பேரழிவுக்கு காரணம் எடப்பாடிதான்: ஆலோசனைகளை பட்டியலிட்ட ஸ்டாலின்

politics

நூற்றுக்கணக்கான ஆலோசனைகளை அரசுக்கு சொல்லியிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த 25ஆம் தேதி கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், இந்தியாவிலேயே நோயை வைத்து அரசியல் செய்பவர் ஸ்டாலின் மட்டும்தான் என்றும், நோய் தொற்றை தடுப்பதற்கான ஆக்கப்பூர்வ கருத்துக்களை ஸ்டாலின் இதுவரை சொன்னதில்லை எனவும் குற்றம்சாட்டியிருந்தார்.

காணொலி காட்சி மூலமாக இன்று (ஜூன் 28) உரையாற்றிய திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வரின் குற்றச்சாட்டுக்கு விரிவாக பதிலளித்துள்ளார். “கொரோனா தொடக்க நிலையில் இருந்து இன்றுவரை தமிழக அரசுக்கு, மக்களின் பாதுகாப்பு கருதி, நூற்றுக்கணக்கான ஆலோசனைகளை நான் வழங்கி வருகிறேன். நோயைக் கட்டுப்படுத்தவும், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தவும், நோய் வந்தவர்களைக் காப்பாற்றவும் பல ஆலோசனைகளைச் சொல்லி இருக்கிறேன்.

ஏராளமான மருத்துவர்கள் என்னிடம் பேசி வருகிறார்கள். அவர்களுடைய ஆலோசனைகளையும் அரசுக்குச் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறேன்.ஊரடங்கு காலம் என்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மக்களுக்கு என்னென்ன உதவிகள் செய்யவேண்டும் என்பதையும் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறேன். ஆனால், இதில் எதையுமே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்கவுமில்லை; செய்யவுமில்லை” என்று ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

**

கொரோனா பேரழிவுக்கு முதல்வர்தான் ஒரே காரணம்

**

இவர் என்ன சொல்வது; நாம் என்ன கேட்பது? என்று அலட்சியமாக இருந்தார். இப்படி ஆணவமாக நடந்து கொண்டதால்தான் தினமும் 2000 – 2500- 3000 – 3500 என்று கூடிக்கொண்டு போகிறது. தினமும் 50 பேர் இறக்கிறார்கள். சமூகப் பரவல் ஆகிவிட்டது என்று பல மருத்துவ நிபுணர்களும் சொல்கிறார்கள். ஆனால் சமூகப் பரவல் இல்லை என்று பிடிவாதமாகச் சொல்கிறார் முதலமைச்சர். என்னுடைய ஆலோசனை மட்டுமல்ல, யாருடைய ஆலோசனையையும் கேட்கின்ற மனநிலையில் முதலமைச்சர் இல்லை. அந்த முதிர்ச்சி இன்மையினால்தான், தமிழ்நாடு மிக மோசமான பேரழிவைச் சந்திக்க வேண்டியதாயிற்று. இந்த ஒட்டுமொத்த பேரழிவுக்கும் ஒரே ஒரு ஆள் காரணம் என்றால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என்று குற்றம்சாட்டிய ஸ்டாலின்,

**

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற உருப்படியாய் ஒரு நடவடிக்கையும் எடுக்காத எடப்பாடி பழனிசாமி, தனக்குப் பணம், கமிஷன் வருகிற திட்டங்களைப் பார்வையிட கோயம்புத்தூருக்கும் திருச்சிக்கும் போகிறார்.

**

இதுவரைக்கும் நான் விடுத்த அறிக்கைகளை ஒழுங்காக படித்திருந்தார் என்றால், இப்படிக் கேட்கின்ற அசட்டுத் துணிச்சல்கூட அவருக்கு வந்திருக்காது. என்னுடைய அறிக்கைகள் அனைத்துமே, அக்கறையுடன் அரசுக்கு ஆலோசனை சொல்லும் அறிக்கைகள் தான்.. இது எல்லாவற்றையும் மறைத்து, மூன்று மாதம் கழித்து ஸ்டாலின் என்ன ஆலோசனை சொன்னார் என்று கேட்டால், என்ன அர்த்தம்? எனக் கேள்வி எழுப்பினார்.

**

ஆலோசனைகளே சொல்லவில்லையா?

**

சட்டமன்றக் கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று முதலில் சொன்னது யார்?அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துங்கள் என்று கேட்டது யார்? கொரோனாவிற்கு 60 கோடி ரூபாய் நிதி போதாது, 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்குங்கள் என்று கேட்டது யார்? மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரியுங்கள் என்று கோரிக்கை வைத்தது யார்? பரிசோதனைகளை அதிகரியுங்கள் என்று எச்சரித்தது யார்? ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவோருக்கு 5000 ரூபாய் நிதியுதவி கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தது யார்? மின் கட்டணத்தில் சலுகையும், கால நீட்டிப்பும் கொடுங்கள் என்று சொன்னது யார்? நிதிநிலை அறிக்கையை மறுபரிசீலனை செய்யுங்கள், சிறு-குறு நடுத்தர தொழில் நிறுவனங்களைக் காப்பாற்றுங்கள் என்றெல்லாம் ஆலோசனை வழங்கியது யார்? கொரோனா காலத்தில் மதுபானக் கடைகளைத் திறக்காதீர்கள் என்று சொன்னது யார்? பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்த வேண்டாம் என்று சொன்னது யார்? இவ்வளவையும் சொன்னது தான் தான் எனக் கூறிய அவர்,

“ஆனால், ஸ்டாலின் என்ன ஆலோசனை சொன்னார் என்று கேட்கிறாரே எடப்பாடி பழனிசாமி. ஊரடங்கை அமல்படுத்துவதாக இருந்தால் முறையாக அமல்படுத்துங்கள் என்று சொல்லி வந்தேன். தளர்வு, தளர்வுக்கு மேல் தளர்வென்று ஊரடங்குச் சட்டத்தையே கேலிக்கூத்தாக ஆக்கினார்கள் கோயம்பேடு ஒன்று போதாதா, எடப்பாடி பழனிசாமிக்கு எந்த முன்யோசனையும் இல்லை என்று சொல்வதற்கு? எனச் சாடினார்.

**

உதவி செய்யத் தவறிய அரசு

**

திமுகவினரை நிவாரணம் கொடுங்கள் என்று தேவையில்லாமல் பாதுகாப்பின்றி ஈடுபட வைத்ததால் ஒரு சட்டமன்ற உறுப்பினரை இழந்தோம்” என்று நீலிக்கண்ணீர் வடித்துள்ளதாகத் தெரிவித்த அவர்,

“அப்பாவி ஏழை மக்களுக்கு அரசாங்கம் ஒழுங்கான உதவிகளைச் செய்திருக்க வேண்டும். அரசாங்கம் செய்யத் தவறியதால், ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலமாக தி.மு.க. தொண்டர்கள் களத்தில் இறங்கிச் செய்தார்கள். அப்பாவிகளை அநாதையாக அ.தி.மு.க. அரசு கைவிட்டது மாதிரி, நாங்கள் விடவில்லை. இது நாட்டு மக்கள் மத்தியில் திமுகவுக்கு பெரிய அளவில் பேர் ஏற்படுத்தித் தந்துள்ளதைப் பார்த்து வயிற்றெரிச்சலில், இப்படி பேசி வருகிறார் முதலமைச்சர்” என்றார்.

****

பொய்யான மகுடம் சூட்ட வேண்டாம்

**

தன்னுடைய உயிரைப் பணயம் வைத்து களப்பணியாற்றிய திமுக மாவீரனின் மரணத்தை எதற்காகக் கொச்சைப்படுத்த வேண்டும்? உங்களின் தனிச் செயலாளர் கொரோனா நோய்க்கு இறந்தாரே, நோய்ப் பாதுகாப்பு வழி முறைகளை நீங்கள் அவருக்கு சொல்லி கொடுக்காதது தான் காரணமா? சென்னையில் ஒரு இன்ஸ்பெக்டர் இறந்தாரே, அது உங்கள் தோல்வியா? என்றவர்,

. நோயை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எடப்பாடி பழனிசாமியும், அவர் வைத்திருக்கிற அமைச்சர்களும் அடித்த பல்லாயிரம் கோடி கொள்ளையைச் சொல்லி எங்களால் அரசியல் நடத்த முடியும். முதலமைச்சர் பதவியை வைத்து மக்களுக்கு எதையும் செய்யத் தகுதி இல்லாதவர் பழனிசாமி என்பதைத்தான் நாட்டு மக்களுக்குத் தினமும் சொல்லிக்கொண்டு வருகிறேன். இதுவரை எடப்பாடி பழனிசாமிக்கு எல்லா ஆலோசனைகளையும் சொல்லிவிட்டேன். இப்போது அவருக்குச் சொல்வதற்கு ஒரே ஒரு ஆலோசனைதான் இருக்கிறது.

கொரோனாவை ஒழித்துவிட்டு அதற்கான சாதனைப் பட்டத்தைச் சூட்டிக் கொள்ளுங்கள். கொரோனேவே ஒழியாத நிலையில், ஒழித்துவிட்டதாகப் பொய்யான மகுடம் சூட்டிக் கொள்ளாதீர்கள்” என முதல்வருக்கு வலியுறுத்தியுள்ளார்.

**எழில்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *