நேர்காணல்: சிற்பத்தில் உள்ள கருத்து அதுவாகவே வெளிவரும் – சிற்பி நந்தன்

public

சந்திப்பு: வைஷ்ணவி ராமநாதன்

**சிற்பி புல்லரம்பாக்கம் சுந்தராஜன் நந்தனுடன் நேர்காணல் – பகுதி 2**

**கீழிலிருந்து மேல் செதுக்கும்போது balance செய்வதில் கஷ்டம் ஏற்படாதா?**

இல்லை. பீடத்தைச் செய்யும்போது அதன் நடுப்புள்ளியைக் கண்டறிவேன். அதிலிருந்து மேல் நோக்கிச் செல்லும் கோடை போட்டு அதன் இரு புறமும் என்ன வடிவங்கள் வர வேண்டும் என்று பார்ப்பேன். சிற்பத்தின் இருபுறங்களிலும் உள்ள வண்ண வித்யாசங்கள் சரியாக உள்ளதா, empty space சரியாக உள்ளதா என்று கவனிப்பேன். ஓவியமாக இருக்கலாம், சிற்பமாக இருக்கலாம் balance மிக அவசியம். சிற்பம் செய்யச் செய்ய balance என்பது நமக்கு நன்கு புரிந்துவிடும். முதலில் சிற்பம் செய்யும்போது கோடு போட்டுச் செதுக்குவேன்.இப்பொழுது அந்தக் கோடு உள்ளுணர்வாக மாறிவிட்டது.கோடு போட வேண்டிய அவசியம் இருப்பதில்லை. எந்தப் பக்கம் எவ்வளவு பாரம் இருக்கலாம் என்று புரிந்துவிடும். சில நேரம் குழப்பம் இருக்கும்போது கோடு போடுவேன். Balance வந்துவிட்டால் சிற்பம் எப்படி இருந்தாலும் சரியாக உள்ளது என்று அர்த்தம்.

நான் மற்றவர்களுடைய கலைப் படைப்புகளைப் பார்ப்பேன். அதை எவ்வளவு உள்வாங்குவேன் என்று தெரியாது.ஆனால் என் படைப்புகளை உன்னிப்பாக கவனிப்பேன். இதன் மூலம் என் கலைப் படைப்பில் repetition இருப்பதில்லை.ஒரு கலைஞனின் படைப்பில் 5 அல்லது 10 சதவிதம் அதே உருவம் இருக்கலாம் ஆனால் 90 சதவிதம் அதே விஷயம் இருந்தால் சரியாகாது. நிறைய கலைஞர்கள் மீண்டும் மீண்டும் அதையே செய்துகொண்டிருக்கிறார்கள். அதன் காரணம், ஒரு கலைப் படைப்பிற்கு நல்ல வரவேற்பு இருக்கும்பொழுது அதை ஏன் திரும்பிச் செய்யக் கூடாது என்ற எண்ணம் கலைஞர்களுக்கு வரும்.என்னுடைய சிற்பத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.அதில் என்னுடைய character இருக்கும்.ஆனால், ஒன்றைப்போன்று மற்றொன்று இருக்காது. இரு சகோதரர்களின் மத்தியில் சில ஒற்றுமைகள் இருக்கும். ஆனால், இருவரும் முழுக்க முழுக்க ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். செய்ததையே செய்துவிடுவோமோ என்ற பயம் எனக்கு உள்ளது. அந்த உணர்வு இருப்பதனால் என் சிற்பங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாகத்தான் உருவெடுக்கும்.

**புதிதாக ஒன்றைச் செய்யும்பொழுது மக்கள் அதை விரும்புவார்களோ என்ற கவலை வருமா?**

இல்லை. எனக்கு என்ன பயம் ஏற்பட்டது என்றால் ஓவியத்தைப் சரியாகப் புரிந்துகொள்ளாமல் அதைச் செய்யக் கூடாது என்பதுதான்.

**என் கேள்வி ஓவியம் சிற்பம் எல்லாவற்றையும் தழுவியது…**

நான் சொல்வதைக் கேளுங்கள்.ஒவியம் வெறும் உருவத்தைப் பற்றி மட்டும் பேசக் கூடாது. அதில் முப்பரிமாணம் வெளிப்பட வேண்டும்.உருவத்தின் பின்புறத்தில் என்ன உள்ளது என்று தெரிய வேண்டும்.அந்தச் சிந்தனை வந்த உடன் ஓவியம் நின்றது, சிற்பம் தொடங்கியது. எனக்கு முன்பே சுடுமண் சிற்பம் செய்யத் தெரியும்.சிற்பம் செய்யச் செய்ய ஒரு வித்யாசமான உருவம் இருந்தால் அதன் பின் பக்கம் எப்படி இருக்கும் என்று தெரியவந்தது. மற்றவர்களைப் போல் ஓவியத்தின் மேல் வெறுப்பு ஏற்பட்டதனால் அல்லது ஓவியம் விற்காதமையால் நான் சிற்பம் செய்யத் தொடங்கவில்லை.வரைந்த உருவத்தின் பின்பக்கத்தில் உள்ள விஷயத்தைத் தெரிந்துகொள்வதற்குத்தான் நான் சிற்பம் செய்யத் தொடங்கினேன். இந்த விஷயத்தை மிக முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.Abstract form வரையும்போது அதன் பின் பக்க அமைப்பைத் தெரிந்துகொள்ள விரும்பினேன் ஏனென்றால் நான் உருவத்திலிருந்து abstractக்கு வந்துவிட்டேன். ஓவியம் மட்டும் செய்பவர்கள் கண்மூடித்தனமாகச் செய்கிறார்கள்.அவர்களுக்கு முன் பக்கம் உள்ள விஷயம் மட்டும் தெரியும்.

கலைஞன் என்றால் எல்லாம் தெரிந்தவன் என்று அர்த்தம். ஓவியம் செய்பவனை ஓவியன் என்பார்கள். சிற்பம் மட்டும் செய்பவனைச் சிற்பி என்பார்கள். எனக்கு ஓவியமும் தெரியும் சிற்பமும் தெரியும். அதனால் நான் ஒரு கலைஞன். கலைஞனுக்கு விற்பனையைவிடப் பாராட்டுதான் முக்கியம். கலைஞனிடமிருந்து அதிக எதிர்பார்ப்புகள் இருக்கக் கூடாது. நான் நல்ல வேலை செய்ய முடிந்ததற்கான காரணம் வீட்டில் நானும் என் மனைவியும் மட்டும்தான் இருக்கிறோம். அதனால் அதிக தேவைகள் கிடையாது.

உங்கள் கலையின் மூலம் என்ன கருத்தைச் சொல்ல விரும்புகிறீர்கள் என்று பலர் என்னை கேட்கிறார்கள்.காலம் செல்லச் செல்ல என் சிற்பத்தில் உள்ள கருத்து அதுவாகவே வெளிவரும் என்று பதில் அளிப்பேன். நான் இப்பொழுது சொல்வதற்கு ஒன்றும் இல்லை.நான் இறந்த பிறகு மக்கள் என்னைப் பற்றிப் பேச வேண்டும்.

**கலைஞனுக்குப் பாராட்டு வேண்டும் என்பது சரி. ஆனால் இப்பொழுது எழுத்துலகில் கலைஞர்களை ஒரேயடியாகப் புகழ்ந்து எழுதுகிறார்கள். இல்லாவிட்டால் அவர்களை கவனிப்பதே இல்லை. ஒரு காலத்தில் கலை விமர்சகர்கள் கலைப் படைப்பில் உள்ள குறை நிறைகளை அச்சமின்றி எழுதுவார்கள்…**

அது ஏனென்றால் நல்ல கலை விமர்சகர்கள் இப்பொழுது கிடையாது.எழுதும்போதே அவர்கள் கலைஞனை திருப்திப்படுத்த எழுதியிருக்கிறார்கள் என்று தெரிந்துவிடும்.உள்ளதை உள்ளபடி சொன்னால்தான் கலைஞனும் வளர முடியும். அந்தக் காலத்தில் இருந்தவர்களின் கலை விமர்சனங்களைக் கண்டு கலைஞர்கள் நடுங்குவார்கள். கலைஞர்களுக்குத் தெரியாதபடிகூட சில விமர்சகர்கள் கண்டித்து எழுதுவார்கள். இப்பொழுது இருப்பவர்கள் அச்சப்படுகிறார்கள். மேலும் அவர்களுக்கே அதிக விஷயம் தெரியாது. நிறைய படிக்க வேண்டும். நிறைய கலைப் படைப்புகளைப் பார்க்க வேண்டும்.

பணிக்கர் நிறைய புத்தகங்கள் படிப்பார். அவரால் எந்தக் கலைஞர் எந்தப் படைப்பை எப்பொழுது செய்திருக்கிறார் என்று துல்லியமாகச் சொல்ல முடியும். அவர்தான் எங்களைப் போன்றவர்களுக்கு கலை விமர்சகராக இருந்தார். சுனந்தா என்ற பெயரில் விமர்சனங்கள் செய்வார்.அவரை வாதாடி யாராலும் வெல்ல முடியாது. அவருக்குப் பிடித்த ஒரு கலைப் படைப்பை ஒதுக்கிவிட்டால் அதை ஒப்புக்கொள்ளும் வரை வாதாடுவார். இல்லாத ஒன்றைச் சொல்ல மாட்டார் ஆனால் அந்த படைப்பில் உள்ள விஷயத்தையே கொண்டு தன் கருத்தை நிலைநாட்டுவார்.

**நீங்கள் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில்தான் சென்னை கலை இயக்கம் (Madras Art Movement) தொடங்கியிருக்கும். அதைப் பற்றி…**

அந்தக் கலை இயக்கத்திற்குப் பெயர் அளித்தது பணிக்கரின் மகன் நந்தகோபால்.ஆனால் எங்கள் கல்லூரிக் காலத்தில் அதற்கு சென்னை கலை இயக்கம் என்ற பெயர் இருக்கவில்லை. பணிக்கரைப் பின்பற்றியவர்களைப் பிறகு சென்னை கலை இயக்கத்தில் சேர்த்துக்கொண்டார்கள். அந்தக் கலை இயக்கத்தின் அடிப்படையே கோடுதான். கோயில் சிற்பத்தில் உள்ள கோடுகளை அடிப்படையாகக் கொண்டு வேலை செய்தோம்.

**உங்களுடைய கலைப் படைப்புகளின் subject என்ன?**

இயற்கைதான் என் கலைப் படைப்புகளின் அடிப்படை.நான் தென்னிந்தியச் சிற்பங்களில் உள்ள கோடுகளை நன்கு கவனிப்பேன். உருவங்களைவிடக் கோடுகள்தான் எனக்கு முக்கியம். அடுத்தபடியாக கோபுரச் சிற்பங்களில் இரு சிற்பங்களின் மத்தியில் உள்ள நிழலை நான் நன்கு கவனிப்பேன். அதை வைத்துதான் என் புத்தர் சிலையைச் செய்துள்ளேன். அதில் பார்த்தால் இந்தியக் கலையில் உள்ள கோட்டைக் கொண்டுதான் செய்வேன். உருவத்தில் நவீனத்துவம் இருக்கும் ஆனால் கோடு பாரம்பரியத்தில் உள்ளது.

**உங்களுடைய சிற்பத்தில் வழுவழுப்பான surface மற்றும் textureஉள்ள surface சேர்ந்திருக்கும்…**

ஆமாம். அதன் காரணம் நான் ஓவியனாகத்தான் தொடங்கினேன். ஓவியம் செய்யும்போது 2 அல்லது 3 வண்ணங்கள் பயன்படுத்துவோம். ஓவியம் தெரிந்தால்தான் சிற்பம் செய்ய முடியும். அப்படிச் செய்யும்போது ஓவியத்தின் தாக்கம் சிற்பத்திலும் வரும். என் சிற்பங்களை நேராகப் பார்க்கும்போது ஓவியத்தைப் போல் தெரியும். என் சிற்பத்தில் வெவ்வேறு விதமான பாலீஷ்களைப் பயன்படுத்துவேன். அது ஓவியத்தின் தன்மையைக் கொண்டுவந்துவிடும்.

சிற்பம் மட்டும் செய்பவர்களின் படைப்புகளில் வெறும் உருவம் மட்டும் தெரியும். ஆனால் கோட்டை வைத்தும் வண்ண வேறுபாட்டை வைத்தும் விளையாடுவது ஒவியம் தெரிந்த சிற்பியால் மட்டும் இயலும்.நான் 1976இல் சிற்பம் செய்யத்தொடங்கினேன். நந்தகோபாலும் ஓவியராகத்தான் தொடங்கினார்.

நீங்கள் சிற்பம், ஓவியம் செய்துகொண்டிருந்த காலத்தில் ஓவியத்திற்கும் சிற்பத்திற்கும் எந்த விதமான தொடர்ச்சி இருந்தது?

இரண்டிலும் அதே விதமான கோடுகள் இருக்கும் அதைத் தவிர வேறு எந்தத் தொடர்சியும் கிடையாது. நிறைய சிற்பிகள் முதலில் ஓவியத்தை வரைந்துவிட்டு அதைச் சிற்பமாக மாற்றுவார்கள் ஆனால் நான் அப்போது இருக்கும் பொருளை வைத்துக்கொண்டு என் படைப்பை உருவாக்குவேன்.

கலைஞனுக்கு மிகவும் முக்கியமான விஷயம் மனச் செறிவு. சிற்பம் செய்யும்போது அதிலிருந்து வரும் ஓசை ஒரு விதமான தியானத்தைத் தூண்டும். மனச் செறிவு இருந்தால்தான் நல்ல ஓவியமோ, சிற்பமோ, நடனமோ செய்யமுடியும். நீங்களே ஒரு மெல்லிய பாதை வழியாகச் செல்லும்போது மனச் செறிவு இருந்தால் அந்த இடத்தை உடனே கடந்துவிடலாம். நமக்குள்ளேயே எல்லாக் கேள்விகளுக்கும் பதில்கள் உள்ளன. அதை அறிந்துகொள்வதற்கான கருவி மன ஒருங்கிணைப்புதான். கடும் உழைப்பும் கலைக்குத் தேவை. ஒரு குழந்தையை வயிற்றில் சுமக்கும்போது எவ்வளவுதான் வேதனை இருந்தாலும் குழந்தை பிறந்தவுடன் அது எல்லாம் மறந்துவிடும். இயற்கையில் இருப்பதைப் போலத்தான் கலையிலும். உழைத்து ஒர் உருவத்தை வெளிக் கொண்டுவரும்போது எல்லாம் மறந்துவிடும்.

**உங்களுடைய சிற்பங்கள் ஆழ்மனதில் உள்ள பதிவுகளை வெளிக்கொணர்வது போல் உள்ளன…**

அது சரி. மனதில் புதைந்திருக்கும் எண்ணங்களை கலைஞர்கள் முதலில் வெளிப்படுத்துவார்கள். ஓவியனாக இருந்தால் அது ஓவியமாக வெளிவரும். நான் ஒரு கல்லைப் பார்க்கும்போது அதில் உள்ள உருவத்தைத் தேடுவேன். அதை வடிக்கும்போது சுற்றுப்புறத்தில் உள்ள ஒலிகள் மற்றும் விஷயங்கள் ஒன்று சேரும். அதனால் வெளியில் வரும் உருவம் மாறுதல் அடைந்துகொண்டே இருக்கும். மனதை ஒருங்கிணைத்து நாமும் சிற்பத்தைச் செய்துகொண்டே இருப்போம். சிற்பம் அரைப் பங்கு முடிந்தவுடன்தான் நாம் செதுக்கும் விஷயம் என்னவென்று நமக்கே விளங்கும்.

**அந்த நிமிடத்தில் என்ன தோன்றுகிறதோ அதை நீங்கள் செய்கிறீர்கள். ஆனால் உதவியாளர்களுடன் வேலை செய்யும்போது இத்தகைய வேலைமுறையை எப்படிப் பின்பற்றுகிறீர்கள்?

(நேர்காணலின் தொடர்ச்சி மாலை 7 மணிப் பதிப்பில்)

[பகுதி 1](http://www.minnambalam.com/k/2018/06/29/26)�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *