சிறப்புக் கட்டுரை: இந்தியப் பொருளாதாரமும் வேலைவாய்ப்பும்!

public

நா. ரகுநாத்

நாட்டில் வேலையின்மை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2017-18இல் 6.1 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்த தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் (NSSO) அறிக்கை, “Periodic Labour Force Survey 2017-18”, அரசிடம் சென்றாண்டு இறுதியில் சமர்ப்பிக்கப்பட்டது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA- II) அரசு பலமாதங்களாக இந்த அறிக்கையை வெளியிடாமலேயே வைத்திருந்தது. ஆனால், இந்த ஆண்டு ஜனவரி மாதம் பிசினஸ் ஸ்டாண்டர்ட் எனும் வணிகப் பத்திரிக்கையைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் இந்த அறிக்கையிலுள்ள முக்கியமான தரவுகளைப் பெற்று வெளியிட்டதும் அது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பூதாகரமாக வளர்ந்துள்ள வேலையின்மைப் பிரச்சனை 2019 பொதுத்தேர்தலில் முக்கியப் பேசுபொருளாகி, தேர்தல் முடிவுகளை பெரிதளவில் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது இம்மியளவும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.

இந்தியாவில் வேலையின்மை என்பது பொதுவாகவே 2-3 விழுக்காட்டுக்குள்தான் இருக்கும். அது 6.1 விழுக்காடாக உயர்ந்தது என்பதுதான் தலைப்புச் செய்தி. ஆனால், நாட்டின் உழைப்புப் படையின் நிலையைப்பற்றி ஆய்வு செய்து NSSO சமர்ப்பித்த அந்த அறிக்கையின் முழுவிவரத்தையும் பெற்று, அதனை அலசி ஆராய்ந்துள்ள பொருளியல் ஆய்வாளர்கள், கவலையளிக்கும் பல முக்கியப் போக்குகளை சமீபத்தில் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

ஒரு நாட்டில் 15 வயதிற்கு மேற்பட்டவர்களில் எத்தனை பேர் வேலையில் இருக்கின்றனர் அல்லது வேலை தேடிக்கொண்டிருக்கின்றனர் என்பதை Labour Force Participation Rate (LFPR) என்பார்கள். 2011-12இல் கிட்டத்தட்ட 56 விழுக்காடாக இருந்த LFPR, 2017-18இல் 49.8 விழுக்காடாகக் குறைந்துள்ளது. 2017-18இல் 15 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் வெறும் 23.3 விழுக்காடு பெண்களே உழைப்புபடையில் இருந்தனர்; இது2011-12இல் 31.2 விழுக்காடாக இருந்தது. 15-29 வயதுப்பிரிவில் LFPR குறைந்தால், மேற்படிப்பு மற்றும் கூடுதல் தொழிற்பயிற்சி பெற்று திறன்-மேம்பாட்டிற்காக அவர்கள் உழைப்புப்படைக்குள் நுழையாமல் இருக்கிறார்கள் என்ற வாதம் பொருத்தமானதாக இருக்கும். ஆனால் ஊரகம், நகரம் இரண்டிலும் 30 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் LFPR சரிந்துள்ளது எனும்போது நிச்சயமாக அதற்கு வேறுபல காரணிகள் இருக்கக்கூடும்.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 15 வயதிற்கு மேற்பட்டவர்களில் எத்தனை பேர் ஏதேனும் ஒரு வேலை அல்லது தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள் (worker to population ratio) என்று பார்த்தால், 2011-12 இல் 54.7 விழுக்காடாக இருந்த அவர்களின் பங்கு, 2017-18இல் 46.8 விழுக்காடாகக் குறைந்துள்ளது. அதாவது, வேலைபார்க்கும் வயதில் உள்ள மக்கள்தொகையில் பாதிக்கும் குறைவானவர்களே வேலையில் ஈடுபட்டிருந்தனர். குழந்தைகள், மாணவர்கள், முதியோர், வேலையேதும் தேடாதவர்கள் போன்றவர்களின் பங்கு 50 விழுக்காட்டுக்கும் அதிகம்.

வேலையில் அமர்ந்திருப்பவர்களிலும், 75 விழுக்காட்டினர் சுயதொழில் செய்பவர்கள் மற்றும் தினக்கூலி வாங்கும் சாதாரண முறைசாராத் தொழிலாளர்கள். நான்கில் ஒரு பங்கு தொழிலாளர்களே மாதாமாதம் சம்பளம் வாங்கும் வேலையில் இருந்தது தெரியவருகிறது. இதில் நாம் இரண்டு முக்கியமான விஷயங்களை கவனிக்க வேண்டும். முதலாவதாக, சுயதொழில் செய்பவர்களில் வெறும் 4 விழுக்காட்டினரே வெளியாட்களை வேலையில் அமர்த்தி தொழில் நடத்துபவர்கள். அதாவது, அடுத்தவர்களுக்கு வேலைகொடுக்கும் சுயதொழில் செய்யும் தொழில் முனைவோரின் (job creators) பங்கு மிகவும் சொற்பம்.

**பாஜக ஆட்சியில் பலகோடி வேலைவாய்ப்புகள் உருவானதா?**

‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்’ என்று சொல்லி ஆட்சியைப் பிடித்தவர்கள், நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருகவில்லை எனும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டபோது, முத்ரா(MUDRA) கடன் வாங்கி தொழில் செய்யும் சிறுகுறு தொழில்களும், சுயதொழில் செய்யும் தொழில் முனைவோரும் பலகோடி வேலைகளை உருவாக்கிவிட்டார்கள் என்றனர். அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. சுயதொழில் செய்து பிழைப்பவர்களின் சராசரி மாத வருமானமே ரூ. 8,000 – ரூ. 10,000 ஆக இருக்கும்போது, அவர்களால் தங்கள் குடும்பத்தை சரியாக கவனித்துக்கொள்ள இயலாத அவலநிலையே நிலவுகிறது. இதில் புதிய வேலைகளை அவர்கள் எங்கு, எப்படி உருவாக்குவது?

இரண்டாவதாக, மாதாமாதம் சம்பளம் வாங்கும் தொழிலாளர்களிலும், பெரும்பான்மையானவர்களுக்கு அவர்கள் வேலைக்கு உத்தரவாதம் வழங்கும் எழுதப்பட்ட ஒப்பந்தமோ (written job contract), சமூகப் பாதுகாப்புப் பயன்களோ இல்லாத நிலையே நிலவுகிறது. 2011-12 இல் 64.7 விழுக்காடாக இருந்த அவர்களின் பங்கு, 2017-18இல் 71.1 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இருக்கும் வேலைகளில் ஓரளவிற்கு நல்ல வருமானம், பாதுகாப்பை உறுதி செய்வதாக சொல்லப்படும் regular wage/salaried வேலைகளும் நிரந்தரமான, சமூகப்பாதுகாப்பு வழங்கும் வேலைகளாக இல்லாதிருப்பது, நாட்டில் தொழிலாளர் நலன் குறித்து மிகப்பெரிய கேள்விகளை எழுப்புகிறது.

சுயதொழில், கூலித் தொழில், மாதாமாதம் சம்பளம் வாங்கும் வேலை – இந்த மூன்று வேலைப்பிரிவுகளிலுமே, பெண் தொழிலாளர்களைவிட ஆண் தொழிலாளர்களும், ஊரகத் தொழிலாளர்களை விட நகர்ப்புறத் தொழிலாளர்களுமே அதிக வருமானம் ஈட்டுகின்றனர். தனியார்துறையில் புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் தொழிலாளர் நலன் எந்த அளவில் இருக்கின்றன என்பதையே இந்த போக்குகள் நமக்கு தெரிவிக்கின்றன.

**சரிந்துவரும் பொதுத் துறை வேலைவாய்ப்புகள்**

மத்திய பொதுத்துறை நிறுவனங்களில்(Central Public Sector Enterprises) வேலைவாய்ப்புகள் மற்றும் மத்திய, மாநில அளவில் கல்வி, சட்ட-ஒழுங்கு, சுகாதாரம், அரசு அலுவலகங்கள் போன்ற இதர பொதுத் துறை வேலைவாய்ப்புகள் இரண்டுமே சரிந்துகொண்டே வருகின்றன. ஒப்பந்தத் தொழிலாளர்களைச் சேர்க்காமல், மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் 2006-07 இல் 16.1 லட்சம் ஊழியர்கள் இருந்தனர்; இந்த எண்ணிக்கை 2016-17இல் 11.3 லட்சமாகக் குறைந்தது.

ஜனவரி 2006இல், மத்திய அரசாங்க ஊழியர்கள் 32.72லட்சம்; ஜனவரி 2014இல், மத்திய அரசாங்க ஊழியர்கள் 33 லட்சம். அதாவது, 2006-2014 காலத்தில் வெறும் 28,000 மத்திய அரசாங்க வேலைகளே உருவாக்கப்பட்டன. 1991-92 இல் மத்திய, மாநில அளவில் அனைத்து பொதுத்துறை வேலைகளிலும் மொத்தம் 1.92 கோடி நபர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர்; 2011-12 இல் இவர்களின் எண்ணிக்கை 1.76 கோடி. ஆக, இருபது ஆண்டுகளில் 16 லட்சம் பொதுத்துறை வேலைகள் காணாமல் போயின.

**விஸ்வரூபம் எடுத்த வேலையின்மை பிரச்சினை**

2018-19 நிதியாண்டில் நாடாளுமன்றத்தில் மத்திய, மாநில பொதுத்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்கள் குறித்து பெறப்பட்ட தகவல்கள், சென்றாண்டு மட்டும் கிட்டத்தட்ட 24 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதாகத் தெரிவித்தன. யதார்த்தம் இதுவாக இருக்க, பல மாநிலங்களில் ஆதிக்க சாதியினர் அரசாங்க வேலைகளில் தங்களுக்கும் இட-ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாகவே போராடி வருகின்றனர். செல்வாக்கு மிகுந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அரசாங்க வேலைகளில் தங்களுக்கு இட-ஒதுக்கீடு வேண்டும் என்று கோரும்போது நாட்டில் வேலையின்மைப் பிரச்சனை எந்த அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. புது வேலைவாய்ப்புகளை உருவாக்காதது ஒருபுறம் இருக்க, இருக்கும் பணியிடங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாமல் இருப்பதும் மத்திய, மாநில அரசுகளின் மிகவும் மோசமான அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றன.

சென்ற ஆண்டு தமிழக அரசு, செலவைக் குறைக்கும் முயற்சியில் மாநிலத்தின் பொதுத்துறையில் தேவையற்ற பணியிடங்களைக் கண்டறிந்து களைவதற்கான ஒரு நபர் கொண்ட Staff Rationalisation Committee எனும் குழுவை அமைத்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து அரசாங்க ஊழியர்கள் போராடினர். சென்ற வாரம், தெலங்கானா மாநிலத்தில் போராட்டம் நடத்திவந்த போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களை, போராட்டத்தைக் கைவிட்டு வேலைக்குத் திரும்பாவிட்டால் அவர்களாகவே விரும்பி வேலையைவிட்டுச் சென்றுவிட்டதாக எடுத்துக்கொள்ளப்படும் என்று அந்த மாநில முதல்வர் சற்றும் அசைந்துகொடுக்காமல் பேசியதைப் பார்த்தோம். இன்னொருபுறம், ஒரே நாளில் 1.25 லட்சம் புதிய அரசு வேலைகளை உருவாக்கி சாதனை படைத்ததாக ஆந்திரா மாநில முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி பெருமிதம் கொண்டதும் சென்ற வாரம் நடந்தது.

அதாவது, கல்வி, சுகாதாரம், சட்ட-ஒழுங்கு, பாதுகாப்பு, பல்வகை உட்கட்டுமான வசதிகள் போன்ற பலவற்றையும் வழங்குவது ஒரு மக்கள் நல அரசாங்கத்தின் கடமை. அந்த கடமையை செவ்வனே செய்வதற்கு அரசு பொதுத்துறையில் பெருமளவிற்கு வேலைகளை உருவாக்க வேண்டும். இந்தியாவின் 130 கோடி மக்கள்தொகையில் ஒவ்வொரு ஆயிரம் நபர்களுக்கு வெறும் 16 பொதுத்துறை ஊழியர்களே உள்ளனர் (public employees per thousand population) என்பது 2015ஆம் ஆண்டு நிலவரம். மக்கள் சீனத்தில் இது 57 ஆகவும், பிரேசில் நாட்டில் இது 111 ஆகவும், நார்வே மற்றும் சுவீடன் போன்ற முன்னேறிய நாடுகளில் இது 150 ஆகவும் இருக்கிறது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் செலவுகள் அதிகரிக்கும் எனும் காரணத்தைக் கூறி பொதுத்துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் முனைப்பு காட்டாமல் தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதை, அவர்கள் மக்கள்நலன்மீது எந்த அளவிற்கு அக்கறை கொண்டுள்ளார்கள் என்பதன் பிரதிபலிப்பாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

மின்னஞ்சல் முகவரி: raghind@gmail.com

கட்டுரைக்கு உதவியவை…

1. https://www.theindiaforum.in/article/what-periodic-labour-force-survey-telling-us-about-employment-and-unemployment-india

2. https://www.livemint.com/news/india/stark-reality-of-the-self-employed-11569864413483.html

3. https://www.thehindubusinessline.com/opinion/columns/the-withering-tren-of-public-employment-in-india/article28750003.ece

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *