கவில்லை.

தொழில்நுட்பக் கருவிகள் வாங்கும்போது தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. தொழில்நுட்பப் பிரிவின் மூத்த அதிகாரிகள் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில், தொழில்நுட்பப் பிரிவின் சில அலுவலர்கள் நடைமுறை தவறுகளில் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக டிஜிபி பரிந்துரையின் அடிப்படையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை விசாரணைக்கு முதல்வரால் உத்தரவிடப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் ஊழல் குற்றச்சாட்டுக்கு மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று பதில் அளித்துள்ளார். அவர், திமுக தலைவர் ஸ்டாலின், யாரோ எழுதிக் கொடுத்ததை படித்துக் கூட பார்க்காமல் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிடுகிறார். ரூ.57 கோடிக்குத்தான் டெண்டர் போடப்பட்டது. இதில் ரூ.350 கோடி ஊழல் நடந்திருப்பதாக ஸ்டாலின் சொல்கிறார். இந்த டெண்டர் கூட இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதுவரை யாருக்கும் எந்த தொகையும் வழங்கப்படவில்லை. தப்பு செய்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று ஸ்டாலின் குற்றம்சாட்டுகிறார். இது மக்கள் மத்தியில் எடுபடாது. வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற அவரது பாணியிலேயே அறிக்கை வெளியிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *