�சிறப்புக் கட்டுரை: தில்லிப் பேரரசுக்கு ஓர தேசங்களிலிருந்து ஒரு சவால் – 2

public

கோர்கோ சாட்டர்ஜி

(தமிழில் வெளியாகியிருக்கும் தன்னுடைய நூலுக்கு கோர்கோ சாட்டர்ஜி எழுதிய முன்னுரையின் இரண்டாம் பகுதி)

கலாசாரத்தையும் அரசியலையும் பற்றி இந்த நூல் பேசுகிறது. ஜல்லிக்கட்டைப் பற்றி இந்த நூல் பேசுகிறது. ஒரு வங்காளிக்கு இதில் என்ன அக்கறை என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். ஏன்? ஏனென்றால், நமது போராட்டம், ஒரே போராட்டம்தான். தமிழன் என்கிற எண்ணமே எல்லாவற்றிலும் முதன்மையானது என்று நீங்கள் சொன்னால் இந்தி ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஒருபோதும் புரியப்போவதில்லை. ஏனென்றால் இது அவர்களுடைய ஏகாதிபத்தியம். ஆனால், எங்களுக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது புரியும். எப்போதும் புரிந்துகொண்டுதான் இருக்கிறோம்.

இந்தியாவுக்கு முன்பே தமிழர்கள் இருக்கிறார்கள். இந்தி பேசாத இனங்களைச் சேர்ந்த நாங்களும் இருக்கிறோம். இன்று அவர்கள் ஜல்லிக்கட்டைத் தடை செய்கிறார்கள். நாளை அவர்கள் நாங்கள் எங்களுடைய மா துர்காவுக்கோ மா காளிக்கோ விலங்குகளைப் பலியிடுவதைத் தடுப்பார்கள். இது தமிழர்களுடைய பிரச்னை மட்டுமல்ல. இது ஒரு கலாசார, பொருளாதார, அரசியல் பிரச்னை. இது எங்கள் பிரச்னை, நமது பிரச்னை. இது கூட்டாட்சி தொடர்பான பிரச்னை. தில்லி அதிகாரத்துக்கும் நமது அதிகாரத்துக்கும் இடையிலான பிரச்னை. அயோத்திப் பிரச்னை எப்படி ராமர் கோயிலுக்கான பிரச்னை மட்டுமில்லையோ அதைப் போல ஜல்லிக்கட்டுப் பிரச்னை விலங்குகள் உரிமை தொடர்பான பிரச்னை மட்டுமல்ல. அவர்கள் காட்டுகிறார்கள் – யார் ‘பாஸ்’ என்று காட்டுகிறார்கள்.

**தமிழர்களுக்குக் கிடைத்த பரிசு என்ன?**

1952இல், மொழிச் சமத்துவ உரிமையைக் கோரிய பத்துக்கும் குறைவான எண்ணிக்கையிலான வங்காளிகளை பாகிஸ்தான் படைகள் சுட்டுக் கொன்றன. 1965இல், மொழிச் சமத்துவ உரிமையைக் கோரிய 400க்கும் அதிகமான தமிழர்களை இந்தியப் படைகள் கொன்றன. வங்காளிகளுக்குக் கிடைத்த பரிசு தனி நாடு. தமிழர்களுக்குக் கிடைத்த பரிசு ஜல்லிக்கட்டுத் தடை. தமிழ் ரத்தம் அவ்வளவு மலிவானது போலும்.

உங்கள் உழைப்பும் வளங்களும்கூட அப்படித்தான் போலிருக்கிறது. அவையும் மலிவானவைதான். அன்புத் தமிழர்களே, ஜல்லிக்கட்டு போன்ற உங்கள் சொந்த வழமைகள் குறித்த விவகாரங்களில் முடிவெடுக்கும் உரிமை உங்களுக்கு இல்லை என்பதை உங்கள் மீது திணித்தது 1947தான். அதற்குப் பதிலாக, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்தையும் உங்கள் வள ஆதாரங்களையும் உங்கள் உழைப்பையும் கொடுத்து, தில்லியில் மெட்ரோ ரயில் போடுவதற்கும் இந்தி மாநிலங்களை வளர்ப்பதற்குமான வாய்ப்பை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். பிரமாதமான டீல்தான் இல்லையா?

**தமிழர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்**

ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழர்களின் போராட்டம் உற்சாகத்தைத் தொற்றச்செய்யும் ஒன்று. ஆம், அந்தப் போராட்டங்களில் நான் எதிர்காலத்தைப் பார்க்கிறேன். அந்தப் போராட்டங்களில் சங்கிலிகள் உடைபடுவது என் கண்முன் காட்சியளிக்கின்றன. ஜல்லிக்கட்டு சரியா, தவறா என்பது தமிழர்களின் சமாசாரம். அது தில்லியின் சமாசாரம் அல்ல. இந்தப் பாடத்தைத்தான் தில்லிப் பேரரசின் சக பலிகடாக்களான தமிழர் அல்லாத எங்களுக்குத் தமிழர்கள் சொல்லிக்கொடுத்தார்கள். என்னுடைய இந்தி பேசாத இனங்களின் நண்பர்களிடமும் வங்காளிகளிடமும் தமிழர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லி வருகிறேன். அந்தச் சினம் வடியும் பேய் விழியின் வழியாக தில்லியைப் பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

ஜல்லிக்கட்டுப் போராட்டங்கள் நடந்தபோது, நான் ஆங்கிலத் தொலைக்காட்சி அலைவரிசைகளைப் பார்த்தேன். முதல் சில நாள்களுக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தில்லி ஊடகங்களுக்குப் புரியவில்லை. என்னவோ பெரியதாக நடக்கிறது கவனியுங்கள் என்று யாரோ பிறகு அவர்களிடம் சொல்லியிருக்க வேண்டும். பிறகு இந்த ஒட்டுண்ணிகள் தில்லியிருந்து வந்து இறங்கினார்கள். தமிழ்நாட்டிலிருந்து தமிழ் விவகாரத்தை ஒளிபரப்ப வேண்டிய நிர்பந்தத்துக்கு தில்லியின் ஆங்கில தொலைக்காட்சி அலைவரிசைகள் நிர்பந்திக்கப்பட்டன. அவ்வளவுதான், தில்லியில் உட்கார்ந்துகொண்டிருக்கும் தமிழ் ஏஜென்ட்களுக்குத் திடீரென்று வேலையில்லாமல் போய்விட்டது. ஏனென்றால் இப்போது தமிழ்நாடே நேரலையில் இருக்கிறது. நேரடியாக, நேரலையில், மத்தியஸ்தர்கள் இல்லாமல் அது ஒளிபரப்பாகிறது.

தில்லி இல்லையென்றால் ஒரு தேசிய தொலைக்காட்சி சானல் இப்படித்தான் இயங்க வேண்டியிருக்கும். ஆனால், அதற்கு அது உண்மையான தேசமாக இருந்திருக்க வேண்டும். தமிழர்கள் உலகத்தைத் தங்கள் பார்வையிலிருந்து பார்க்க வேண்டும். இந்து – முஸ்லிம், பாகிஸ்தான் – சீனா, பாலிவுட், கிரிக்கெட் ஷிட் என தில்லிக்காரர்கள் ஒவ்வொரு இரவும் நம்மை வதைக்கிறார்களே, அந்தப் பார்வையிலிருந்து பார்க்கக் கூடாது. உலகத்தை நாம் நமது வழியில் பார்க்கலாமே, தில்லி வழியாக எதற்கு? ஒவ்வொரு பகலிலும் ஒவ்வொரு இரவிலும். கற்பனை செய்துபாருங்கள். நாம் எவ்வாறாக இருந்திருப்போம் என்று இந்தி பேசாத மக்கள் கற்பனைசெய்து பார்க்க உதவிசெய்தது ஜல்லிக்கட்டு. நமது இரவுகள் எவ்வாறு இருக்கக்கூடும், நமது பகல் வேளைகள் எவ்வாறு இருக்கக்கூடும், நமது உலகம் எவ்வாறு இருக்கக்கூடும்.

தில்லி ஊடகங்கள் அதைக் கவனம் குவித்துப் பார்த்த அந்த வேளையிலும், என்னதான் அங்கே நடக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவே இல்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. ஒரு தில்லி ஆங்கில சானலில் யாரோ மாலேகி அம்மையார், தமிழர்களுடைய கலாசாரம், அடையாளத்தில் சில அம்சங்களில் “நாகரிகமான கலாசார நடைமுறை” இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார். மூன்று மாநிலங்களில் சீற்றம் வெடித்துக் காளைகளைக் கட்டிப்பிடிக்கக் கிளம்பிவிட்டார்கள் என்பதை அறிந்த அந்த அம்மையார், அவர்கள் “கோஷாலாவுக்குச்” சென்று மாடுகளை கட்டிப்பிடித்துக் கொள்ளலாமே என்றார் (கோஷாலா என்றால் இந்தி வட்டாரத்தில் மாட்டுக் கொட்டகை என்பதற்கான இந்திச் சொல்லாக இருக்கலாம் என்று அறியவருகிறேன்).

மறந்துவிடாதீர்கள் தமிழர்களே, நீங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தாலும் உங்கள் உழைப்பாலும் மூலதனத்தாலும் கொழிப்பதுதான் இந்தத் தில்லி என்பதை மறந்துவிடாதீர்கள். இந்தத் தில்லிக்கார மாலேகி அம்மையார் ஒரு தில்லி சானலில் இப்படிப் பேசலாம், தில்லி கைதட்டி ஆரவாரிக்கலாம். தமிழர்களோ திகைத்து நிற்கலாம். காரணம் – 1947.

தமிழர்கள் பற்றியோ தமிழ்நாடு பற்றியோ தில்லிக்கு எந்த எழவுமே புரியவில்லை என்பதுதான் இந்தக் கோலக்கூத்துகளைப் பார்க்கையில் தெளிவாகப் புரிந்தது. தமிழராக இருக்கிற ஒரு “இந்து” தம்பதியினர் தங்கள் பிள்ளைக்கு சார்லஸ் ஆன்டணி என்று பெயர் வைக்க முடியும் என்பது சர்வ சாதாரணமான ஒன்றுதான் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். இந்து – இந்தி – இந்துஸ்தான் அதை ஒரு “கிறிஸ்தவ” பெயர் என்று பார்க்கலாம். ஆனால், சார்லஸ் ஆன்டணி என்பதைவிட வேறெந்தப் பெயர் அவ்வளவு தமிழ்ப் பெயராக இருந்துவிட முடியும்! எப்படிப்பட்ட மக்களிடம், எப்படிப்பட்ட தாய்நாட்டுப் பற்றுள்ள செம்மாந்த தேசத்துடன் விளையாடிக்கொண்டிருக்கிறோம் என்பது தில்லி பேரரசுக்கு – அதன் எல்லா ‘ரா’வான தன்மைகளுடன் – ஓர் இழவும் தெரியாது. நேர்மையான நெஞ்சுரம் கொண்ட புர்கினோ புசோவின் புரட்சிகரத் தலைவன் தாமஸ் சன்காரா எப்படிப்பட்ட மக்களைப் பற்றி நினைத்தால் உச்சி முகர்வாரோ அப்படிப்பட்ட மக்களுடன் விளையாடிக்கொண்டிருக்கிறோம் என்று தில்லிக்குத் தெரியாது.

**இந்திய ஒன்றியத்துக்கு தேசிய மொழி இல்லை**

இந்த நூல் மொழியைப் பற்றி பேசுகிறது. இந்தி நமது தேசிய மொழி என்கிற ஒரு வாசகத்தை அல்லது உரிமைகோருதலை நான் பெரும்பாலும் ஏமாற்றுக்காரர்களிடமிருந்தும் முட்டாள்களிடமிருந்தும் இனவெறியர்கள் / இனவுயர்வுவாதிகளிடமிருந்தும் உண்மையிலேயே விஷயமறியாதவர்களிடமிருந்தும்தான் கேட்கிறேன். இந்தி தேசிய மொழியாக இருக்கக்கூடிய எந்த தேசமும் என்னுடைய தேசமாக இருக்க முடியாது. முன்பு அப்படி இருந்ததும் இல்லை, இனி இருக்கவும் இருக்காது. இந்தி என் தேசிய மொழி அல்ல. இந்திய ஒன்றியத்துக்கு தேசிய மொழி என்று ஒன்று இல்லை. இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாகவும் சாதி – வர்க்கப் பிணைப்புள்ள, ரகசியத் திருடர்களின் மொழியாக ஆங்கிலத்தையும் கருதுகிற அந்த தில்லி – நோய்டா – குருகாவ்ன் – பாம்பே – ஒயிட்பீல்டு கும்பல்கள் எங்களை விட்டுப் பிரிந்து சென்றுவிடலாம். இந்தியை தேசிய மொழியாக ஏற்காத இந்திய ஒன்றியத்தின் பல்வேறு தேசிய இனங்களின் மக்கள் ஒன்றிணைந்து இந்த ஒன்றியத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் காப்பாற்றிக்கொள்வார்கள். நானும் அவர்களில் ஒருவன்.

(ஆழி பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘உனது பேரரசும் எனது மக்களும்’ என்னும் நூலுக்கு நூலாசிரியர் எழுதியுள்ள முன்னுரை இது. இந்தக் கட்டுரையின் தொடர்ச்சி நாளை…)

[பகுதி 1](https://minnambalam.com/k/2018/01/31/35)�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *