கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே அனைத்து மத ஆலயங்களையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அரசின் அனுமதி அட்டையோடு அர்ச்சகர்கள் கோயிலுக்குச் சென்று தினசரி பூஜைகளை செய்துவந்தனர்.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலுக்கு மார்ச் 31ஆம் தேதி உள்ளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், அவரது நண்பருடன் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது, அவர்களை தடுத்த கோயில் பாதுகாவலர் சரவணன், ‘பூஜைக்கு மட்டுமே அனுமதி, தரிசனத்திற்கு அனுமதியில்லை’ என்று சொல்லியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர், சரவணனை தாக்கிவிட்டு சாமி தரிசனம் செய்து சென்றார்.
இதுதொடர்பாக திருக்கோயில் முதுநிலை பணியாளர்கள் சங்கத் தலைவர் ஷாஜியுடைய விரிவான பேட்டியுடன் [திருத்தணி தரிசனம்: தடுத்த பாதுகாவலரை தாக்கிய இன்ஸ்பெக்டர்!](https://minnambalam.com/politics/2020/04/02/78/thiruthani-temple-inspector-beaten-secucurity) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என ஷாஜி தெரிவித்திருந்ததையும் கூறியிருந்தோம்.
இந்த நிலையில் நமது செய்தியின் வெளிப்பாடாக திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுபற்றி திருக்கோவில் பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஷாஜி ராவ் நம்மிடம் கூறுகையில், “எங்களது கோரிக்கையை செய்தியாக வெளியிட்ட மின்னம்பலத்திற்கும், இன்ஸ்பெக்டரை இடமாற்றம் செய்த காவல் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். போராட்டத்திற்காக எடுத்திருந்த முடிவையும் கைவிடுகிறோம்” என்று தெரிவித்தார்.
**எழில்**�,