பல்லாவரம் காவல் நிலையத்தில் 12 பேருக்கு கொரோனா!

public

சென்னை பல்லாவரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் 12 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 15,379 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 17 ஆயிரத்து 686 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னையில்தான் அதிகமானோர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். சென்னையில் கல்லூரி, விடுதி மாணவர்கள், வணிக வளாகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகிய இடங்களில் கொத்து கொத்தாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்தநிலையில் பல்லாவரம் காவல் நிலையத்தில் சில போலீசாருக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்ததால் காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் உட்பட 12 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் காவல்நிலையம் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இரண்டு போலீசார் கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மற்றவர்கள் வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டனர்.

கொரோனா தடுப்பு பணியில் முன்கள பணியாளர்களாக பணியாற்றி வரும் போலீசாரும் அதிகளவில் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முதல் மற்றும் இரண்டாம் கொரோனா அலைகளில் 8 ஆயிரத்து 30 காவலர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 143 காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போதைய மூன்றாவது அலையில் மாநிலம் முழுவதும் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 346 காவலர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் இதுவரை 70 காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *