கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 19,138 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதையடுத்து தொற்றிலிருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி மொத்தம் 4,95,515 ஆக உள்ளது. தேசிய அளவில் குணம் அடைவோர் விகிதம் 62.42 விழுக்காடாக அதிகரித்துள்ளது என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நேற்று (ஜூலை 10) மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ தொற்றுக்கு 2,76,882 பேர் சிகிச்சை பெற்று தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருக்கின்றனர். ஒன்றிய அரசு , மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மேற்கொண்ட, செயல்திறன் மிக்க நடவடிக்கைகளாலேயே தொற்றிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கையில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது.
இந்திய அளவில் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் விகிதம் 2.72 விழுக்காடாக உள்ளது. இது உலகின் மற்ற நாடுகளில் உள்ள விகிதத்தை விட குறைவாகும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “நாள்தோறும் நடைபெறும் மருத்துவப் பரிசோதனைகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,83,659 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரையில் மொத்தம் 1,10,24,491 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் மருத்துவப் பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு ஆய்வகங்கள் 835, தனியார் ஆய்வகங்கள் 334 என மொத்த ஆய்வகங்களின் எண்ணிக்கை 1169 ஆக உயர்ந்துள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது,
**-வேந்தன்**�,