டெல்லியில் 150 நவீன மின்சார பேருந்துகள்!

public

டெல்லியின் போக்குவரத்து துறை 150 புதிய மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று புதிய குளிரூட்டப்பட்ட மின்சார பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார், மேலும் ஜூன் மாதத்தில் டெல்லி சாலைகளில் மேலும் 150 இயக்கப்படும் என்று அறிவித்தார். அடுத்த ஆண்டுக்குள் டெல்லியில் 2,000 மின்சார பேருந்துகளை இயக்குவதே இறுதி இலக்கு என்றும் கெஜ்ரிவால் கூறினார். இந்த புதிய மின்சார பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள், பேனிக் பட்டன்கள் மற்றும் ஜிபிஎஸ் டிராக்கிங் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில், “மாசுக்கு எதிரான போராட்டத்தில் டெல்லி இன்று புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது. இன்று முதல் 150 மின்சார ஏசி பேருந்துகள் டெல்லி சாலைகளில் ஓடத் தொடங்கியுள்ளன. பேருந்தில் நானும் பயணித்தேன், இது அனைத்து நவீன வசதிகளையும் கொண்டுள்ளது.” என்று பதிவிட்டுள்ளார். மேலும், டெல்லி சாலைகளில் செல்லும் மின்சார பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு வசதியாக, நகரம் முழுவதும் அதிக மின்சார சார்ஜிங் டிப்போக்களை உருவாக்க அரசு முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

டெல்லி மாநில அரசு அடுத்த 10 ஆண்டுகளில் மொத்தம் 1,862 கோடி ரூபாயில் மின்சார பேருந்துகளை வாங்குவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசிடம் இருந்து 150 கோடி ரூபாய் முதலீடு வாங்க திட்டமிட்டுள்ளதாக டெல்லி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், “இதுவரை, டெல்லியில் அதிக எண்ணிக்கையிலான மின்சார பேருந்துகள் இப்போதுதான் இயங்குகிறது. மின்சார பேருந்துகள் இன்னும் கணிசமான அளவில் தயாரிக்கப்படவில்லை. மேலும் சுமார் 600 அல்லது 700 புதிய சிஎன்ஜி பேருந்துகளைச் சேர்க்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. டெல்லியின் பேருந்து போக்குவரத்து வலையமைப்பை 100 சதவீதம் மின்சாரமாக மாற்றும் இறுதிக் குறிக்கோளுடன், கொள்கையில், இனி வரும் அனைத்து புதிய பேருந்துகளும் மின்சாரத்தில் மட்டுமே இருக்கும்.” என்று தெரிவித்தார்.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *