xஎலக்ட்ரிக் பைக் : திருச்சியிலும் தீ விபத்து!

public

வேலூரைத் தொடர்ந்து திருச்சியிலும் எலக்ட்ரிக் பைக் தீ பிடித்து எரிந்த சம்பவம் எலக்ட்ரிக் பைக் பிரியர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரத்தில் வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரத்தில் துரை வர்மா என்பவர் இரவில், தன்னுடைய எலக்ட்ரிக் பைக்கிற்கு சார்ஜ் போட்டுவிட்டு தூங்க சென்றுவிட்டார். சார்ஜில் இருந்த பைக் திடீரென வெடித்து தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் வீடு முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. கரும்புகை நச்சு புகையாக மாறி சுவாசிக்க முடியாமல் துரை வர்மாவும், அவரது மகள் பீரித்தியும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தையடுத்து எலக்ட்ரிக் வாகனங்கள் சந்தைக்கு வரும் முன்பே அதனுடைய தரம் குறித்து அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், இதேபோன்ற சம்பவம் திருச்சியிலும் நடந்துள்ளது.

திருச்சி மாவட்டம், படுகைகளம் பகுதியை சேர்ந்தவர் முருகேஷ் (27). நேற்று தனது எலக்ட்ரிக் பைக்கில் மணப்பாறைக்கு சென்ற இவர், ஆஞ்சநேயர் பகுதியில் உள்ள ஒரு கடையில் தனது பைக்கை நிறுத்தி விட்டு சென்று விட்டார்.

இந்த நிலையில் இன்று காலை கடையை திறந்ததும் கடைக்காரர் எலக்ட்ரிக் பைக்கை எடுத்து வெளியே நிறுத்தினார். அப்போது, பேட்டரி பகுதியில் இருந்து புகை கிளம்பியவுடன், தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சித்தனர். இருப்பினும் சிறிது நேரத்தில் பைக் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதுபோன்று, மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலும், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக் தீப்பற்றி எரிந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் 5 ஆண்டுகளில் 20க்கும் அதிகமான நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. 2021ஆண்டில் மட்டும் சுமார் 3.13 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *