ரஜினியின் கட்சி அறிவிப்பு: தலைவர்கள் மனநிலை என்ன?

politics

ஜனவரி மாதம் அரசியல் கட்சியைத் தொடங்கவுள்ளதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், அதற்கான அறிவிப்பை வரும் 31ஆம் தேதி வெளியிடவுள்ளதாகவும் கூறினார். அத்துடன் அரசியல் கட்சிக்கான மேற்பார்வையாளராக காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியனை நியமித்தார். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தி நியமனம் செய்யப்பட்டார். இவர் பாஜகவின் அறிவுஜீவிகள் பிரிவின் தலைவராக இருந்தவர்.

ரஜினியின் அரசியல் வருகைக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தெரிவித்த கருத்துகளைக் காண்போம்.

திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி, “ரஜினி அரசியலுக்கு லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வந்தாலும் தேர்தலில்தான் தெரியும். ரஜினி கட்சி தொடங்கினால் அது திமுகவையோ, திமுக வாக்கு வங்கியையோ பாதிக்காது” என்று கருத்து தெரிவித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “திமுகவுடன் ஏற்கனவே கூட்டணியில் இருப்பதால் ரஜினி கட்சி கூட்டணிக்கு காங்கிரஸ் செல்லாது. தமிழகத்தில் ஆன்மிகம் எடுபடும்; ஆனால், அரசியலில் ஆன்மிகம் எடுபடாது. ஆன்மிகம் என்பது குழப்பமான விஷயம். முதலில் ரஜினி தெளிவடைய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

விசிக தலைவர் திருமாவளவன், “நடிகர் ரஜினி வலதுசாரி அரசியல்வாதியாகக் காட்டிக்கொள்ள விரும்புகிறார். தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக யாரை நியமித்திருக்கிறார் என்பதன் மூலம் அவர் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறாரோ என்கிற ஐயம் எழுகிறது. அவர் இங்கே பாஜகவின் இன்னொரு முகமாகவே இயங்குவார்” என்று விமர்சித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், “ரஜினியின் அதிரடி திரைப்படங்களுக்கு இருந்த வரவேற்பு, அவரது தெய்விகப் படங்களுக்கு இல்லை என்பது அவருக்கே தெரியும். இப்போது இருக்கிற கட்சிகளில் இல்லாத எந்த கொள்கையை ரஜினி அறிவிக்கப் போகிறார் என மக்கள் எதிர்பார்ப்பார்கள். இருந்தாலும் அவருடைய அரசியல் வருகையை வரவேற்கிறேன். என்ன கொள்கையை, திட்டங்களை அறிவிக்கிறார் எனப் பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கூறியுள்ளார்.

ரஜினியின் காலம்தாழ்ந்த அரசியல் வருகை என்பது எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது எனத் தெரிவித்த தவாக தலைவர் வேல்முருகன், “நீட், விவசாயிகள் பிரச்சினைகள் என மக்களுக்கான போராட்டக் களத்தில் இல்லாத ஒருவர் திடீரென தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு கட்சி ஆரம்பித்து அதன்மூலம் அவருக்கு மக்கள் வாக்களித்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார் என்பது சாத்தியமில்லாத ஒன்று” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ரஜினியுடன் திரைப்படங்களில் இணைந்து நடித்தவரும், பாஜகவைச் சேர்ந்தவருமான நடிகை குஷ்பு, அன்பார்ந்த ரஜினிகாந்த் அவர்களே, ஒரு வழியாக நீங்கள் அரசியலில் இறங்குகிறீர்கள் என்பதை அறிந்ததில் மகிழ்ச்சி. உங்கள் புதிய பாத்திரத்துக்கு வாழ்த்துகள். உங்கள் முழு முயற்சியை இதில் காட்டுவீர்கள் என்று எனக்கு உறுதியாகத் தெரியும்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகரும், ரஜினியின் தீவிர ரசிகருமான ராகவா லாரன்ஸ், “உங்களின் லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக நானும் இந்தத் தருணத்துக்காகக் காத்திருந்தேன். இந்தக் கடினமான கொரோனா காலத்தில் தங்கள் உடல்நலனைக்கூட கருத்தில்கொள்ளாமல் மக்களுக்காகச் சேவை செய்ய முடிவு செய்துள்ளீர்கள். உங்கள் கனவு நிச்சயமாக நனவாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

**எழில்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *