டிஜிட்டல் திண்ணை: வருகிறது உள்ளாட்சித் தேர்தல்!

public

மொபைலில் டேட்டா ஆன் செய்தோம். ஸ்டேட்டஸை அப்டேட் செய்தது ஃபேஸ்புக்.

“ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் மாநில தேர்தல் ஆணையத்தை அறிவுறுத்தி இருக்கிறது. இன்னும் நாற்பது நாட்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்பது கட்டாயமாகி இருக்கிறது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில்தான் உயர் நீதிமன்றம் இப்படியான அறிவுறுத்தலை வழங்கி இருக்கிறது. மேலும் தேர்தலுக்கான உத்தேச கால அட்டவணையை வரும் புதன் கிழமைக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு பற்றி உடனடியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சொல்லப்பட்டு இருக்கிறது. அப்போது அவர் அவரது வீட்டில்தான் இருந்தார். அவர் உடனடியாக, உள்ளாட்சி துறை அமைச்சரான எஸ்.பி வேலுமணியை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்.

’இப்போதைய சூழ்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் அது சரியாக இருக்குமா? கட்சிக்குள் இருக்கும் குழப்பமே இன்னும் தீராத நிலையில் தேர்தல் வந்தால் எப்படி வேட்பாளர்களை அறிவிப்பது? இதெல்லாம் மீறி நாம் வேட்பாளரை நிறுத்தினாலும் மக்கள் மனநிலை எப்படி இருக்கும்னு சொல்ல முடியாது. ஏற்கெனவே ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் இருக்காங்கன்னு எல்லோரும் சொல்லிட்டு இருக்காங்க. உள்ளாட்சி தேர்தலில் நாம கணிசமான இடங்களை பிடிக்கலைன்னா அது நமக்கு மிகப்பெரிய பின்னடைவாகிடும். என்ன செய்யலாம்?’ என்று வேலுமணியிடம் ஆலோசித்திருக்கிறார் முதல்வர்.

அதற்கு அமைச்சர் வேலுமணி, ‘இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதே இன்னும் உறுதியாகாத நிலையில்… கட்சிக்குள் குழுக்கள் தொடரும் நிலையில் தேர்தல் நடந்தால் நிச்சயம் அது திமுகவுக்குத்தான் சாதகமாக அமையும். ஓ.பன்னீரிடம் இது தொடர்பாக பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும். தினகரன் தரப்பில் இருந்து நமக்கு பிரச்னை வராது. அதனால் பன்னீர் தரப்பை பக்குவமாக கையாளவேண்டும்’ என்று முதல்வரிடம் சொல்லியிருக்கிறார்.

கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி விரைவில் ஓ.பன்னீர் அணியில் இருந்து எடப்பாடிக்கு அணிக்குத் திரும்புகிறார். இதை வேலுமணியிடம் குறிப்பிட்ட முதல்வர் மீதமிருப்பவர்களை திருப்பூர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா முடிந்தபிறகு பேசி சரிசெய்துவிடவேண்டும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் இதுபற்றி அமைச்சர் செங்கோட்டையனிடமும் முதல்வர் பேசியிருக்கிறார். அணிகள் இணைப்புக்கு பன்னீர் அணி சம்மதிக்க வில்லை என்றால்… சட்டமன்றத்தில் செயல்படுவதுபோல, அதாவது இரண்டு அணிகளாக இருந்தாலும் கூட்டணி கட்சிகள் போல இடங்களை பேசி பகிர்ந்து தேர்தலை சந்திக்கலாம் என்பதுதான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கும் புதிய யோசனை. அதற்கு பன்னீர் ஒத்து வருவாரா என்பதுதான் இப்போதைய கேள்வி. ஆக, நாளை திருப்பூரில் நடக்கவிருக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்குப் பிறகு அணிகள் இணைப்பு அல்லது அணிகள் கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தை தொடங்கும்!” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டதுடன் ஷேரும் செய்தது ஃபேஸ்புக்.

தொடர்ந்து மெசேஜ் ஒன்றையும் தட்டிவிட்டது வாட்ஸ் அப்.

“கமல் எது பேசினாலும் அதற்கு பதில் சொல்ல வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தி இருந்தார். ஆனால், அமைச்சர்கள் அதை கேட்கவில்லை. நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், டெங்கு காய்ச்சல் தொடர்பாக அவர் ஒரு ட்விட் செய்ய… மீடியாக்கள் உடனடியாக அமைச்சர்களிடம் கருத்துக்களை கேட்க போன் போட.. அவர்களும் ஆர்வக் கோளறில் மீண்டும் கமலுக்கு பதில் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். அமைச்சர் ஜெயகுமார்தான் கமலுக்கு பதில் சொல்வதில் முதல் நபராக இருக்கிறார். ‘டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு எடுத்த விளம்பர படத்தில் கமல் பொண்ணைத்தான் நடிக்க வெச்சிருக்கோம். அதெல்லாம் அவருக்கு தெரியாதா? அவருக்கு பதில் சொல்றது நம்ம வேலை இல்லை. அதுக்காக அவரு பேசுறதை எல்லாம் கேட்டுட்டு அமைதியாகவே போய்ட முடியுமா’ எனவும் கேட்டிருக்கிறார் ஜெயகுமார். “ என்பதுதான் அந்த மெசேஜ்.

அதை ஃபேஸ்புக் காப்பி செய்து ஷேர் செய்துவிட்டு சைன் அவுட் ஆனது.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *