கொச்சியில் மெட்ரோ ரயில்: மோடி துவக்கி வைத்தார்!

public

கேரளா மாநிலத்தின் முதல் மெட்ரோ ரயில் சேவையை கொச்சியில் இன்று ஜூன் 17ஆம் தேதி காலை 11.15 மணிக்கு பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

மெட்ரோ ரயில் திட்டம் என்பது பெருநகரங்களில் வாகன நெரிசலை குறைப்பதற்காகக் கொண்டு வரப்பட்டதாகும். இதன் சேவை பெரிய நகரங்களில் மட்டுமே இருக்கிறது. மெட்ரோ மேன் என்று அழைக்கப்படும் இ.ஸ்ரீதரன். ஐ.இ.எஸ். அதிகாரிதான் இந்தியாவில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தவர். அதன் காரணமாக மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநராகவும் இவர் பணிபுரிந்து வருகிறார்.

இந்தியாவில் முதன் முதலில் மெட்ரோ சேவை 1984-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ஆரம்பிக்கப்பட்டது. அதையடுத்து, டெல்லி, மும்பை, அகமதாபாத், ஹைதராபாத், பெங்களூர், ஜெய்ப்பூர், குர்கான் மற்றும் சென்னை போன்ற இடங்களில் தற்போது மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது. இதில், குர்கானில் இயங்கும் மெட்ரோ ரயில் சேவை தனியாருக்குச் சொந்தமானது. ரேபிட் மெட்ரோ ரயில் குர்கான் என்ற நிறுவனம் இதை நிர்வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கேரளாவிலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கத் திட்டமிட்டு கொச்சி நகரில் முதல்கட்டமாக 25 கி.மீ. தூரத்துக்கு ரூ.5181 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் சேவைக்கான பாதைகள் அமைக்கப்பட்டு வந்தது. அதில் பலரிவட்டம் மற்றும் ஆலுவா இடையே 13 கி.மீ தூரத்துக்கான பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்ததையடுத்து, மெட்ரோ ரயிலின் வெள்ளோட்டமும் வெற்றிகரமாக நடத்திப் பார்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கேரளாவில் மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10.30-க்கு கொச்சியில் உள்ள ஐ.என்.எஸ் கருடா விமான தளத்தில் உள்ள விமான நிலையத்திற்குத் தனி விமானத்தில் வந்தார். கொச்சி வந்த பிரதமரை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் , ஆளுநர் சதாசிவம் ஆகியோர் வரவேற்றனர். பின்னர், கொச்சியில் இருக்கும் ஜவாஹர்லால் நேரு சர்வதேச மைதானத்தில் ஆலுவா முதல் எர்ணாகுளம் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் வர்த்தக சேவையை, இன்று ஜூன் 17ஆம் தேதி காலை 11.15 மணிக்குப் பிரதமர் மோடி கொடி அசைத்துத் துவக்கி வைத்தார். பின்னர் மெட்ரோ ரயிலில் பயணமும் செய்தார். பிரதமர் மோடியுடன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு, கேரள ஆளுநர் சதாசிவம், சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, எர்ணாகுளம் எம்.பி. கே.வி. தாமஸ், மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் இ. ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *