நான் சர்வாதிகாரியா? தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

public

பொதுக் குழுவில் நடந்தவை தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

திமுக பொதுக் குழுக் கூட்டம் கடந்த 10ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்எம்சிஏ திடலில் நடைபெற்றது. அதில், பொதுச் செயலாளருக்குரிய அதிகாரங்களைத் தலைவருக்கு அளித்து சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. மேலும், தமிழகத்தின் பிரச்சினைகள், கோரிக்கைகள், இட ஒதுக்கீடு, மாநிலங்களின் அதிகாரங்கள் உள்பட 20 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மான விளக்கப் பொதுக் கூட்டங்கள் வரும் 16ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளது.

பொதுக் குழுவில் பேசிய ஸ்டாலின், “கட்சியின் வளர்ச்சிக்காக சர்வாதிகாரியாக மாறுவேன்” என்று தெரிவித்திருந்தார். இதை முன்வைத்து ஊடகங்களிலும், சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் பொதுக் குழு தீர்மானங்கள் குறித்து தொண்டர்களுக்கு நேற்று (நவம்பர் 12) கடிதம் எழுதியுள்ள ஸ்டாலின், “மிசா சிறைவாசம் குறித்து அவதூறு, முரசொலி நிலம் குறித்து அவதூறு என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஆட்சியில் இல்லாத திமுகவை நோக்கி அவதூறு – பொய்கள் பரப்புகிறார்கள் என்றால், அவர்களின் நோக்கம் நாம் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதுதான். கலைஞர் மறைவுக்குப் பிறகு என் சக்திக்கு மீறி உழைத்து இந்தக் கட்சியைக் கட்டிக்காக்க உங்களுடன் இணைந்து நிற்கிறேன்.

வெற்றி எளிதாக வராது. நாம் எளிதாக வெற்றி பெறவும் விடமாட்டார்கள். எனவே, தொண்டர்களை அரவணைத்து, மக்களிடம் சென்று கட்சி வளர்ச்சிக்காக உழைத்தால்தான் வெற்றி பெற முடியும். அதற்கு மாறாக, கட்சிக்கு ஊறுவிளைவிக்கும் செயல்பாடுகளில் எவரேனும் ஈடுபட்டால் அவர்கள் திருந்த வேண்டும். இல்லையெனில் திருத்தப்படுவார்கள் என்பதை பொதுக் குழுவில் எடுத்துரைத்து, எனக்காக அல்ல, கட்சியின் நலனுக்காக சர்வாதிகாரியாக மாறுவேன் என்று தெரிவித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

**உங்களின் ஒருவன்**

தொடர்ந்து, “கட்சிப் பொதுக் குழுவின் அத்தனை சிறப்பம்சங்களையும் மறைத்துவிட்டு, “ஸ்டாலின் சர்வாதிகாரி ஆகிறாரா?” என ஊடகங்களில் விவாதங்கள் நடைபெறுகின்றன. ஊடகத் துறை நண்பர்களின் இக்கட்டான நிலையை நான் அறிவேன். அதிமுக அரசின் அவலட்சணங்களை விமர்சித்தால் அரசு கேபிள் என்ற கழுத்துச் சுருக்குக்கு ஆட்பட வேண்டும். பாஜக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தால் உரிமத்திற்கே உலை வைத்துவிடும்” என்று தெரிவித்துள்ள ஸ்டாலின்,

ஆட்சியில் இல்லாத திமுகதான் அன்றாடம் மக்கள் பிரச்சினைகளைப் பேசிக் கொண்டிருக்கிறது. அவர்களைப் பற்றி நாம் ஒரு பிரச்சினையைக் கிளப்புவோம் என்றுகூட அவர்கள் நம்மிடம் உரிமை எடுத்துக் கொள்ளலாம். திமுக ஒரு ஜனநாயக இயக்கம். அதன் வழிமுறைகள் ஜனநாயகத்தன்மை வாய்ந்தவை. உங்களில் ஒருவனான நானும் அந்தத் தன்மையுடன் செயல்படக்கூடியவன்தான் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

**திசை திருப்ப நினைக்கிறார்கள்**

மேலும், “திக – திமுக என திராவிட இயக்க வரலாற்றில் அறவழிப் போராட்டங்கள் நடைபெறும்போது, அதனைத் தலைமையேற்றுக் கட்டுக்கோப்புடன் நடத்துவதற்கு ‘சர்வாதிகாரி’கள் நியமிக்கப்பட்ட நிகழ்வுகள் உண்டு. இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் பேரறிஞர் அண்ணாவை ‘சர்வாதிகாரி’யாக தந்தை பெரியார் நியமித்து, போராட்டத்தை வழிநடத்திடச் செய்தார். அதற்காக அண்ணா ஆயுதம் ஏந்தவில்லை. அடக்குமுறை செய்யவில்லை. அன்பும் அறிவும் கொண்டு போராட்டத்தை நடத்தினார். அண்ணா வழிதான் நம் வழி. அந்த வழியில் தொடர்ந்த கலைஞரின் பாதையில் பயணிப்போம். திசைதிருப்ப நினைப்போரைப் புறக்கணிப்போம்” என்றும் தனது கடிதத்தில் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *