�சிறப்பு நேர்காணல்: இளம் இயக்குநர்களின் படங்களில் நடிக்க விருப்பம் – பிரியா பிரின்ஸ்!

public

சினிமா, டி.வி. சீரியல், ஃபேஷன், விளம்பரம், குறும்படம், செய்தி வாசிப்பாளர் என்று பன்முகங்களைக் கொண்டவர் பிரியா பிரின்ஸ். இவர் சமீபத்தில் நடித்து வரும் ‘மாப்பிள்ளை’ சீரியல் ரொம்பவே பிரபலம். ஷங்கர் இயக்கும் ‘2.0’ படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். உலக சினிமா, தமிழ் இலக்கியங்கள் மேல் தீராத மோகம் கொண்டவர். ‘மின்னம்பலம்’ வாசகர்களுக்காக அவரை சந்தித்தோம்…

மீடியாவில் நுழைந்தது எப்படி?

சிறு வயதில் இருந்தே நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், டி.வி. மீடியாவுக்குள் வந்தது தற்செயலாகத்தான் நடந்தது. ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியின் ஆடிசனுக்குச் சென்று இருந்தேன். அதில் எனது பெர்பார்மன்ஸ் பிடித்து தேர்வு செய்தார்கள். ‘ஹலோ நான் அதிர்ஷ்டலட்சுமி பேசுறேன்’ என்ற லைவ் காலர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். அதில் தினமும் ஒவ்வொரு கெட்டப்பில் வந்து பேசியது நல்ல அனுபவமாக இருந்தது. நல்ல ரெஸ்பான்ஸ் மக்களிடம் இருந்து கிடைத்தது. அப்படித்தான் தொடர்ந்து நிகழ்ச்சிகள் செய்ய ஆரம்பித்தேன். அதன் பிறகு சினிமாவிலும் நடிக்க கூப்பிட்டார்கள். சீரியலிலும் நடித்தேன். சி.ஜெரால்டு இயக்கத்தில் ‘என் பெயர் மீனாட்சி’ என்ற சீரியலில் நடித்தேன். அதில் நடித்தபோதுதான் எனக்குள் முழுமையாக நடிப்பு திறமை இருப்பதை உணர்ந்தேன்.

சினிமாவில் நடித்த அனுபவம் பற்றி?

சீரியலில் எனது நடிப்பை பார்த்துவிட்டு விளம்பரங்களில், திரைப்படங்களில் நடிக்க அழைத்தார்கள். அப்போது நிறைய படங்கள் வந்தன. நான் தேர்வு செய்து நடித்தேன். சரவணன் இயக்கத்தில் வந்த ‘எங்கேயும் எப்போதும்’, ஸ்ரீராம் பத்மநாபன் இயக்கத்தில் வந்த ‘டூ’ ஆகிய படங்களில் நடித்தேன். ‘டூ’ படத்தில் கதாநாயகிக்கு இணையான ரோல். ஜெகனுக்கு ஜோடியாக நகைச்சுவையில் மிளிர்ந்த கதாபாத்திரம் அது. அதன் பிறகு டி.வி. ஷோக்களில் பிஸியாகி விட்டேன்.

தற்போது ‘மாப்பிள்ளை’ சீரியல்?

எனக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கு. போகிற இடங்களில் பெண்கள் பார்த்து புன்னகைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவும் எனது சொந்த பெயரான ‘பிரியா’வையே அந்தக் கதாபாத்திரத்துக்கு வைத்துவிட்டார் டைரக்டர். அதுவும் நல்லா ரீச் ஆகியிருக்கு. இந்த சீரியலை பார்த்து இரண்டு புதுப்படங்களில் நடிக்க கேட்டு இருக்காங்கன்னா பாருங்க!

யார் உங்களின் ரோல் மாடல்?

நடிகை வித்யா பாலன் எனது ரோல் மாடல். சிறப்பாக பல கதாபாத்திரங்களை அருமையாக செய்யக்கூடியவர். அவர் போல வித்தியாசமான படங்கள் செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்குண்டு. கல்கி கோச்சலின்னு ஒரு நடிகை உண்டு. பரிசோதனை முயற்சியான படங்களில் சிறப்பாக நடிப்பவர். அவரையும் பின்பற்ற ஆசை.

குறும்படங்களில் நடித்தும் பாராட்டு வாங்கி இருக்கீங்களே?

ஆமாம்… குறும்படங்கள் குறுகிய நேரத்துக்குள் நம்முடைய நடிப்பு திறமையைக் காட்டும் மீடியம். ‘பித்தளை சொம்பை காணோம்’னு ஒரு குறும்படம்… நகைச்சுவையோடு நடித்தேன். காமெடி ஆக்டர் ஜெகனும் என்னுடன் நடித்திருந்தார். ஹலோ எஃப்.எம் பாலாஜி இயக்கிய ‘சவுத் இந்தியன் தாளி.காம்’ என்ற குறும்படத்தில் நடித்தேன். நல்ல பெயர் கிடைத்தது. சமீபத்தில் பெண்கள் தினத்துக்குக்கூட மெட்ராஸ் மீட்டர் தயாரிச்ச குறும்படத்துல நடிச்சேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. வித்தியாசமான முயற்சிகளில் எடுக்கப்படும் குறும்படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்

எந்த இயக்குநர்களின் படங்களில் நடிக்க விரும்பறீங்க?

தற்போது இளம் இயக்குநர்கள் தமிழ் சினிமாவை நல்ல பாதையில் கொண்டு போயிட்டு இருக்காங்க. நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ் ஆகியவர்கள் கமர்ஷியலாக போய்க்கொண்டிருந்த திரைப்படங்களை யதார்த்த சினிமாவாக மாற்றிவிட்டனர். அதுவும் சமீபத்தில் பார்த்த லோகேஷ் கனகராஜின் ‘மாநகரம்’ மேக்கிங்கில் மிரட்டியது என்றால். கார்த்திக் நரேனின் ‘துருவங்கள் பதினாறு’ கதைசொல்லலில் வித்தியாசப்படுத்தியது. குறிப்பாக ராஜு முருகனின் ‘ஜோக்கர்’ படம் பார்த்தபோதே இதற்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்த்தேன். திறமையான நடிகர்கள், சிறப்பான இயக்கம் என்று படம் ரசனைக்குரிய முறையில் இருந்தது. இப்போது அதற்கு விருது கிடைத்த செய்தி அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். இந்த மாதிரியான திறமையான இளம் இயக்குநர்களின் படங்களில் பணியாற்ற விரும்புகிறேன்.

– விஜய் மகேந்திரன்

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *