சிறப்புக் கட்டுரை: ரஜினிகாந்த் காவல் துறையின் ரட்சகரா?

public

ரவிக்குமார்

காவல் துறையின் ரட்சகராகத் தன்னைக் கருதிக்கொண்டு அண்மைக் காலமாக ரஜினிகாந்த் பேசிவருகிறார். “வன்முறையின் உச்சகட்டமே சீருடை அணிந்த காவலர்கள் தாக்கப்படுவதுதான். இத்தகைய வன்முறைக் கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லையென்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள்மீது கை வைப்பவர்களைத் தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்ற வேண்டும்” என கடந்த 11.04.2018 அன்று அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்த நேரத்தில் காவலர் ஒருவர் தாக்கப்பட்ட காட்சி கொண்ட வீடியோவைத் தனது ட்வீட்டுடன் அவர் இணைத்திருந்தார். தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போதும் அதே கருத்தை ஆவேசத்தோடு அவர் கூறியதைப் பார்த்தோம். தமிழ்நாட்டில் காவல் துறையினருக்கு அவர் மட்டுமே ஆதரவாக இருப்பது போலவும், மற்றவர்கள் எல்லோரும் அவர்களை எதிரிகளாகப் பார்ப்பது போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்க அவர் முயற்சி செய்கிறார்.

காவல் துறையினரை ஆதரிப்பது என்பது அவர்களுடைய நியாயமான ஜனநாயக உரிமைகளை அங்கீகரிப்பதாகும். தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றும் காவலர் முதல் டிஎஸ்பி வரை பலதரப்பட்ட நிலையில் இருப்பவர்களுக்குப் பல்வேறு விதமான பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றைக் களைவதற்கு ஆட்சியாளர்கள் போதிய கவனம் செலுத்துவதில்லை. அதைப் பற்றியெல்லாம் ரஜினிகாந்த் ஒருபோதும் பேசியதில்லை. அந்தப் பிரச்சினைகள் அவருக்குத் தெரிந்திருக்குமா என்பதும் புரியவில்லை.

**காலியாக இருக்கும் பணியிடங்கள்**

தமிழ்நாட்டில் தற்போதுள்ள போலீஸ் – பொதுமக்கள் விகிதம் என்பது திருப்திகரமானதாக இல்லை. 01.01.2015 நிலவரப்படி தமிழ்நாட்டில் 505 பேருக்கு ஒரு போலீஸ் என்பது அங்கீகரிக்கப்பட்ட அளவாகும். ஆனால், 609 பேருக்கு ஒரு காவலர் என்ற அளவில்தான் இங்கே போலீஸ் எண்ணிக்கை இருக்கிறது. (http://bprd.nic.in/WriteReadData/userfiles/ file/201607121235174125303Final DATABOOKSMALL2015.pdf ) 2016 ஜூலை 26இல் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 135,830; ஆனால் இருப்பதோ 112,649. எனவே 23181 காவலர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன என்று தெரிவிக்கப்பட்டது.

காவல் துறையில் பணிகள் உரிய விதத்தில் நிரப்பப்படாமல் இருப்பது அவர்கள்மீதான பணிச்சுமையை அதிகப்படுத்துகிறது.

**ஊதியத்தில் உள்ள முரண்பாடு**

தமிழ்நாட்டில் காவல் துறையினருக்கு வழங்கப்படும் அடிப்படை ஊதியம் என்பது கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வழங்கப்படுவதைவிட மிகமிகக் குறைவாகும். தமிழ்நாட்டில் கான்ஸ்டபிள் பதவிக்கு அடிப்படை ஊதியம் 5,200 ரூபாய். அது கர்நாடகாவில் 11,600 ஆகவும், ஆந்திராவில் 8,440 ஆகவும் கேரளாவில் 10,480 ஆகவும் உள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு தமிழ்நாட்டில் அடிப்படை சம்பளம் 9300 ரூபாய். அது கர்நாடகாவில் 20,000, ஆந்திராவில் 14,860, கேரளாவில் 16,980. இன்ஸ்பெக்டர் பதவியிலும் மிகப் பெரிய ஊதிய முரண்பாடு காணப்படுகிறது.

தமிழ்நாட்டில் இன்ஸ்பெக்டர் பதவிக்கு அடிப்படை சம்பளம் 9,300, அது கர்நாடகாவில் 21,600, ஆந்திராவில் 16,150, கேரளாவில் 20,740 ஆக உள்ளது. தமிழ்நாட்டில் துணை கண்காணிப்பாளர் பதவி வகிக்கும் ஒருவர் பெறுகிற அடிப்படை ஊதியத்தைப் போல சுமார் இரண்டு மடங்கு ஊதியம் கர்நாடகாவில் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 15,600, கர்நாடகாவில் 28,100, ஆந்திராவில் 20,680, கேரளாவில் 24,040 ரூபாய். இந்த விவரங்கள் யாவும் மத்திய அரசின் காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் (Bureau of Police Research and Development – BPR&D) 2016ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் உள்ளதாகும். தென் இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில்தான் காவல் துறையினருக்கு மிகக் குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது.

**பணி நிலையில் பாகுபாடு**

காவல் துறை பணி என்பது மற்ற வேலைகளைப் போல எளிதான ஒன்று அல்ல. மிகுந்த மனஅழுத்தத்தையும் சோர்வையும் உண்டாக்கக் கூடியதாகும். ஆனால் அத்தகைய கடினமான பணி செய்பவர்களுக்குப் பணி நேரம் என்பது வரையறுக்கப்படவில்லை. எட்டு மணி நேர வேலை என்பது இந்தியாவின் எல்லாத் துறைகளிலும் நடைமுறைக்கு வந்து அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேல் ஆகிறது. ஆனால் காவல் துறையில் இருப்பவர்களுக்கு 24 மணி நேரமும் பணி நேரமாகக் குறிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கும் எட்டு மணி நேர வேலை என்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.

**வழங்கப்படாத வார விடுமுறை**

எந்த ஒரு வேலை செய்பவருக்கும் வார விடுமுறை என்பது உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது. பல வேலைகளில் வாரத்துக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது. ஆனால் காவல் துறையினருக்கு வார விடுமுறை என்பது கிடையாது. காவல் துறையில் பணியாற்றுவோருக்கு ஓய்வு என்பது, மிக மிக முக்கியமானது. ஆனால் அந்த ஓய்வு நேரத்தில் அவர்கள் பணியில் இருப்பதற்காக ஈட்டுத் தொகை ஒன்று தரப்படுகிறது (Extra Time Remuneration –ETR). அவர்கள் வேலை செய்யும் கூடுதல் நேரத்துக்கும் அந்தத் தொகைக்கும் தொடர்பே இல்லை. காவல் துறையில் பணியாற்றுவோருக்கும் குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒரு நாள் ஓய்வு என்பதைக் கட்டாயமாக்கிட வேண்டும். இந்தக் கோரிக்கை நீண்ட காலமாகக் காவல் துறையினரால் எழுப்பப்பட்டாலும் அது நிறைவேறாமலேயே இருக்கிறது.

**‘ஆர்டர்லி’ என்னும் அவமானம்**

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் காவல் துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஆர்டர்லி’ என்னும் முறை இன்னும் நடைமுறையில் உள்ளது. இந்த முறையை ஒழித்து 1979ஆம் ஆண்டே அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக இப்போதும் உயர் அதிகாரிகளின் வீடுகளில் பணி புரிவதற்குக் காவலர்களைப் பயன்படுத்துகிறார்கள். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. அங்கே அரசு தரப்பில் பதிலளித்த வழக்கறிஞர் ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் 1979க்குப் பிறகு எவரும் ஆர்டர்லியாக நியமிக்கப்படவில்லையென்றும் தெரிவித்தார். ஆனால் நீதிபதி கிருபாகரன் அவர்களோ அது பொய்யான தகவல் என்றும் இன்னும் வேறு பெயர்களில் அது நடைமுறையில் இருப்பது தமக்குத் தெரியும் என்றும், எனவே சரியான தகவலைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். பணியில் உள்ள உயர் அதிகாரிகள் ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் ஆகியோரின் வீடுகளில் ஓட்டுநராகப் பணியாற்றுகிற காவலர்களின் எண்ணிக்கையைத் தெரிவிக்க வேண்டுமென்றும், உயர் அதிகாரிகளின் வீடுகளுக்கு உதவியாளர்களை நியமிப்பதற்காக 2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை ஏன் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

**சங்கம் சேரும் உரிமை**

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19 (1) (c) இந்தியக் குடிமக்களுக்கு சங்கம் சேரும் உரிமையைக் கொடுத்திருக்கிறது. அரசுப் பணியில் இருக்கும் எல்லா விதமான ஊழியர்களும் தங்களது ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வென்றெடுப்பதற்காகச் சங்கங்களை அமைத்துள்ளனர். ஆனால் ஒழுங்கு, கட்டுப்பாடு ஆகிய காரணங்களைச் சொல்லி சங்கம் சேரும் உரிமையைக் காவல் துறையினருக்கு மட்டும் அரசு தொடர்ந்து மறுத்துவருகிறது. அதனால்தான் அவர்கள் தமது நியாயமான கோரிக்கைகளைக்கூட அரசிடம் எடுத்துச்சொல்ல வழியற்றவர்களாக உள்ளனர். ஓய்வு பெற்ற சில காவலர்கள் அவ்வப்போது இதைப் பற்றிப் பேசினாலும், அவர்களின் கோரிக்கையை எவரும் வெளிப்படையாக ஆதரிப்பதில்லை.

மதுரை மேலூரைச் சேர்ந்த காவலர் செந்தில்குமார் என்பவர் காவலர்கள் சங்கம் வைத்துக்கொள்ள அனுமதி வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார். ஆனால், உயர் நீதிமன்றம் அதை 2016 ஜூலை மாதத்தில் தள்ளுபடி செய்துவிட்டது. “1966ஆம் வருடத்தைய காவல் துறை (உரிமைகள் கட்டுப்பாடு) விதிகளில், விதி எண் 8இன்படி, சங்கம் அமைக்க அனுமதி அளிப்பதோ, மறுப்பதோ காவல் துறைத் தலைவரின் (டிஜிபி) அதிகாரத்துக்குட்பட்டதாகும். அதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை” எனக் கூறி அந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி எம். ஜெயச்சந்திரன் தள்ளுபடி செய்துவிட்டார்.

**பெருகிவரும் தற்கொலைகள்**

காவலர்கள் பணி அழுத்தம் காரணமாக வேலையை விட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிடும் போக்கு அண்மைக் காலமாக அதிகரித்துவருகிறது. 2008ஆம் ஆண்டு 608 பேர் அப்படிப் பணியை விட்டு ஓடினர். 2017இல் அது 1,039 ஆக உயர்ந்துள்ளது. அது மட்டுமின்றி உயர் அதிகாரிகள் தரும் நெருக்கடிகள் காரணமாகவும் பணிச்சுமை காரணமாகவும் மன அழுத்தம் ஏற்பட்டு காவலர்கள் தற்கொலை செய்துகொள்வது அண்மைக் காலமாக அதிகரித்துவருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 300 பேர் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். பணியில் இருக்கும் காவலர்கள் பல்வேறு காரணங்களால் உயிரிழப்பதும் அதிகரித்துக்கொண்டே போகிறது. கடந்த 10 ஆண்டுகளில் சுமார் மூவாயிரம் பேர் அவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

**உளவுத் துறை தோல்வி அடைந்துவிட்டதா?**

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டம் குறித்துப் பேசும்போதெல்லாம் தமிழ்நாட்டில் உளவுத் துறை தோல்வி அடைந்துவிட்டது என ரஜினிகாந்த் கூறுகிறார். அப்படிப் பேசுவது உளவுத் துறையின் மனத் திடத்தைப் பலவீனப்படுத்தாதா? அது காவல் துறை மீதான ஆரோக்கியமான விமர்சனமா?

எதன் அடிப்படையில் உளவுத் துறை தோல்வி அடைந்துவிட்டது என அவர் கூறுகிறார்? “சமூக விரோதிகள், விஷக் கிருமிகள்” போராட்டத்தில் ஊடுருவிவிட்டனர் என்று அவர் கூறியபோது, “உளவுத் துறைக்கே தெரியாத அந்த ரகசியம் உங்களுக்கு எப்படித் தெரியும்?” என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். “அது எனக்குத் தெரியும்” எனப் பதில் சொன்னார் ரஜினிகாந்த். மாநில உளவுத் துறைக்குத் தெரியாத தகவலை அவருக்கு மத்திய உளவுத் துறை கூறியதா? அப்படிக் கூறும் அளவுக்குச் சட்டத்தை மீறிய அதிகாரம் கொண்டவராக ரஜினிகாந்த் இருக்கிறாரா என்ற கேள்விகள் நமக்கு எழுகின்றன.

**காவல் படையா, கூலிப் படையா?**

காவல் துறையினரின் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால் அவர்களது ஜனநாயக உரிமைகள் தொடர்பான கோரிக்கைகளை ஆதரிப்பதற்கு ரஜினிகாந்த் முன்வர வேண்டும். கஷ்டப்படும் காவலர்களுக்கு ஆதரவாக நிற்பதற்குப் பதிலாக மக்கள் மீது வன்முறையைச் செலுத்தும் காவலர்களை மட்டுமே ரஜினிகாந்த் ஆதரித்துப் பேசுகிறார். காவல் துறையினரின் ஜனநாயக உரிமைகளை அங்கீகரிக்காமல் அவர்களுடைய அத்துமீறல்களுக்கு வக்காலத்து வாங்குகிறார். இத்தகைய போக்கு காவல் துறையைக் கட்டுப்பாடும் ஒழுங்கும் கொண்ட படையாக வைத்திருக்க உதவாது, மாறாக சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படுவதற்கே அவர்களை ஊக்குவிக்கும்.

ரஜினிகாந்தின் நிலைப்பாடு காவல் துறையினருக்கும் உரிமைகள் இருக்கின்றன என்பதை அங்கீகரிக்கும் ஜனநாயகத் தன்மையைக் காட்டவில்லை, மாறாக, தன்னை எதிர்ப்பவர்கள்மீது போலீஸை ஏவிவிடுகிற, வன்முறை ருசி கொண்ட ’கூலிப்படையாக’ போலீஸை மாற்ற விரும்புகிற அதிகாரத்துவ மனோபாவத்தையே காட்டுகிறது. ரஜினிகாந்தின் பேச்சினால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதைவிட சீர்கெடுவதற்கே வாய்ப்பு அதிகமாக உள்ளது.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: முனைவர் ரவிக்குமார் அரசியல், கலை, இலக்கிய விமர்சகர். மணற்கேணி ஆய்விதழின் ஆசிரியர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர். இவரைத் தொடர்புகொள்ள: adheedhan@gmail.com)

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *