lஒருவேலைக்கு இரு தேர்வா? ராமதாஸ் கண்டனம்!

Published On:

| By admin

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர் தேர்வர்கள், தங்களுக்கு பணி நியமனம் வழங்கக் கோரி கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஒரு வேலைக்கு இரு தேர்வு நியாயமா? இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வை நீக்க வேண்டும் என்று பாமக ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர், “தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிகளில் நியமிக்கப்பட மீண்டும் ஒரு போட்டித் தேர்வு எழுத வேண்டும் என்ற சமூகநீதிக்கு எதிரான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நூற்றுக்கணக்கானோர் நான்காவது நாளாக சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் பேச்சு நடத்தக்கூட அரசு முன்வராதது ஏமாற்றமளிக்கிறது.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் தொடக்கத்தில் 8ஆம் வகுப்பு வரையிலும், பின்னர் 10ஆம் வகுப்பு வரையிலும் கல்வி வழங்க மத்திய அரசு நிதி வழங்குகிறது. அதற்காக மத்திய அரசு விதித்த நிபந்தனையின்படி 2012 முதல் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இதற்கு தொடக்கத்தில் எதிர்ப்பு எழுந்தாலும் பின்னர் தகுதித்தேர்வு நடைமுறைக்கு வந்தது. 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அதன் தரவரிசை அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது; அப்போது போட்டித் தேர்வு எதுவும் நடத்தப்படவில்லை.

2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வெயிட்டேஜ் முறை கொண்டுவரப்பட்டது. அதற்கு பாமக, உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வெயிட்டேஜ் முறையை ரத்து செய்த தமிழக அரசு, அதற்கு மாற்றாக 2018 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட 149 என்ற எண் கொண்ட அரசாணை மூலம் போட்டித் தேர்வை திணித்தது. அதாவது ஒருவர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால், அவர் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றவர் ஆவார்; ஆனால், ஆசிரியர் பணி அவரது உரிமை இல்லை; அதற்கு அவர் போட்டித் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்பது தான் முந்தைய அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட ஆணை.

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்துவது வெயிட்டேஜ் முறையை விட கொடுமையானது. இது துக்ளக்தனமானது என்று 2018 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதன்பின் பட்டதாரி ஆசிரியர் நியமனம் நடைபெறாத நிலையில் இது நடைமுறைக்கு வரவில்லை. ஆனால், இப்போது போட்டித் தேர்வு நடத்தி, அதனடிப்படையில் தான் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் இப்போது அறிவித்திருப்பது தான் போராட்டம் வெடித்திருப்பதற்கான முதன்மைக் காரணம் ஆகும்.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை விட அதிக ஊதியம் வழங்கப்படும் பணி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி ஆகும். அதை விட அதிக ஊதியம் வழங்கப்படும் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் பெற்றிருந்தால் எந்தத் தேர்வும் இல்லாமல் பணி வழங்கப்படுகிறது. ஆனால், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு முதலில் தகுதித்தேர்வு, பின் போட்டித்தேர்வு என இரு தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்று அதிமுக அரசு முன்மொழிவதும், திமுக அரசு வழிமொழிவதும் என்ன நியாயம்?”என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், “தமிழகம் முழுவதும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 ஆயிரத்திற்கும் கூடுதலானவர்களுக்கு அதிகபட்சமாக 9 ஆண்டுகளாக வேலை வழங்கப்படவில்லை. அதனால், அவர்கள் தனியார் பள்ளிகளில் குறைந்த ஊதியத்திற்கு பணியாற்றி வருகின்றனர். அவர்கள் போட்டித் தேர்வு எழுதி தான் பணியில் சேர வேண்டும் என்றால் அதற்கான பயிற்சியைப் பெற அவர்கள் பல லட்சம் ரூபாய் செலவழிக்க வேண்டும்.

மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு தேவையில்லை என்பதற்காக என்னென்ன காரணங்கள் கூறப்படுகிறதோ, அவை அனைத்தும் இந்தத் தேர்வுக்கும் பொருந்தும். அதுமட்டுமின்றி, 2018ஆம் ஆண்டு போட்டித் தேர்வு திணிக்கப்பட்ட போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் போட்டித் தேர்வை ரத்து செய்வோம் என்று சூளுரைத்திருந்தார். அப்போது சொன்னதை செய்து முடிக்க இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது; சொன்னதை அவர் செய்ய வேண்டும்.

அதேபோல், ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு 57 ஆண்டுகளில் இருந்து 40 ஆக முந்தைய ஆட்சியில் குறைக்கப்பட்டதும், அதை நடப்பாண்டிற்கு மட்டும் 5 ஆண்டுகள் உயர்த்தி திமுக அரசு கடைபிடிப்பதும் சமூக அநீதியின் உச்சங்கள். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனம் செய்யாத அரசுக்கு வயது வரம்பை குறைக்க எந்த தார்மீக உரிமையும் கிடையாது.

தகுதித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதியை போக்கும் வகையில், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை, ‘குறைந்தபட்சம் ஓராண்டு பணியாற்ற தகுதி பெற்றிருக்க வேண்டும்’ என்பதற்கிணங்க 59 ஆக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அதுபோன்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், இரு தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

**-வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share