vஇனி, வழக்கமான பெயர்களில் 293 சிறப்பு ரயில்கள்!

Published On:

| By Balaji

கொரோனா கட்டுப்பாடுகளால் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வந்த 293 எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழக்கமான பெயர்களில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியபோது ரயில், விமானம் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. பின்னர் தொற்று குறைந்து வந்ததால், படிப்படியாக போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டன. அந்தவகையில், தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்பட்ட அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும், சிறப்பு ரயில்களாகவே இயக்கப்பட்டன.

சிறப்பு ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் மட்டுமே பயணிக்க பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், தொடர்ந்து 50 நாட்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திடம் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இதையடுத்து சில ரயில்கள் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில், தற்போது, சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வந்த அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும், மீண்டும் வழக்கமான பெயர்களில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அனைத்து சிறப்பு ரயில்களும், நடப்பு கால அட்டவணைப்படியே வழக்கமான பெயர்களில், வழக்கமான ரயில் வண்டி எண்களில், தற்போதையை வழிகாட்டுதல்படி மீண்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அந்தவகையில், கொரோனா காலத்தில் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்ட பாண்டியன் எக்ஸ்பிரஸ், சோழன் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், செந்தூர் எக்ஸ்பிரஸ், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தெற்கு ரயில்வேயில் இயங்கும் 293 எக்ஸ்பிரஸ், ரயில்கள் மீண்டும் வழக்கமான பெயர்களில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share