dபைக் ரேஸ்: இளைஞருக்கு கிடைத்த தண்டனை!

public

பைக் ரேஸில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட இளைஞருக்கு ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் வார்டு பாய் உதவியாளராக ஒரு மாதம் பணியாற்ற வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டை கார்நேசன் நகரை சேர்ந்தவர் பிரவீன்(21). இவர் கடந்த மார்ச் 20 ஆம் தேதி சென்னை ஸ்டான்லி மருத்துமனை ரவுண்டானாவில் இருந்து மூலகொத்தளம் நோக்கி நண்பர்களுடன் பைக் ரேஸ் சென்றுள்ளார். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சார்லஸ் என்பவர் வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரவீன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர். இந்த நிலையில், தனக்கு ஜாமீன் வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரவீன் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று(மார்ச் 31) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அஜித்குமார் என்பவரது பைக்கில் பின்னால் அமர்ந்துதான் பிரவீன் பயணித்தார். இதில் அவர் எந்தவிதமான குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை என்று வாதிட்டார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிரவீன் பைக் ரேசில் ஈடுபட்டதற்கான சாட்சிகள் இருந்ததாலேயே கைது நடவடிக்கை எடுத்ததாகவும், பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் பீதியை ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், சாலையில் செல்லும் மூத்த குடிமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவதாக வேதனை தெரிவித்தார். பைக்கின் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள், இரும்பு கம்பிகளை சாலையில் தேய்த்து தீப்பொறி ஏற்படுத்தி மிரட்டும் தொணியில் செயல்படுகின்றனர் என்றும் கூறினார்.

இதையடுத்து பிரவீனுக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதி, நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், வாகன விபத்துகளால் மக்கள் எந்த அளவு பாதிப்பை சந்திக்கின்றனர் என்பதனை உணர்த்துவதற்காக, பிரவீனை ஒரு மாதம் ஸ்டான்லி மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் காலை 8.30 மணி முதல் காலை 12 மணி வரை வார்டு பாய் உதவியாளராக பணியாற்ற உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பணியின்போது தனக்கு கிடைத்த அனுபவத்தை அறிக்கையாக மருத்துவமனை டீனிடம் சமர்பிக்க கொடுக்க வேண்டும். இறுதியில் அந்த அறிக்கைகளை மொத்தமாக தொகுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த 10 நாட்களில் மட்டும் பைக் ரேஸில் ஈடுபட்டதாக 2 சிறுவர்கள் உட்பட 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *