புதுப்பிக்கப்படும் எம்.ஜி.ஆரின் பூர்வீக இல்லம்!

public

சென்னை மாநகர முன்னாள் மேயரும், அதிமுகவின் தொடக்கக் கால சீனியர் தலைவர்களில் ஒருவருமான சைதை துரைசாமி, எம்.ஜி.ஆர். மன்றங்களை உயிர்ப்பித்து நடத்த முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் எம்.ஜி.ஆரோடு நெருக்கமாக இருந்த பல்வேறு தரப்பினரோடும் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி வருகிறார்.

சில வாரங்களுக்கு முன் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தனது மனிதநேய அறக்கட்டளை மூலமாக சென்னையில் பிரமாண்ட விழாவாக நடத்திய சைதை துரைசாமி, அடுத்த கட்டமாக கேரளாவில் சிதிலமான நிலையில் இருக்கும் எம்.ஜி.ஆரின் பூர்வீக இல்லத்தை புதுப்பிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கேரளாவிலுள்ள பாலக்காடு அருகிலிருப்பது வடவனூர். இங்கு தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரது தாயார் சத்யபாமா அவர்கள் வாழ்ந்த பூர்வீக வீடு ‘மருதூர் இல்லம்’ என்று அழைக்கப்படுகிறது.

இலங்கை கண்டியில் பிறந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அங்கிருந்து உடன்பிறந்தவர்கள், பெற்றோருடன் தாயகம் திரும்பினாலும், கேரளாவில் வாழும் சூழ்நிலை இல்லாத காரணத்தால், தந்தை கோபாலமேனனும் காலமானதால் கும்பகோணம் வந்தனர். அங்கு படிப்பு, நாடகம், சினிமா என்று வந்த பின் வருமானம் பெருகிய ஆரம்ப நிலையில் கேரளாவில் சொந்த ஊரில் ஒரு வீட்டை விலைக்கு வாங்கினார். அதற்கு ‘சத்திய விலாஸ்’ என்றும் பெயரிட்டார்.

தன் குடும்பத்தாரால் அந்த வீட்டை பயன்படுத்த முடியாத நிலையில் அதை அந்த ஊரைச் சேர்ந்த ஓர் ஏழை நாவிதரிடம் இலவசமாக ஒப்படைத்திட, அது பின்னர் கைமாறி, தற்போது அங்கன்வாடியாக செயல்பட்டு வருகிறது. ஆனால், வீட்டை பயன்படுத்தும் யாரும் அதை சரியாக செப்பனிட முன்வராததால் தற்போது சேதமுற்ற நிலையிலிருக்கிறது.

வீட்டின் பின்புறமுள்ள கிணற்றில் ‘சத்திய விலாஸ்’ என்று மலையாளத்தில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. 70 வருடங்கள் பழைமையான இந்த வீட்டை எங்களது மனிதநேய இலவச கல்வி அறக்கட்டளை சார்பில் சீரமைத்துப் புதுப்பித்துத் தருவதற்குத் தயாராக இருப்பதை நாங்கள் கடந்த மாதம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடிய சமயத்திலேயே முடிவு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது இந்தப் பணிகளைத் துரிதப்படுத்தி வெகு விரைவில் ‘சத்திய விலாஸ்’ வீட்டைப் புதுப்பித்து உரியவர்களிடம் பயன்பாட்டுக்கு ஒப்படைப்பதற்குப் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார் மனிதநேய அறக்கட்டளையின் தலைவர் சைதை சா.துரைசாமி.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *