கன்னியாகுமரியில் கடல் சீற்றம்: கடலில் குளிக்க தடை

public

கன்னியாகுமரியில், நேற்று இரவு முதல் திடீரென்று கடல் சீற்றமாக காணப்பட்டது. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு கடல் அலை எழுந்தது. நடுக்கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த இந்த அலைகள் கரையை நோக்கி ஆக்ரோ‌ஷமாக வந்து கரையில் உள்ள பாறைகளில் வேகமாக மோதி சிதறியது. கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் இதைப் பார்த்து கடலில் இறங்கி கால் நனைக்க அச்சப்பட்டனர்.

இந்த ராட்சத அலைகளால் சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதை கண்காணிக்க ரோந்து பணியில் அதிக போலீசார் ஈடுபட்டனர். ஏற்கனவே கடலில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தவர்களை வெளியேற்றினர். அமாவாசை மற்றும் பவுர்ணமி போன்ற முக்கியமான நாட்களில் கன்னியாகுமரி கடலில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு, கடல் உள்வாங்குவது, கடல் நீர் மட்டம் தாழ்வு, கடல் நீர் மட்டம் உயர்வு போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு கன்னியாகுமரி கடலில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல கோவளம், சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், வாவத்துறை, கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம், சொத்தவிளை, வட்டக்கோட்டை பீச், ராஜாக்கமங்கலம் துறை போன்ற இடங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.

இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் மீன்பிடித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறைந்த அளவு கட்டுமரங்களில் மட்டுமே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று மீன்கள் அதிகளவில் கிடைக்காமல் அவசரமாக கரைக்கு திரும்பினர். இதனால் மீன் சந்தைகளில் மீன் வரத்து குறைவாக காணப்பட்டு மீன்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *