hசென்னை: நடை மேடையில் ஏறி ரயில் விபத்து!

public

சென்னையில் மின்சார ரயில் நடை மேடை மீது ஏறி விபத்துக்குள்ளான சம்பவம் ரயில் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் காரணமாகப் பெரும்பாலானோர் மின்சார ரயில் பயணத்தை விரும்புவார்கள். குறிப்பாகத் தாம்பரத்திலிருந்து சென்னை நகரத்திற்குள் வேலை செய்ய வருபவர்கள் ரயிலில் தான் அதிகம் பயணம் மேற்கொள்வார்கள்.

இந்த சூழலில் ரயில்வே பணிமனையிலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு மின்சார ரயில் ஒன்று இன்று மாலை 4.25 சென்று கொண்டிருந்தது.

இது கடற்கரையிலிருந்து தாம்பரம் நோக்கி இயக்ககூடிய ரயில் ஆகும். இந்த ரயில் கடற்கரை ரயில் நிலையத்திற்கு சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்திலிருந்து நடைமேடை மீது ஏறி விபத்தில் சிக்கியது.

இதனால் ரயில் நிலையத்தின் ஒன்றாம் நடைமேடையின் மேல் அமைக்கப்பட்டிருந்த கடைகள் சேதமடைந்தன. அதுபோன்று ஒன்றாம் நடைமேடையின் தரைதளமும் சேதமடைந்தது.

நல்வாய்ப்பாக இந்த ரயிலில் பயணிகள் யாரும் பயணிக்காததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. அதுபோன்று ரயில் ஓட்டுநருக்கும் லேசான காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது.

“இந்த ரயில் விபத்துக்குள்ளான போது பயங்கர சத்தம் கேட்டது. இதற்கு முன் இதுபோன்று மின்சார ரயில்கள் நடைமேடை மீது ஏறி விபத்துக்குள்ளானது இல்லை” என்று நடைமேடையில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் கூறுகின்றனர்.

மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படையினர் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்டமாக ரயிலில் பிரேக் இல்லாதது தான் விபத்துக்குக் காரணம் என்று ரயில்வே போலீசார் கூறுகின்றனர். மேலும் விபத்துக்குள்ளான ரயில் பெட்டியைக் கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ரயிலை லோகோ பைலட் ஷங்கர் இயக்கி வந்ததாகவும், இந்த சம்பவத்தின்போது வண்டியில் பயணிகள் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை என்றும் தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது. விபத்தின் போது ஓட்டுநர் கீழே குதித்து தப்பியதாகவும் கூறியுள்ளது.

அதுபோன்று சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் ரயில்வே போலீசார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ரயில் விபத்து குறித்து ஆய்வு செய்தோம். முதலில் யாராவது இறந்திருக்கிறார்களா என்று பார்த்தோம். பயணிகள் யாரும் இல்லை என்பதால் காயங்களோ உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை. ஓட்டுநரும் பாதுகாப்பாக உள்ளார்.

ரயிலுக்கு முன்பாக கட்டிடம் இருந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. பிரேக் பிடிக்காததா அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவு விபத்துக்கு காரணமா என ஓட்டுநரிடம் தான் விசாரிக்க வேண்டும். யார்டில் இருந்து இந்த வண்டி வந்துள்ளது. தொழில்நுட்ப அதிகாரிகள் வந்து கொண்டிருக்கிறார்கள்” என்றனர்.

இரண்டு பெட்டிகள் நடைமேடை மீது ஏறியுள்ளதால், ராட்சத இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *