திராவிட வளர்ச்சித் திட்டம் கொளத்தூரில்: அண்ணாமலை

politics

தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை வெள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து இன்றும்( நவம்பர் 10) பார்வையிட்டு நிவாரணப் பணிகளை வழங்கி மழை நீர் அகற்றும் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறார்.

சென்னையில் மற்ற பகுதிகளைப் போலவே ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியும் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. நேற்று (நவம்பர் 9) அங்கே சென்று ஆய்வு செய்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முழங்காலடி தண்ணீரில் படகில் சென்று பார்வையிட்டு வீடியோ எடுத்தது சமூக தளங்களில் வைரலானது.

இந்நிலையில் இன்று (நவம்பர் 10) தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கொளத்தூர் தொகுதியை அடிப்படையாக வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

“திராவிட வளர்ச்சித் திட்டம்’ என்ற பொய்யான பிம்பத்தை ஒருவர் பார்க்க வேண்டுமென்றால் தமிழக முதலமைச்சர் அவர்களின் கொளத்தூர் தொகுதியை பார்வையிட வேண்டும். முதலமைச்சர் தொகுதிக்குள் வரும்போது பொதுமக்களின் வீட்டிற்கு வெளியே கயிறு கட்டி அவர்களை வெளியே வரவிடாமல் தடுப்பது, போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவது என்று கீழ்த்தரமான அரசியலை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றார்.

இதில் கொடுமை என்னவென்றால் அவர் சென்னையின் மேயராக இருந்த பொழுதும், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக இருந்த பொழுதும், தற்போது தமிழக முதலமைச்சராகவும் அதே இடங்களில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டுக் கொண்டு இருக்கின்றார்.

அப்படியெனில் அவர் அந்தப் பதவிகளில் இருந்த பொழுது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எதையுமே செய்யவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது. வெற்று அறிவிப்புகளும் செயல்படுத்தாத வாக்குறுதிகளும் தான் திமுகவின் வளர்ச்சித் திட்டம் போல”என்று கூறியிருக்கிறார்.

அதேநேரம் தமிழக பாஜகவின் ஊடகப் பிரிவு மாநில தலைவராக இருப்பவரும், கொளத்தூர் தொகுதியில் வசிப்பவருமான ஏ.என்.எஸ். பிரசாத் தனது ஃபேஸ்புக் பதிவில், “முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய கொளத்தூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்துக்குள் நுழைய முடியாதபடி வெள்ளம். எப்பொழுது தண்ணீர் வடியும் எப்போது சட்டமன்ற உறுப்பினர் வருவார் என்று காத்துக் கிடக்கிறது முதல்வரின் சட்டமன்ற அலுவலகம். பத்தாண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்ததில் கொளத்தூரில் அனைத்து பகுதிகளிலும் இல்லம்தோறும் வெள்ளம்”. மக்கள் படும் இந்த வேதனை தான் சாதனையா முதல்வர் அவர்களே ?

உள்ளாட்சித் துறை அமைச்சர், சென்னை மாநகர மேயர், மூன்று முறை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்…. இன்று தமிழக முதல்வர்

மரியாதைக்குரிய ஸ்டாலின் அவர்களின் சட்டமன்ற தொகுதியில் பெரும்பான்மையான இடங்களில் அடிப்படை வசதிகள் இல்லை, கழிவுநீர் வடிகால் வசதி இல்லை. சரியான குடிநீர் கட்டமைப்பு வசதிகள் இல்லை. ஒன்று மட்டும் வழக்கமாக நடக்கும்.

அனைத்து பகுதிகளிலும் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு சாப்பாடு கிடைக்கும்…

இலவச மளிகை சாமான்கள் மாதம் ஒருமுறை கிடைக்கும். இந்த வழிமுறையை கடைபிடித்து வாக்குகள் வாங்கி வெற்றி பெறுவதில் என்ன ஜனநாயகம்?

இனிமேலாவது கொளத்தூரில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வருவீர்கள் என்று நம்புகிறோம். முதல்வர் அவர்கள் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியிலுள்ள அனைத்து பகுதிகளில் ஆய்வு செய்து தேவையான முறையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும்”என்று வேண்டுகோள் வைத்துள்ளார் பிரசாத்.

**-வேந்தன்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *