�எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் பணிபுரிவோரின் கல்வித்தகுதி: நீதிமன்றம் உத்தரவு!

public

தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் பணிபுரிவோரின் கல்வித்தகுதி குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சாத்தூர் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அப்பெண்ணுக்குப் பெண் குழந்தை பிறந்தது. இதனிடையே மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துகுமார் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை ரத்த வங்கிகளைக் கண்காணிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும், தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் பொருளாதாரம் படித்தவர் ஒருவர் பணியாற்றி வருகிறார். ஒரு எம்பிபிஎஸ் படித்த மருத்துவர் பணியாற்ற வேண்டிய இடத்தில் அவர் பணியாற்றி வருகிறார். அவரைப் பணியில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கைக் கடந்த ஜனவரி 4ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம் தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் தகுதி இல்லாதவர்கள் நியமிக்கப்பட்டது எப்படி, உயிர் பாதுகாப்பு விஷயங்களில் தகுதி இல்லாதவர்களை நியமிப்பதா என்று கேள்வி எழுப்பி தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

இந்த வழக்கு நேற்று (ஜனவரி 23) விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றுவோர் மற்றும் அவர்களின் கல்வித்தகுதி குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் துறை இயக்குநருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை பிப்ரவரி 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *