}மலேசியா இடைத் தேர்தல்: கமல் ‘வீடியோ’ பிரசாரம்!

public

மலேசியாவின் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் நாளை (அக்டோபர் 13) வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்திய வாக்காளர்கள் கணிசமாக இருக்கும் இத்தொகுதியில் போட்டியிடும் முன்னாள் துணை பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

போர்ட்டிக்சன் தொகுதி எம்.பி.யாக இருந்த டேன்யல் பாலகோபால் அப்துல்லா தமது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து அத்தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இத்தொகுதியில் முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராஹிம், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். போர்ட்டிக்சன் தொகுதியில் மொத்தம் 75,000 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் தமிழர்கள் உட்பட 21.4% பேர் இந்தியர்கள்.

இதனால் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தமிழ் சினிமா பாடல்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. குறிப்பாக பிரசார கூட்டங்களில் எம்ஜிஆர் வேடமிட்டு பாடுகிறவர்களின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளில் அன்வார் இப்ராஹிமும் கலந்து கொண்டு எம்ஜிஆரின் ‘நான் ஆணையிட்டால்’ போன்ற பாடல்களை பாடி ஆடியிருந்தார்.

இத்தொகுதியில் நாளை (அக்டோபர் 13) வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அன்வாருக்கு எதிராக 6 பேர் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன், அன்வார் இப்ராஹிமுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது போர்ட்டிக்சன் தொகுதி இந்திய வாக்காளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ மூலமாக அன்வாருக்கு கமல்ஹாசன் ஆதரவை கோரியிருக்கிறார்.

அந்த வீடியோவில், சகோதரர் திரு அன்வர் இப்ராஹிம் அவர்களுக்கு அநியாயமான சிறைவாசத்தில் இருந்து விடுதலை கிடைத்திருப்பது, அவருக்கு சேர வேண்டிய புகழ் மீண்டும் அவரை வந்தடைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. எளிய மக்களுக்காக குரல் கொடுக்கும் தலைவர்களின் எழுச்சி எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகவே இருக்கிறது. அப்படிப் பார்க்கையில் சகோதரர் அன்வார் அவர்களின் இந்த மறு எழுச்சி பெரிய நம்பிக்கையை எனக்கு அளிக்கிறது.

வருகின்ற சனிக்கிழமை போர்ட்டிக்சனில் நடைபெறும் தேர்தலில் ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தை மலேசியா எழுத இருக்கிறது. அந்த அத்தியாயத்தில் சகோதரர் அன்வர் பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மலேசிய அரசியல் சரித்திரத்தில் புதிய அத்தியாயங்கள் எழுதப்படும் என நான் நம்புகிறேன். மலேசிய இந்திய உறவும் வரலாற்றுச் சிறப்புமிக்க மலேசிய தமிழக உறவும் கண்டிப்பாய் வலுவடையும் என நான் நம்புகிறேன்.

மலேசிய மக்களின் இந்த புதிய பயணத்துக்கு எனது வாழ்த்துகள். எங்கள் கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் வாழ்த்துகள்” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் இந்த வீடியோ மலேசிய இந்தியர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

**யார் இந்த அன்வார் இப்ராஹிம்?**

1971ஆம் ஆண்டு மலாய் பல்கலைக் கழக முஸ்லிம் தேசிய மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்தார். 1974இல் அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 1982இல் மலேசியர்களின் தேசிய அமைப்பான அம்னோவில் இணைந்தார். 1983 முதல் 1991ஆம் ஆண்டு வரை அமைச்சர் பதவிகளை வகித்தார்.

1993 முதல் 1998 வரை மலேசியாவின் துணை பிரதமராகவும் அன்வார் இப்ராஹிம் பதவி வகித்தார். 1998ஆம் ஆண்டு ஓரினப் புணர்ச்சி வழக்கில் அன்வார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அன்வாருக்கு 6 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2004ஆம் ஆண்டு அன்வார் விடுதலை செய்யப்பட்டார்.

2008ஆம் ஆண்டு மீண்டும் அன்வார் மீது ஓரினச் சேர்க்கை வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் 2012இல் அன்வார் விடுதலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு மற்றொரு ஓரினச் சேர்க்கை வழக்கு அன்வார் மீது பாய்ந்தது. இவ்வழக்கில் அன்வாருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணிக்கு அன்வார் இப்ராஹிம் தலைமை வகித்தார்.

அண்மையில் நடைபெற்ற மலேசிய பொதுத்தேர்தலில் இதுவரை ஆளும் கட்சியாகவே இருந்து வந்த பேரீசான் நேஷனல் கட்சியை அன்வார் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி தோற்கடித்தது. இதனைத் தொடர்ந்து எலியும் பூனையுமாக இருந்த முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, அன்வார் இப்ராஹிமுடன் கை கோர்த்தார். 92 வயதான மகாதீர் முகமது பிரதமராக பதவியேற்ற நிலையில் அன்வார் இப்ராஹிமுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதால் சிறையில் இருந்து விடுதலையானார்.

இந்நிலையில்தான் அன்வார் இப்ராஹிம் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுகிறார். பொதுத்தேர்தலின் போது அன்வார் இப்ராஹிமிடம் 2 ஆண்டுகளில் பிரதமர் பதவியை ஒப்படைத்துவிடுவேன் என மகாதீர் முகமது கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது எம்.பி. தேர்தலில் அன்வார் இப்ராஹிம் போட்டியிடுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

[வீடியோ](https://www.youtube.com/watch?v=KU2_q7Bi-b0)�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *