காவிரியில் தண்ணீர்: குறுவை சாகுபடிக்குத் தயாராகும் டெல்டா விவசாயிகள்!

public

காவிரியில் தண்ணீர் வரத்து எதிரொலியாக டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடிக்குத் தயாராகி வருகின்றனர்.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா குறுவை நெல் சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும். அதன்படி, கடந்த 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து விட்டார். அந்த தண்ணீரானது நேற்று முன்தினம் திருச்சி முக்கொம்பு மேலணையை வந்து சேர்ந்தது.

பின்னர் அங்கிருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு கல்லணை நோக்கி சென்றது. மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

காவிரியில் தண்ணீர் வரத்தின் காரணமாக டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை நெல் சாகுபடிக்கு ஆயத்தமாகி விட்டனர். ஏற்கனவே, சில இடங்களில் விவசாயிகள் நாற்றாங்கால் பராமரித்து நெல் விதைத்திருந்தனர். ஆனால், அவை தரமான விதையாக இல்லாததினால் முளைப்புத்திறன் இல்லாமல் போனது. இதனால், விவசாயிகளை வேதனைக்கு ஆளாக்கியது. கடந்த எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போதுதான் சரியான தருணத்தில் ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் குறுவை சாகுபடியை சவாலாக ஏற்று மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் விதை நெல்லுக்கு அரசால் மானியம் அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த மானியம் நிறுத்தப்பட்டு விட்டதாகவும், அதனால், விதை நெல்லை முழுத்தொகையும் கொடுத்து வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். அரசிடம் போதிய விதை நெல் இல்லை என்றும், எனவே, தனியாரிடமே விதை நெல் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது குறுவை சாகுபடிக்கு உயர் விளைச்சல் கொண்ட ரகங்களை வேளாண் அதிகாரிகள் பரிந்துரை செய்து வருகிறார்கள். ஆடுதுறை53 ரகமானது 100 முதல் 110 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய குறுகிய கால ரகம். காவிரி பாசனப்பகுதி மட்டுமல்லாது அனைத்து நெல் பயிரிடப்படும் பகுதிகளுக்கும் ஏற்ற ரகமாக கருதப்படுகிறது.

இதுபோல கோ51 ரகமும் அதிக மகசூல் தரக்கூடிய நெல் ரகமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் அம்பை16, ஏ.எஸ்.டி.20, ஏ.டி.டீ37, ஆடுதுறை37 (குண்டு நெல்) உள்ளிட்ட ரகங்களை பயிர் செய்யவும் விவசாயிகளிடையே ஆர்வம் உள்ளது. காவிரியில் தண்ணீர் வரத்து தொடங்கியதையொட்டி, விவசாயிகள் குறுவை நெல் சாகுபடிக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

**-ராஜ்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *