?நான் அரசியல்வாதி இல்லை!

public

எனக்கு ஓட்டுப்போடத் தெரியும், ஆனால் மாநில அரசு பற்றித் தெரியாது என்று தெரிவித்துள்ளார் நடிகர் சிம்பு.

ஐபிஎல்லுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதாக நடிகர் மன்சூர் அலிகான் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இவர் தற்போது வரை சிறையில் இருப்பதால் அதற்காக நியாயம் கேட்டு கமிஷனர் அலுவலகம் செல்ல இருப்பதாக நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார். அதில், “மனிதாபிமானம் கொண்ட, மண் வாசனை கொண்ட, மதச்சார்பற்ற, அரசியல் சார்பற்ற ஒரு தனிமனிதனை, தமிழ்க் கலைஞனை, அதாவது அண்ணன் மன்சூர் அலி கான் அவர்களை மனித உரிமை மற்றும் மனிதநேய அடிப்படையில் விடுதலை செய்யக் கோரி நாளை காலை போலீஸ் கமிஷனர் ஆஃபீஸ் சென்று மனு கொடுக்க இருக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து இன்று காலை சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வந்தார் நடிகர் சிம்பு. அப்போது அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்தச் சிம்பு, நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை அறிய வந்துள்ளேன். இங்கு நான் எந்தப் பிரச்சினையும் செய்ய வரவில்லை. அவரை விடுதலை செய்யும்படியும் நான் கோரவில்லை, மனுவும் அளிக்கவில்லை. மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதற்கான காரணத்தையும் எப்போது விடுவிக்கப்படுவார் என்பதையும் அறிய வந்தேன். இது பற்றி காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டேன். அவர்கள் தகுந்த விளக்கத்தை அளித்தனர். விரைவில் மன்சூர் அலிகான் விடுவிக்கப்படுவார். அவரை அவர் குடும்பத்தினர் சந்திக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டனர். அதையும் நான் காவல் துறையிடம் முன்வைத்தேன். அவர்கள் அதற்கு உடனடியாக தீர்வு அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஐபிஎல் போராட்டத்தின்போது காவல் துறையினர் தாக்கப்பட்டதில் எனக்கு உடன்பாடு இல்லை. தாக்குதலுக்குள்ளான காவல் துறை திருப்பித் தாக்குதல் நடத்தாமலிருந்ததற்குப் பாராட்டுகள்” என்று கூறினார்.

தொடர்ந்து சிம்புவிடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராட்டம் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்த மாநில அரசைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேள்வி கேட்கப்பட்டபோது, “என்னிடம் ஏன் இது போன்று கேட்கிறீர்கள்? என்னை ஒரு அரசியல்வாதியாகவே பார்க்கிறீர்கள். எனக்கு ஓட்டுப்போடத் தெரியும் அவ்வளவுதான். மாநில அரசைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்று விளக்கமளித்தார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *