dமகளிர் தினம்: ஒருநாள் போலீஸ் ஆன மாணவி!

public

நாடு முழுவதும் இன்று மார்ச் 8 மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் உள்பட அனைத்து தலைவர்களும் மகளிர் தின வாழ்த்துகளை கூறி வருகின்றனர். மாவட்ட அளவில் போட்டிகள் வைத்து மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மகளிர் தினத்தை முன்னிட்டு ஒடிசாவின் பூரி கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் மணற்சிற்பம் வடிவமைத்துள்ளார். இதை அங்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். அதுபோன்று, கூகுள் நிறுவனம் பெண்களை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு ‘டூடுல்’ ஒன்றை வெளியிட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறியிருக்கிறார்கள் என்பதை குறிக்கும் வகையில் பல்வேறு கலாச்சாரத்தைச் சேர்ந்த பெண்கள் குறித்த அனிமேஷன் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.

மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் இலவசமாக பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரி பாரதிதாசன் அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி நிவேதாவை, ஒரு நாள் காவல் அதிகாரியாக நியமித்து புதுச்சேரி காவல்துறை சிறப்பித்துள்ளது.

என்சிசி உடையணிந்து முத்தியால்பேட்டை காவல்நிலையத்துக்கு வந்த மாணவி நிவேதாவை காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் பூங்கொத்து அளித்து வரவேற்றார். பின்பு, ஒருநாள் காவல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட நிவேதாவை காவல் அதிகாரி இருக்கையில் அமர வைத்தனர். பின்பு, ரோல் காலில் பங்கேற்று இன்றைய காவல்துறை பணிகள் என்ன என்பதை தெரிந்துகொண்டார். காவல் நிலையத்தில் உள்ள அறைகளை பார்வையிட்டு, ஆவணங்களையும் ஆய்வு செய்தார். காவல்துறை வாகனத்தில் ஏறி புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல்நிலையதிற்குட்பட்ட முக்கிய சந்திப்புகளில் உள்ள போக்குவரத்து நெரிசலை சரி செய்தார். பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை விசாரித்து நடவடிக்கை மேற்கொண்டார்.

மகளிர் தினத்தன்று தன்னை ஒருநாள் போலீஸ் அதிகாரியாக நியமித்த புதுச்சேரி காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்த மாணவி நிவேதா, இன்று முழுவதும் போலீஸ் ஆக பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார்.

**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *