போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!

Published On:

| By Balaji

தொழிலாளர் நல ஆணையத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த 25 ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கங்களை தொழிலாளர் நல ஆணையம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.

அதன்படி, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் இன்று(பிப்ரவரி 27) தொழிலாளர் நலத் துறை இணை ஆணையர் லட்சுமிகாந்தன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டது. மேலும், போராட்டத்தின்போது பணிக்கு வராமல் இருந்த ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற நிபந்தனையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இடைக்கால நிவாரணம் ரூ.1000 வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நலன் கருதியும், சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்தும், போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் வாங்குவதாகவும், புதிய ஆட்சி அமைக்கப்பட்டதும், பேச்சுவார்த்தை தொடரும் எனவும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

**வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share