yஉட்கட்சி குழப்பம்: பதவி விலகிய பாஜக முதல்வர்!

politics

தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும்நிலையில், உத்தராகண்ட் முதலமைச்சரான பாஜகவின் திரிவேந்திரசிங் ராவத் பதவிவிலகினார். பொதுவெளிக்கு புதிதாக இருந்தாலும் அந்த மாநிலத்தைப் பொறுத்தவரை கடந்த சில நாள்களாகவே இது எதிர்பார்க்கப்பட்டதுதான்!

ஆளுநர் பேபி ராணி மௌர்யாவிடம் நேற்று (மார்ச் 9) மாலை 4 மணிக்கு ராவத் தன் விலகல்கடிதத்தை அளித்துவிட்டார். கடந்த ஞாயிறன்று தொடங்கிய உத்தராகண்ட் பாஜக பஞ்சாயத்து, இதன் மூலம் ஒரு முடிவுக்கு வந்தது.

ஆளுநரைச் சந்தித்த கையோடு, செய்தியாளர் சந்திப்புக்கும் ராவத் ஏற்பாடு செய்திருந்தார். கட்சி மேலிடம் சொன்னதால் பதவியிலிருந்து விலகியதாக அவர் கூறினார்.

உண்மைதான்..! உள்கட்சிப் பிரச்னையால் எழுந்த அதிருப்தியால்தான் ராவத் பதவிவிலகும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அதிருப்தி அவருக்கு அல்ல, அவர் மீது கட்சித் தலைமைக்கு!

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கவேண்டும் எனும் நிலையில், பாஜக ஆட்சி மீது வெளியில் சாதகமான நிலை இல்லை. கட்சியில் என்ன பிரச்னை என பாஜக மேலிடம் பார்த்தபோது, முதலமைச்சர் ராவத் மீது கட்சிக்குள்ளேயும் கடும் அதிருப்தி நிலவியதைப் பிடித்துக்கொண்டது.

கடந்த சனியன்று சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் ராமன் சிங், பாஜகவின் உத்தராகண்ட் பொறுப்பாளரான அமைப்புப் பொதுச்செயலாளர் துஷ்யந்த் கௌதம் இருவரையும் சிறப்புப் பார்வையாளர்களாக அனுப்பி, உத்தராகண்டில் நிலைமையை நேரில் கண்டுவருமாறு கூறியது, பாஜக தலைமை.

அதன்படி அவர்கள் இருவரும் உத்தராகண்டுக்குச் சென்று, அந்த மாநில பாஜகவின் முக்கியமான கருக்குழு உறுப்பினர்கள் எனப்படும் முக்கிய உள்வட்ட நிர்வாகிகளையும் மற்ற நிர்வாகிகளையும் சந்தித்து, அவர்களின் கருத்தை அறிந்தனர். அதைவைத்து கட்சித் தலைமைக்கு இருவரும் உத்தராகண்ட் நிலவரம் பற்றி அறிக்கையைத் தந்தனர்.

அந்த அறிக்கையை வைத்து திங்களன்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் நட்டா, பாஜகவின் அமைப்புப் பொதுச்செயலாளர் பி .எல். சந்தோஷ் ஆகியோர் ஆலோசனை செய்தனர். துஷ்யந்த் கௌதமும் அதில் கலந்துகொண்டார்.

டெல்லியிலிருந்து சென்ற மேலிடப் பார்வையாளர்களைச் சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், ராவத்தைப் பற்றி கொட்டித்தீர்த்துவிட்டார்கள்.

”உத்தராகண்டில் ஆட்சியதிகாரம் வலுவாகத்தான் இருக்கிறது; ஆனால் எங்களுடைய கருத்துகளுக்கோ கோரிக்கைகளுக்கோ முதலமைச்சர் ராவத் மதிப்பு தருவதில்லை; நாங்கள் கேட்பதைச் செய்தால்தானே நாளை தொகுதிக்குள் போய் வாக்கு கேட்கமுடியும்? வெளிப்படையாகச் சொல்லவேண்டும் என்றால், இப்போதைக்கு நாங்கள் போய் வாக்கு கேட்டு நின்றால், துரத்திவிடுகிற அளவுக்குதான் எங்களுடைய நிலைமை இருக்கிறது.” என எல்லா எம்.எல்.ஏ.களும் ஏக குரலில் சொல்ல, அவர்களுக்கு அங்குள்ள நடப்புகளைப் பற்றி ஒரு சித்திரம் கிடைத்துவிட்டது.

தெளிவான செய்தியோடு இருவரும் டெல்லிக்குப் பறந்தார்கள். அவர்களுடன் கலந்துபேசிய கையோடு, ராவத்தையும் உட்காரவைத்துப் பேசியது, அமித்ஷா அன்கோ.

அடுத்த ஆண்டு உத்தராகண்டில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள முதல் பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார், திரிவேந்திர சிங் ராவத்.

இன்று காலை டேராடூனில் நடைபெறும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், புதிய முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்த மாநிலம் உருவாகி 20 ஆண்டுகளில் இதுவரை 8 முதலமைச்சர்கள் பதவிவகித்துள்ளனர். இதில், முழு பதவிக்காலமும் இருந்துசென்றவர், காங்கிரசின் மறைந்த என்.டி.திவாரி மட்டும்தான். மற்ற எல்லாருமே ஏதோ ஒரு காரணத்துக்காக பதவிக்காலம் முடியும்வரை முதலமைச்சர் பதவியில் நீடிக்கமுடியவில்லை.

நித்யகண்டம் பூரண ஆயுசு என்பதாகவே இருந்துவருகிறது!

– இளமுருகு

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *