�டிஜிட்டல் திண்ணை:வீடியோ எப்படி வெளியே வந்துச்சு? : தினகரன் வீட்டில் திடீர் மீட்டிங்!

public

அலுவலகத்தில் வைஃபை ஆனில் இருந்தது. ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் டைப்பிங் செய்தபடியே இருந்தது. சற்றுநேரத்துக்குப் பிறகு போஸ்ட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ் இதுதான்.

“ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு திரும்பிய பக்கமெல்லாம் கேட்க ஆரம்பித்துள்ளது. தினகரன் தரப்பில் ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் கொடுக்கிறார்கள் என்பதற்கான வீடியோ ஆதாரங்களும் வெளியாகியிருக்கிறது. இது சம்பந்தமாக தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு பிரச்சாரத்தை முடித்துவிட்டு தினகரன் வீட்டுக்கு வந்தபிறகு, அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், ஜெயக்குமார், காமராஜ் ஆகியோர் அவரது வீட்டுக்குப் போனார்கள். அமைச்சர் விஜயபாஸ்கரை வரச் சொல்லியும் போன் போயிருக்கிறது. ஆனால் விஜயபாஸ்கர் மொபைல் ஆஃப் செய்யப்பட்டு இருந்ததாம். அவரது உதவியாளரிடம் பேசி, ‘அமைச்சர் எங்கே?’ எனக் கேட்டிருக்கிறார்கள். ‘மதியத்துல இருந்தே அமைச்சருக்கு கடுமையான தலைவலி. மாத்திரை எடுத்தும் சரியாகவே இல்லை. அதனாலதான் ஊசி போட்டுக்கிட்டு படுத்திருக்காரு. எழுப்பட்டுங்களா?’ என்று கேட்டிருக்கிறார் அமைச்சரின் உதவியாளர். ஆனால் தினகரனோ, ‘வேண்டாம். நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும் விடுங்க. எழுந்தபிறகு நான் பேசிக்கிறேன்’ என்று சொல்லிவிட்டாராம். மற்ற அமைச்சர்களிடம் மட்டும் தினகரன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது, ‘நாம பணம் கொடுக்கிற படங்களும் வீடியோவும் மட்டும் எப்படி வெளியே வருது. மதுசூதனன் ஆட்களும் பணம் கொடுத்துட்டுதான் இருக்காங்க. நாம கொடுக்கிறது மட்டும்தான் வெளியில வருது. நாம மட்டும்தான் பணம் கொடுக்கிற மாதிரி சீனை கிரியேட் பண்றாங்க. அப்படின்னா பணம் கொடுக்கப் போற நம்ம ஆட்களில் யாரோதான் வீடியோ எடுத்திருக்கணும். நம்ம ஆட்கள் என்ற பேருல பன்னீர் ஆட்கள் யாரும் உள்ளே இருக்காங்களான்னு கவனிக்கணும். வெளியூர்ல இருந்து வந்திருக்கும் ஆட்களில் யாரும் கலந்து இருக்காங்களான்னு செக் பண்ணணும். ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களிடமும் சொல்லி, வெளியூர்ல இருந்து யார் வந்திருக்காங்க… அவங்க உண்மையில் நம் ஆதரவாளர்களா என்பதை செக் பண்ணச் சொல்லுங்க. யாருமேல சந்தேகம் இருந்தாலும் அவங்களை மறுபடியும் தொகுதிக்கு அனுப்ப வேண்டாம்னு சொல்லிடுங்க.

அதேபோல, பணம் கொடுத்த வீட்டுக்கு மார்க் பண்ணி வைக்கிறது, டிக் அடிக்கிறதுன்னு இன்னும் பழைய காலத்து டெக்னிக் எல்லாம் செய்யாதீங்கன்னு சொல்லுங்க. பணம் கொடுக்கிறதைவிட முக்கியமான விஷயம், அதை யாருக்கும் தெரியாமல் கொடுப்பது. அதை உருப்படியாக செய்யிற ஆட்களை தொகுதிக்குள் அனுப்புங்க. தினமும் புதுசு புதுசா சிக்கலை உருவாக்கிக்கிட்டே இருக்காங்க…’ என்று தினகரன் சொல்லியிருக்கிறார்.

அதற்கு அமைச்சர் ஜெயக்குமார், ‘ நீங்க சொல்றது உண்மைதான். பணம் கொடுக்கிறதை மக்கள் யாரும் படம் பிடிச்சிருக்க மாட்டாங்க. திமுக-காரங்களை நம்ம ஆட்களுக்குத் தெரியும். அதனால அவங்க இருக்கும்போது கொடுத்திருக்க மாட்டாங்க. நம்ம கட்சிக்காரன் என்ற போர்வையில கூடவே இருந்த ஆட்கள்தான் படம் பிடிச்சிருக்கணும். அதை சரி பண்ணிடலாம்!’ என்று சொன்னாராம்.

‘தேர்தலை நிறுத்த என்ன வழியோ அதையெல்லாம் செஞ்சுட்டு இருக்காங்க. அவங்களுக்கு பாஜக-வும் துணையா இருக்கு. நேரம் கிடைக்கும்போதெல்லாம் தேர்தலை நிறுத்தணும்னு தமிழிசை பேசிட்டே இருக்காங்க. அப்படி எதுவும் நடந்துடக் கூடாது. தேர்தல் நடக்கணும். நாம ஜெயிக்கணும். பணமும் மக்களுக்கு போய்ச் சேரணும். அது வெளியிலயும் தெரியக்கூடாது. இதை மட்டும் சரியா செய்யுங்க போதும். இதை எல்லார்கிட்டயும் சொல்லுங்க’ என்று, தினகரன் சொல்லி அனுப்பியிருக்கிறார். இந்த தகவல்கள் எல்லாம் இரவோடு இரவாக எல்லா மாவட்டச் செயலாளர்களுக்கும் சொல்லப்பட்டிருக்கிறது” என்பதுதான் அந்த ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டு ஷேரும் செய்த வாட்ஸ் அப், ‘எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…’ என்று கமெண்டில் போட்டது.

தொடர்ந்து மெசேஜ் ஒன்றை டைப்பிங் செய்தது வாட்ஸ் அப். “ஆர்.கே.நகர் தொகுதியில் பன்னீர் அணிக்கு ஆதரவுக் கரம் நீட்டியிருக்கிறது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி. ஜி.கே.வாசனும் பன்னீரும் சந்தித்தார்கள். மதுசூதனனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார் வாசன். இந்த சந்திப்புக்குமுன்பு நடந்த நிகழ்வுகளைச் சொல்கிறேன். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்தார் ஜி.கே.வாசன். தேர்தலுக்குப் பிறகு அங்கிருந்து வெளியே வந்துவிட்டார். பன்னீர் அணியில் இருக்கும் மைத்ரேயனும் வாசனும் நல்ல நண்பர்கள். மைத்ரேயன்தான் வாசனிடம் பேசியிருக்கிறார். ‘நீங்க இந்தத் தேர்தலில் எங்களுக்கு ஆதரவு தரணும். எப்படியும் கூடிய சீக்கிரம் சட்டமன்றத் தேர்தல் வந்துடும். அதுல நிச்சயம் நாம கூட்டணி அமைக்கணும். உங்களுக்கு நீங்க எதிர்பார்க்கும் அளவுக்கு சீட் கொடுக்குறதுக்கு பன்னீர் அண்ணனோட நான் பேசுறேன்..’ என்றெல்லாம் பேசினாராம். முதலில் பிடி கொடுக்காமல் பேசிய வாசன், அதன்பிறகு கிரீன் சிக்னல் காட்டியிருக்கிறார். ‘நானே வந்தால் அது நல்லா இருக்காது!’ என்று வாசன் சொல்ல… ‘நீங்களா வர வேண்டாம். அண்ணனை வந்து உங்களை பார்க்கச் சொல்றேன். அவரு உங்ககிட்ட ஆதரவு கேட்பாரு… நீங்க அப்போது ஓ.கே. சொல்லுங்க போதும்’ என்று சொல்லியிருக்கிறார் மைத்ரேயன். அதன்படியே, வாசனை தேடிப்போனார் பன்னீர். அவர் கேட்பதுபோல கேட்டார். வாசனும் ஓ.கே. சொல்லிவிட்டார்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைனில் போனது வாட்ஸ் அப்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *