திருப்பூர் நபரை கடுமையாக தாக்கிய சிறுத்தை சிக்குமா?

public

அவிநாசி அருகே சோளக்காட்டுக்குள் இருந்து தப்பி, திருப்பூருக்குள் நுழைந்த சிறுத்தை மேலும் ஒருவரை கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி என்ற கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் 13 நாட்களுக்கு முன்பு சுற்றித் திரிந்த சிறுத்தை ஒன்று எங்கு போவதென்று தெரியாமல் அவிநாசி பகுதிக்குள் புகுந்தது. சிறுத்தை நடமாட்டம் இருக்கிறது என்று ஆங்காங்கே இருந்து தகவல் மட்டுமே வந்தது தவிர, யாரும் நேரில் பார்த்ததாக கூறவில்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் ஒரு நாய் காணாமல் போவது தொடர்ந்து வந்துள்ளது. அதன்பிறகுதான், நாய் காணாமல்போன இடங்களிலெல்லாம் சிறுத்தை இருந்திருக்கலாம் என்று வனத் துறையினர் தேடி வந்தனர்.

இதையடுத்து, கடந்த 24ஆம் தேதி அவிநாசி அருகே பாப்பாங்குளம் சோளக் காட்டில் பதுங்கி இருந்த சிறுத்தை இரண்டு விவசாயிகள், வனத் துறை ஊழியர் உள்பட 5 பேரை தாக்கியது. சோளக்காட்டை சுற்றி வலை விரித்தும், மூன்று கூண்டுகளை அமைத்தும் சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

அங்கிருந்து வனத் துறையினரிடம் இருந்து தப்பிய சிறுத்தை ஊர்பகுதிகளுக்குள் சுற்றி வந்து கொண்டிருந்தது. நேற்று இரவு திருப்பூர் அருகே பாப்பாங்குளத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெருமாநல்லூர் அருகே சிறுத்தை சாலையை கடந்து செல்வதை அந்த வழியாக காரில் சென்றவர்கள் பார்த்து, அவிநாசி நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற வனத் துறையினர், அதன் காலடித்தடம் மற்றும் எச்சங்களை வைத்து, அது சோளக்காட்டுக்குள் இருந்து தப்பிய சிறுத்தைதான் என்பதை உறுதி செய்தனர்.

தொடர்ந்து, பொங்குபாளையம், கிருஷ்ணா நகர், எஸ்.பி.கே நகர், கோனக்காடு, எட்டம்மபெரிச்சங்காடு, தட்டாங்காடு உள்ளிட்ட பகுதிகளில், சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறிய 20 மோஷன் சென்சார் வகை கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு பணி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இன்று காலை திருப்பூர் நகர எல்லையான அம்மாபாளையம் பகுதிக்குள் புகுந்த சிறுத்தை கழிவுகள் கொட்டப்படும் கிடங்கில் வேலை செய்து கொண்டிருந்த ராஜேந்திரன் என்பவரை தாக்கியது. இதனால் தலை, கை, பின்பக்க இடுப்பு பகுதியில் காயமுற்ற ராஜேந்திரன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து வனத் துறையினர் கூறுகையில், “சிறுத்தையின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் பாப்பான்குளத்தில் இருந்து பொங்குபாளையத்துக்கு 25 கி.மீ. தூரம் பயணித்துள்ளது. இரவில் நடமாடுவதால், எளிதாக யாரும் கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து தேடி வருகிறோம். ஏற்கனவே இப்பகுதியில் பல மாதங்களாக தங்கியிருந்து, வாழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம். தொடர்ந்து பொங்குபாளையம் பகுதியில் 20 கேமராக்களை பொருத்தி தொடர்ந்து கண்காணிக்கிறோம். பாப்பான்குளத்திலும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்று தெரிவித்தனர்.

கிட்டதட்ட 300க்கும் மேற்பட்ட வனத் துறையினர், போலீசார் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்குள்ளாக, திருப்பூர் அம்மாபாளையத்தில் பனியன் நிறுவன குடோனில் புகுந்த சிறுத்தை தப்பியது என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதனால், திருப்பூர் நகர மக்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இதுவரை 6 பேரை சிறுத்தை தாக்கியுள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் டி23 புலி, இந்த மாத தொடக்கத்தில் கோவையில் சிறுத்தை ஒன்றும் பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு பிடிபட்ட நிலையில், திருப்பூரில் சுற்றி வரும் சிறுத்தை வனத் துறையினருக்கு போக்குக் காட்டி ஒவ்வொரு இடத்திலிருந்தும் தப்பி மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்ந்து வருகிறது.

**-வினிதா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *