சிறப்புத் தொடர்- ஐரோப்பாவில் சமூக நீதிக்கான எழுச்சி!

public

ஐரோப்பாவில் கொள்ளை நோய் – 6

முனைவர் க.சுபாஷிணி

இன்றைய நிலையில் ஐரோப்பிய நாடுகளின் மொத்த கவனமும் கடும் வீழ்ச்சிக்கண்ட பொருளாதாரத்தை விரைவாகக் கட்டி எழுப்ப வேண்டும் என்பதில் இருக்கிறது என்பதைத்தான் கடந்த சில நாட்களின் செய்திகள் வலியுறுத்துகின்றன. கொரோனா கொள்ளை நோய்த் தொற்று பரவல் என்பது கட்டுப்பாட்டுக்குள் வந்து, குறைந்து வருவதைக் கடந்த சில தினங்களின் அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. பெரும் உயிரிழப்பை ஏப்ரல் மாதம் அனுபவித்த ஸ்பெயினில் இப்போது தினசரி இறப்பு எண்ணிக்கை பூஜ்யமாகி இருக்கிறது.

ஜெர்மனியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரு நாளில் இறந்தனர் என்ற நிலை மாறி, கடந்த சில நாட்களாக சராசரி எண்ணிக்கை ஆறு என்ற வகையில் இருக்கிறது. இதைக் கருத்தில்கொண்டு சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையில் ஐரோப்பிய நாடுகள் திட்டங்களை வெளியிட ஆரம்பித்துள்ளன.

ஜூன் 3ஆம் தேதி இத்தாலி, சுற்றுலாத் துறையை ஆதரிக்கும் வகையில் விமானப் போக்குவரத்துச் சேவைக்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. இங்கிலாந்தும் இதேபோல நடவடிக்கை மேற்கொண்டது என்றாலும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் யாராக இருந்தாலும் 14 நாட்கள் வீட்டுப் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்தது. இதை ரெயின் ஏர், ஈசி ஜெட், பிரிட்டிஷ் ஏர் ஆகிய விமானச் சேவை நிறுவனங்கள் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கின்றன. இவ்வகை கட்டுப்பாடுகள் எவ்வகையிலும் தங்களின் சேவைக்கு உதவாது என்றும் இங்கிலாந்து அரசு இந்தக் கட்டுப்பாட்டை உடனே நீக்க வேண்டும் என்றும் இவை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் ஜூலை 1ஆம் தேதி முதல் உலக நாடுகளுக்கானப் போக்குவரத்து எல்லையை ஐரோப்பிய ஒன்றியம் திறக்க முடிவெடுத்துள்ளது. இது படிப்படியான நடவடிக்கையாகவே இருக்கும் என்றும், கொரோனா தொற்றுப் பரவல் நிலையைப் பார்த்து ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றும் தெரிகிறது.

இந்தச் சூழ்நிலையில் மே மாதம் 25ஆம் தேதி அமெரிக்காவின் மினியாப்போலிஸ் மாநிலத்தில் காவல் துறை அதிகாரி ஒருவரின் கொடுஞ்செயலினால் கொலை செய்யப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாயிட், இன்று உலகம் முழுவதும் இனவாத சிந்தனைக்கு எதிரான குரல் ஓங்கி ஒலிப்பதற்குக் காரணமாகியிருக்கிறார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர் ஜார்ஜ் ஃப்ளாயிட். மினியாப்போலிஸ் நகரில் கறுப்பர் என்ற இனவாத அடிப்படையில் அவர் கொலைக்கு ஒரு காவல் துறை அதிகாரி காரணமாகியிருப்பது அமெரிக்கா முழுவதும் காவல் துறையின் செயல்பாடுகளை அவசரமாக அரசு மீளாய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மிக அழுத்தமாக முன்வைக்க காரணமாகியிருக்கிறது.

உலகின் வேறொரு பகுதியில் அநீதி இழைக்கப்பட்டாலும் அதற்குக் குரல் கொடுப்போம் என்று ஜெர்மனியிலும் மக்கள் இனவாதத்துக்கு எதிரான தங்கள் குரல்களைக் கடந்த சில நாட்களாக மிகப்பெரும் அளவில் உள்நாட்டில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஜெர்மனியின் பெரு நகரங்களான பெர்லின், ஸ்டுட்கார்ட், மியூனிக், ஹாம்பர்க், லைப்சிக் போன்ற பல்வேறு நகரங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு எனக் கடந்த மூன்று நாட்களும் மிகப்பெரிய அளவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடிய அளவில் இனவாதத்துக்கு எதிரான பொதுமக்கள் பேரணி நடைபெற்றது.

கொரோனா பேரிடர் கால முடக்கம் இருக்கிற சூழலிலும் இந்தப் பேரணி இனவாத சிந்தனைகளுக்கு எதிராக மக்களின் சிந்தனையில் எழுந்துள்ள கடும் கோபத்தை வெளிப்படுத்துவது என்ற நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டது.

ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணம் ஏற்படுத்தியிருக்கும் சலனம் ஐரோப்பாவில், குறிப்பாக ஜெர்மனியிலும் இனவாத சிந்தனை தெரிந்தும் தெரியாமலும் பல்வேறு வகையில் ஊடுருவி இருப்பதை மக்கள் வெளிப்படையாக இப்போது பேச வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளது. இந்தப் பேரணிகள் ஒட்டுமொத்த ஐரோப்பாவிலும் வெள்ளையரின் நிற அடிப்படையிலான சிந்தனைப்போக்கு பற்றிய கருத்துகளுக்கு மீளாய்வு செய்ய ஒரு வழி அமைத்துக் கொடுத்திருக்கிறது.

ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணம் ஐரோப்பிய நாடுகளில் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இனவாதத்துக்கு எதிரான குரலின் தொடர்ச்சியாக பெல்ஜியம் நாட்டில் கி.பி 19ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னர் இரண்டாம் லியோபர்ட்டின் சிலையைப் பொதுமக்கள் அவமானப்படுத்தி நீக்கியுள்ளனர். பெல்ஜியம் வரலாற்றில் நீண்ட காலம், அதாவது 1865இல் இருந்து 1909 வரை ஆட்சி செய்த மாமன்னர் இவர். அண்ட்வெர்ப் நகரிலும் கெண்ட் நகரிலும் உள்ள இவரது பிரமாண்டமான சிலைகளைப் பொதுமக்கள் அவமானப்படுத்தி தகர்த்து நீக்கியுள்ளனர்.

இது ஏனெனில்..?

தனது ஆட்சிக்காலத்தில் ஆப்பிரிக்காவின் கோங்கோ நாட்டை கைப்பற்றி அதன் முழு வளத்தையும் சுரண்டியதோடு கோங்கோ மக்களை அடிமைகளாக்கி, கசக்கிப்பிழிந்து துன்புறுத்திய ஒருவர் என்று `புகழ்பெற்றவர்` இந்த மாமன்னர். இத்தனைக்கும் இந்த மன்னர் கோங்கோ நாட்டுக்கு ஒருமுறைகூட நேரில் சென்றதில்லை. பெல்ஜியம் அரண்மனையில் அமர்ந்து சொகுசு வாழ்க்கையை ரசித்துக்கொண்டே ஆப்பிரிக்க நாட்டின் மக்களை வாட்டி, வேலை வாங்கி அதில் பெற்ற செல்வத்தை ஐரோப்பாவுக்குக் கொண்டுவந்து தன் நாட்டை வளமாக்கிய மன்னர் இவர்.

பெல்ஜியம் நாட்டு மக்கள் இனவாதத்துக்கு எதிராக கோங்கோவில் அடக்குமுறையை வெற்றிகரப்படுத்திய நிகழ்ச்சிகளின் குறியீடாக மன்னர் இரண்டாம் லியோபர்ட்டின் சிலையைத் தகர்த்ததன் வழி, தங்கள் கோபத்தை வெளிப்படுத்திக்கொள்கிற அதேவேளை உலகுக்குத் தங்கள் இனவாத சிந்தனைக்கு எதிரான கருத்தியலைப் பதிய வைத்துள்ளனர். இதைச் செய்தவர்கள் கோங்கோ நாட்டிலிருந்து வந்தவர்கள் அல்லர். மாறாக பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பொதுமக்களே.

இதேபோல இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில், அந்த நகரின் கடந்த சில தினங்கள் வரை முக்கியஸ்தராகக் கருதப்பட்ட Edward Colston சிலை தகர்த்தெறிந்து ஆற்றில் வீசப்பட்டது.

யார் இவர்?

1680இல் Royal African Company (RAC) என்ற நிறுவனத்தை உருவாக்கி ஆப்பிரிக்காவிலிருந்து மக்களை வேறு நாடுகளுக்குக் கொண்டுசெல்லும் அடிமைத் தொழிலை மிகத் தீவிரமாகச் செய்தவர். ஏறக்குறைய 100,000 மேற்கு ஆப்பிரிக்க மக்கள் இவரால் கரீபியத் தீவுகளுக்கும் அமெரிக்காவுக்கும் அடிமைகளாக விற்கப்பட்டனர். அடிமை வாழ்க்கையின் கொடூரத்தை வார்த்தைகளால் எழுத முடியாது.

இன்று இந்த மனிதரின் உருவச்சிலை பிரிஸ்டல் நகருக்குப் பெருமையல்ல எனப் பொதுமக்களே நினைத்து உடைத்து எறிந்துவிட்டார்கள். உடைத்ததும் வீசியதும் சரியா, தவறா என்பது இன்று ஒரு முக்கியக் கேள்வியல்ல. மாறாக மக்கள் மனத்திலிருந்து அடிமைத்தனத்தை வித்திட்டவர்கள் அகற்றப்படுவார்கள் என்பது இனவாதம் பேசுபவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்பதையே இச்செயல் வெளிப்படுத்துகிறது.

கொரோனா கொள்ளை நோய்ப் பரவலின் தாக்கம் ஐரோப்பாவில் குறைந்துவரும் வேளையில் தங்கள் நலனையும் ஒதுக்கிவைத்து ஒட்டுமொத்த உலக மக்களின் நீதிக்காக, இனவாதம் ஒழிய வேண்டும் என்ற ஒற்றைச் சிந்தனையுடன் ஐரோப்பாவில் கடந்த சில நாட்களாக எழுந்துள்ள இந்த எழுச்சி வியக்க வைக்கிறது.

Racial profiling என்ற சொல் இப்போது ஐரோப்பிய ஊடகங்களில் அதிகம் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இன ரீதியாக மக்களை அடையாளப்படுத்தி `இந்த இனத்தவர்கள் இப்படிப்பட்ட குற்றம் செய்வார்கள்` என்ற சிந்தனையைப் பற்றி இன்று கேள்விகள் எழத் தொடங்கியிருக்கின்றன.

இந்திய மற்றும் தமிழ்ச்சிந்தனையுடன் சாதி உயர்வு தாழ்வு பார்த்து இனவாதம் செய்யும் நபர்கள் இதைத் தங்களுக்கான ஒரு எச்சரிக்கையாகக் காண வேண்டியது அவசியம். இந்தியச்சிந்தனையில் சாதியை வைத்து ‘இந்தச் சாதிக்காரர்கள் இப்படித்தான் செய்வார்கள்’ என்ற பொது வார்த்தைப் பயன்பாடு இருப்பதைப் பரவலாக நாம் எல்லோருமே அறிவோம். புலம்பெயர்ந்த தமிழர்கள் சூழலிலும்கூட இந்த வார்த்தைப் பிரயோகம் வழக்கில் ஒட்டிக்கொண்டு வருவதை நான் என் நேரடி அனுபவத்தில் இங்கு ஜெர்மனியிலும் நிகழ்வதை அறிவேன்.

இப்படிப்பட்ட சிந்தனையைத்தான் Racial profiling என்று இன்று கூறி, கண்டிக்கும் வகையில் சமூக நீதியைக் காக்க முனைபவர்களும் இனவாதத்தைக் கண்டிக்க விரும்புபவர்களும் முன்னெடுத்திருக்கிறார்கள்.

ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணம் ஐரோப்பிய நாடுகளில் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இனவாதத்துக்கு எதிரான குரலின் தொடர்ச்சியாக பெல்ஜியத்தில் மாமன்னர் இரண்டாம் லியோபர்ட்டின் சிலை எங்கெங்கு உள்ளதோ அவை அனைத்தையும் எவ்வளவு விரைவில் நீக்க முடியுமோ… அவ்வளவு விரைவாக நீக்க வேண்டும் என்று இனவாத சிந்தனையை எதிர்க்கும் போராளிகள் இயங்கத் தொடங்கியிருக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை பெல்ஜியத்தின் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரில் ஏறக்குறைய 10,000 போராளிகள் இனவாதத்துக்கு எதிரான தங்கள் கருத்துகளை முன்வைத்து பேரணியை நிகழ்த்தினர்.

பொதுமக்களில் 65,000 பேர் பெல்ஜியம் முழுவதும் உள்ள மாமன்னர் இரண்டாம் லியோபர்ட்டின் சிலை நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் கையெழுத்திட்டு இருக்கின்றனர். மன்னர் இரண்டாம் லியோபர்ட்டின் சிலை மட்டுமன்றி அவரது பெயரில் அமைந்திருக்கின்ற சாலைகளின் பெயர்களை மாற்ற வேண்டுமென்றும் கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன.

காலனித்துவ பழைமையில் (Colonial Legacy) அடிமைத்தனத்தைக் கொடூரமாக நிலைநாட்டிய வரலாற்றுச் சின்னங்களைப் பெருமைக்குரிய சின்னங்களாகப் பார்க்கக் கூடாது என்றும், இனவாதத்தை ஆதரிக்கின்ற இவ்வகையான சின்னங்கள் நீக்கப்பட வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.

பெல்ஜியத்தில் எழுந்துள்ள எழுச்சி போலவே இங்கிலாந்திலும் வெவ்வேறு பகுதிகளில் இனவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள், போராட்டங்கள் என்பன நடைபெறுகின்றன. விக்டோரியா மகாராணி காலத்து நினைவுச்சின்னங்கள் சில இத்தகைய வகையில் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு இருக்கலாம்.

லண்டனில் அடிமைத்தனத்தை வெளிப்படுத்தும் வகையிலான `அடிமைகள் அருங்காட்சியகம்` (Slavery Museum) ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் இப்போது ஒரு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி லண்டன் நகரில் இனவாதத்தினால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்குச் சிலைகளும் வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

ஒடுக்கப்பட்ட மற்றும் அடிமைகளாக்கப்பட்டவர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையிலும், இனி வருங்காலங்களில் இத்தகைய மனிதாபிமானமற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்கவும் இத்தகைய மனமாற்றமும் எதிர்ப்புக் குரல்களும் காலத்தின் தேவையே.

ஐரோப்பாவில் இனவாத சிந்தனைக்கு எதிராக எழுந்திருக்கும் இந்த எழுச்சி நிச்சயமாகக் காலனித்துவ ஆட்சி செய்த இங்கிலாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், போர்த்துகல் போன்ற நாடுகள் மட்டுமன்றி, ஏனைய மேற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் எதிரொலிக்கும். இந்த நூற்றாண்டில் கொரோனா கொள்ளை நோய் ஏற்படுத்தியிருக்கும் வாழ்வியல் மாற்றம், சிந்தனை மாற்றத்துக்கும் வழிவகுக்கும்!

**வரும் ஞாயிறு தொடரும்**

**முந்தைய பகுதிகள்**

[பகுதி 1](https://www.minnambalam.com/public/2020/05/10/18/pandemic-in-Europe-this-second-and-some-centuries)

[பகுதி 2](  https://minnambalam.com/k/2020/05/17/12)

[பகுதி 3](https://www.minnambalam.com/public/2020/05/24/13/corona-virus-in-European-countries-political-changes)

[பகுதி 4](https://www.minnambalam.com/public/2020/05/31/8/honkong-model-against-covid-19-not-to-be-discussed-widely)

[பகுதி 5](https://www.minnambalam.com/public/2020/06/07/11/corona-virus-change-the-method-of-marriage-celebrations)

**கட்டுரையாளர் குறிப்பு**

முனைவர் க.சுபாஷிணி, ஜெர்மனி பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலத்தில் டிஎக்ஸ்சி டெக்னோலஜி என்ற நிறுவனத்தின் ஐரோப்பியப் பகுதி கணினிக் கட்டமைப்புத் துறை தலைமை பொறியியலாளராகப் பணிபுரிகின்றார். இவர் தமிழ் மரபு அறக்கட்டளை என்ற பன்னாட்டு அமைப்பின் தோற்றுனர் மற்றும் தலைவருமாவார். இந்தப் பன்னாட்டு அமைப்பு உலகளாவிய தமிழர் வரலாறு, மொழி, பண்பாடு தொடர்பான ஆவணங்களை மின்னாக்கம் செய்வது, அவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வது மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்ற ஓர் அமைப்பாகும்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *