கொரோனா-அலட்சியம் : சுகாதார செயலாளர் எச்சரிக்கை!

public

கொரோனா தொற்று குறைந்துவிட்டது என்று அலட்சியமாக இருக்கக் கூடாது என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பை இன்று(பிப்ரவரி 15) சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. தினசரி பாதிப்பு 2 ஆயிரத்துக்குள் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தொற்று எண்ணிக்கை தானாக உயர்ந்து, தானாக குறையவில்லை. அரசின் நடவடிக்கைகள் மற்றும் மக்களின் ஒத்துழைப்பு போன்றவற்றால்தான் தொற்று குறைந்துள்ளது. தொடர்ந்து மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

நாளொன்றுக்கு புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்வது சவாலாக உள்ளது. அதனால், கொரோனா பரிசோதனை முறையில் மாற்றம் கொண்டு வர பொது சுகாதாரத்துறை இயக்குநர் மற்றும் வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து வருகிறோம்.
முதலில் நோய்த் தொற்று உள்ளவர்கள், உடனிருப்பவர்கள், தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இனிவரும் காலங்களில், அறிகுறி உள்ளவர்கள் அனைவரும், எந்த இடத்தில் இருந்தாலும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதேபோன்று, சுவாசப் பிரச்சினை என்று யார் வந்தாலும், கொரோனா பரிசோதனை மருத்துவமனையாக இல்லாதபட்சத்திலும் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் கூட்டமாக வரும் இடங்களான மார்க்கெட், பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் இலவச பரிசோதனைகளை அதிகரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வரும் காலங்களில், உலக அளவில் கொரோனா கட்டுப்பாடுகளில் அதிகமான தளர்வுகள் அறிவிக்கப்படும் சூழல்தான் உள்ளது. அதனால், பொதுமக்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது இன்னும் அவசியமாகிறது. இரண்டாவது அலையில் மிகப்பெரிய தாக்கம் இருந்த போதிலும், டெல்டாவும், ஒமிக்ரானும் இருந்தபோதிலும், மூன்றாவது அலையில் இறப்பு விகிதம் பத்து மடங்கு குறைந்துள்ளது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ மற்றொரு முக்கியமான வேண்டுகோள். அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இரண்டாவது அலையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இது தடுப்பூசியால்தான் சாத்தியமானது. இன்னும் 1.13 கோடி மக்கள் இரண்டாவது தவணையை செலுத்திக் கொள்ளவில்லை. நோய்த்தொற்று குறைவாக உள்ளது என்று கவனக்குறைவாக இருக்க வேண்டாம். கர்ப்பிணி தாய்மார்கள் 6.37 லட்சம் பேரும், பாலூட்டும் தாய்மார்கள் 5.05 லட்சம் பேரும், மாற்றுத்திறனாளிகள் 3.74 லட்சம் பேரும் எப்படி தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டார்களோ, அதுபோன்று, அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டால், சமுதாயத்தில் நல்ல ஒரு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். தமிழகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி 87 சதவிகிதமாக உள்ளது. மீதமுள்ள 13 சதவிகித மக்கள் தங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்பதை உணர வேண்டும். மருத்துவ வல்லுநர்களின் கருத்துப்படி அவர்களுக்குத்தான் நோய் பரவக்கூடும். ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு வந்தாலும், தொற்று பாதிப்பு சிக்கலானதாக இல்லை. அதனால், மக்கள் தயவுகூர்ந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து நோய் எண்ணிக்கை குறைந்து வருவதால், கோவிட் கேர் சென்டர்களில் அடுத்த 15 நாட்களில் ஆய்வு செய்து தேவைக்கேற்ப பணியாளர் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும். அதில் உள்ள ஊழியர்கள் வேறு பணிக்கு மாற்ற நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *