5எங்கெங்கும் அரோகரா!

public

பங்குனி உத்திர திருவிழா தமிழ்நாட்டில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். பங்குனி உத்திர நட்சத்திரம் பொதுவாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் வரும். பங்குனி மாதம் ஒரு புனிதம் நிறைந்த மாதமாக அனுசரிக்கப்படுவதால், இந்த மாதத்தில் பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அதன்படி இந்தாண்டு பங்குனி உத்திர திருவிழா இன்று மார்ச் 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இத்திருவிழா மார்ச் 18 அன்று அதிகாலை 12.34 மணிக்குத் தொடங்கி, மார்ச் 19 அன்று அதிகாலை 12.18 மணியோடு முடிவடையும். கோடைக் காலத்தின் தொடக்கவிழாவான பங்குனி உத்திரத்தில் பக்தர்கள் தீர்த்தக்காவடி, பால் காவடி ஆகியவற்றை செய்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவர்.

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக களையிழந்து காணப்பட்ட பங்குனி உத்திர திருவிழா இன்று தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

**பழனி முருகன் கோயில்**

பழனியில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் முக்கியமானவை தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத் திருவிழா. உத்திரத் திருவிழாவில் நடைபெறும் தேரோட்டத்தை காண தமிழகத்திலிருந்து பல்வேறு பகுதியிலிருந்து மக்கள் வருகை தருவார்கள்.

பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்திருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய விழாவான திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. திருஆவினன்குடி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் அருள்மிகு முத்துக்குமாரசாமி- வள்ளி, தெய்வானைக்கு திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

பங்குனி உத்திர திருவிழாவான இன்று கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். மலையடிவாரத்தில் பக்தர்கள் தீர்த்த குடங்களையும், காவடிகளையும் சுமந்தபடி ஆடி, பாடி விழாவை கொண்டாடி வருகின்றனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று மாலை நான்கு மணிக்கு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு பாதுகாப்புக்காக 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

**திருச்செந்தூர் சுப்பிரமணியன் கோயில்**

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியன் கோயிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

கோயிலுக்கு நேற்று முதலே பக்தர்கள் வந்து கொண்டிருப்பதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடலில் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்தனர். ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கும் அதிகமாக பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். தரிசனம் செய்ய ஐந்தாறு மணி நேரமாவதாக பக்தர்கள் கூறி வருகின்றனர்.

இன்று மாலை மேலக் கோயில் பந்தல் மண்டபத்தில் சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் திருகல்யாணம் நடைபெறவுள்ளது.

உளுந்தூர்பேட்டை சுப்பிரமணிய சாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு 1008 காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் வழிபட்டனர்.
இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *