சிஏஏ: கருத்து கேட்ட பத்திரிகையாளர்கள் மீது வழக்கு!

public

சிஏஏ தொடர்பாக இலங்கைத் தமிழர்களிடம் கருத்துக் கேட்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம், என்.ஆர்.சி ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து எந்த விஷயமும் இடம்பெறாதது தமிழகம் மத்தியில் கடும் எதிர்ப்பை உண்டாக்கியது. இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக இலங்கைத் தமிழர்களிடம் கருத்துக் கேட்க சென்ற பத்திரிகையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 இடங்களில் அகதிகள் முகாம் செயல்பட்டு வருகிறது. ஜுனியர் விகடன் கன்னியாகுமரி மாவட்டச் செய்தியாளர் சிந்து, புகைப்படக்காரர் ராம்குமார் ஆகியோர் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி கோழிவிளையிலுள்ள இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாமுக்குச் சென்றனர்.

இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வேண்டுமா அல்லது வேண்டாமா அல்லது இரட்டை குடியுரிமை வேண்டுமா உள்ளிட்ட கேள்விகளுடன் சர்வே எடுக்க வந்துள்ளதாக அவர்களிடம் தெரிவித்துள்ளனர். இதற்கு அப்பகுதியின் ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும், அரசினை எதிர்த்து கருத்து தெரிவிப்பதால் ஏதேனும் பிரச்சினை ஏற்படலாம் என்று பாதி பேர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்த தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் தமிழரசி, அனுமதியின்றி கருத்து கேட்க வந்ததாக சிந்து மற்றும் ராம்குமார் மீது புகார் அளித்தார். அதன் பேரில் இருவர் மீதும் மார்த்தாண்டம் காவல் துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதுபோலவே களியக்காவிளை காவல் துறையினரும் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். இருவருக்கும் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பத்திரிகையாளர்கள் கருத்து கேட்க வந்துள்ள தகவல் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தாசில்தார் ஆகியோருக்கு தெரியவர அவர்கள் எஸ்.பி.க்கு இதுதொடர்பாக தகவல் தெரிவித்தனர். அவர் இதுதொடர்பாக கலெக்டர் பிரஷாந்த் வடநேரவியிடம் பேசியிருக்கிறார். அனுமதி வாங்காமல் எப்படி அகதிகள் முகாமுக்கு சென்று சர்வே எடுக்கலாம் என்று கூறி, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். அதன் பேரில்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட மூத்த பத்திரிகையாளர்கள் சிலர், “இதுவரையிலும் கன்னியாகுமரியில் இருந்த மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் பத்திரிகையாளர்களுடன் நல்லமுறையில் பழகுவர். ஆனால், தற்போதைய கலெக்டரான பிரஷாந்த் வடநேரா பத்திரிகையாளர்களுடன் எப்போதும் இணக்கத்தை கடைபிடித்ததில்லை. பத்திரிகையாளர்கள் தங்களது பணியினைத்தான் செய்கிறார்கள். எங்கேயும் சென்று அவர்கள் பிரச்சினையில் ஈடுபடவில்லை. அனுமதியின்றி சென்றுவிட்டார்கள் என்றால் எச்சரித்து அனுப்பியிருக்கலாம். ஆனால், கருத்து கேட்டதற்காக வழக்குப் பதிவு செய்வதெல்லாம் கொஞ்சம் கூட நியாயமில்லை. இதுதொடர்பாக நாளை ஆட்சியரை சந்தித்து முறையிட இருக்கிறோம்” என்று கூறினர்.

**பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு**

வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதித் தமிழன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “வழக்குக் கொடுமையை பார்க்கும்போது ஆங்கிலேய ஆட்சிக்காலத்தைப் போல வாய்ப்பூட்டு போடும் சட்டத்தை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினர் கையில் எடுத்துள்ளனர் எனக் கருதுகிறோம். இந்த வழக்கை கருத்துரிமைக்கு எதிரான செயலாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் கருதுகிறது.

இந்த எதேச்சதிகார மிரட்டல் வழக்கை கடுமையாக கண்டிப்பதுடன் உடனடியாக வாழ்க்கை திரும்பப் பெற வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்கள் செய்தியாளர் சிந்து மற்றும் புகைப்பட கலைஞர் ராம்குமாருக்கு அனைத்து வகையிலும் துணை நிற்போம். பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்கொள்வோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *