~”ஜெயலலிதா பிறந்தநாளன்று அறிவிப்பேன்” : ஜெ.தீபா

public

எம்.ஜி.ஆர். பிறந்த தினமான இன்று அரசியல் பிரவேசம் செய்வதாக அறிவித்த ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அறிவித்தபடி இன்று அரசியலுக்கு வந்துள்ளார்.

நேற்று தீபா வீட்டின் முன்பாகத் திரண்ட தொண்டர்களிடம் பேசிய தீபா, ‘உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்வேன்’ என்று அறிவித்தநிலையில், இன்று காலை 6 மணிக்கு வீட்டிலிருந்து வெளியில் வந்த தீபா அவரது வீட்டின் முன்னால் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து, காலை 9 மணிக்கு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தச் சென்றபோது அங்கு ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த அவரின் ஆதரவாளர்கள் ‘இளைய புரட்சித்தலைவி தீபா அம்மா வாழ்க’ என்று கோஷமிட்டு வரவேற்பு கொடுத்தனர். அவர்கள் அனைவரின் கைகளில் அதிமுக கொடியை ஏந்தியிருந்தனர்.

தீபா படம் பொறித்த அதிமுக கொடியை பலரும் வைத்திருந்தனர். அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி தீபா காரிலிருந்து இறங்கினார். முதலில் எம்.ஜி.ஆர். சமாதியில் அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். ‘அம்மா அரசியலுக்கு வாருங்கள்’ என்று கோஷங்களை எழுப்பியபடி ஆயிரக்கணக்கானவர்கள் மொய்க்க தீபாவால் நகரவும் முடியவில்லை, காரிலும் ஏற முடியவில்லை. ஒருவழியாக காரில் ஏறிக் கிளம்பினார். அங்கு ஏற்பட்ட கடுமையான நெரிசலில் சிக்கிய சிலர் பெண்களும் ஆண்களும் கிழேவிழ சூழல் பதட்டமானது.

இந்தக் கூட்டத்தை விலக்கி விடவோ, முறைப்படுத்தவோ காவலர்கள் எவரும் அங்கு இல்லாதநிலையில், கோபமடைந்த தீபா ஆதரவாளர்கள் எம்.ஜி.ஆர். சமாதியின் எதிரே அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் அடியோடு போக்குவரத்து தடைபட்டதோடு, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதிலும் போலீசாருக்கு சிரமங்கள் ஏற்பட்டன. பாரிமுனை – சாந்தோம் இடையே போக்குவரத்து சுமார் ஒன்றரை மணி நேரம் முடங்கியது. நீண்டநேரத்துக்குப் பிறகே தீபா ஆதரவாளர்கள் சமரசமாகி கலைந்து சென்றனர். அதன்பிறகு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து கொஞ்சம் கொஞ்சமாக சீரானது. பின்னர் தி.நகரில் உள்ள தன் வீட்டிற்குச் சென்ற தீபா அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் முன்னிலையில் பேசினார். அப்போது “ அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” என்ற குறளுடன் தன் உரையைத் துவங்கிய தீபா “ புரட்சி தலைவர் எ.ஜி.ராமச்சந்திரனும் புரட்சி தலைவி ஜெயலலிதாவும் மக்களுக்காக அயராது உழைத்தவர்கள். ஜெயலலிதாவின் சொத்துகளுக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. இன்று முதல் எனது புதிய பயணத்தை துவங்குகிறேன். ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் படி இன்று முதல் புதிய பயணத்தை துவங்குகிறேன். ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்றும் விதத்தில் அனைவரும் களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். எனக்கு ஆதரவளிக்கும் மக்கள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி. ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 அன்று எனது அரசியல் பயணம் குறித்து அறிவிப்பேன். மக்களின் கருத்தையும் தொண்டர்களின் கருத்தையும் கேட்டறிந்த பின் என் அரசியல் பயணம் குறித்து அறிவிப்பேன். மக்களுக்காக பணியாற்ற நான் காத்திருக்கிறேன்”. என்று பேசினார். அப்போது சில ஊடகவியலாளர்கள் சசிகலா தொடர்பாக கேள்வி எழுப்பிய போது அது தொடர்பாக பதிலளிக்க மறுத்து விட்டார் தீபா.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *