/தீவிரமடையும் மழை!

public

தமிழ்நாட்டில் அடுத்து வரும் மூன்று நாட்கள் மழை தீவிரமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழைபெய்து வருகிறது. குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, தென்காசி,சென்னை,தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் அதீத கனமழை பெய்து வருகிறது.

தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நேற்று மதியம் முதலே கனமழை பெய்து வருகிறது.

**தூத்துக்குடி**

இந்த ஆண்டுக்கான அதிகபட்ச மழை அளவு தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. குறிப்பாக காயல்பட்டினத்தில் 24 மணி நேரத்தில் 306 மி.மீ. மழை பெய்துள்ளது. இதுவரை பெய்யாத மழை அளவு இதுவாகும். தூத்துக்குடி மாநகர் பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன. கனமழை காரணமாக திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய கோயிலுக்குள் முதன்முறையாக வெள்ளநீர் புகுந்தது.அதுபோன்று நாகையில் சுனாமி குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், தீவு போன்று காட்சியளிக்கிறது.

**நெல்லை**

நெல்லையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. மணிமுத்தாறு அணைக்கு 14 ஆயிரம் கன அடி நீர்வரத்து உள்ளது. இன்று ஒரேநாளில் நீர்மட்டம் 5 அடியாக உயர்ந்துள்ளது.

**மதுரை**

மதுரையில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருவதால், மதுரை சாலைகளில் முழங்கால் அளவு மழைநீர் தேங்கி நிற்கிறது. மழையினால் பெரியாறு அணைக்கு வினாடிக்கு 3623 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 2300 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. அதுபோன்று வைகை அணைக்கு வினாடிக்கு 4435 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 5915 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

**சிவகங்கை**

சிவகங்கை மாவட்டத்தில் ,காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காற்று மற்றும் இடியுடன் மழை பெய்தது. இளையான்குடி அருகே கண்மாய் நிரம்பி உடைந்ததால் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் குடியிருப்பு பகுதிகள் கடல் போல் காட்சியளிக்கிறது. விருதுநகர் மாவட்டத்திலும் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னையிலும் பலத்த மழை பெய்து வருகிறது. ஆலந்தூர், பெருங்குடி, தரமணி, மீனம்பாக்கம், பரங்கிமலை, ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர், மணலி ராயபுரம், திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம் , கோடம்பாக்கம், கோயம்பேடு, மதுரவாயல், வேளச்சேரி, பள்ளிக்கரணை, குரோம்பேட்டை, அசோக்நகர், சூளைமேடு, வண்டலுர், கூடுவாஞ்சேரி, வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர், பெரம்பூர், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை 27 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

இதனால் மீண்டும் சென்னை சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தண்ணீரை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன்,”தமிழ்நாட்டில் அடுத்து வரும் மூன்று நாட்களும் மழை தீவிரமாக இருக்கும். தமிழ்நாடு கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அதே போல் கடலோர மாவட்டங்களை ஒட்டிய உள் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மேலும், நவம்பர் 29ஆம் தேதி தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, நாளை திருவாரூர், தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை,நாகை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *