அரசியல் பழிவாங்கல் செய்யும் உன் பெயர் திமுகவா?: ஈபிஎஸ், ஓபிஎஸ்

politics

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்குத் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து இன்று 6ஆவது முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது. முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாக ரூ 11.32 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளார் என்ற புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.

அதுபோன்று தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக எம்.எல்.ஏ. கோவிந்தசாமி வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். இவர், அன்பழகனின் ஆதரவாளர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ரெய்டு நடத்தப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஓபிஎஸ், ஈபிஎஸ், “அரசியல் காழ்ப்புணர்ச்சியின் கோரக் கரங்களை மீண்டும் ஒருமுறை நீட்டி இருக்கிறது திமுக அரசு. அரசியல் பழிவாங்கல் செய்யும் உன் பெயர் திமுகவா? ஏற்கெனவே ஐந்து முன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை என்ற பெயரில் சட்ட மீறல் நடத்திய திமுக, வெறுங்கையோடு திரும்பிய நிகழ்வை மறந்து, மீண்டும் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி ஆகியோரது இல்லங்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள், கழக நிர்வாகிகள் ஆகியோரது இல்லங்களிலும் சோதனை என்ற சட்ட மீறலை இன்று நடத்தியது.

சாமானிய மக்கள் அரசை எதிர்த்துக் குரல் எழுப்பினால் வழக்குப்பதிவு. அதற்கும் ஒருபடி மேலே சென்று சமூக வலைதளங்களில் ஆளும் கட்சியினரை எதிர்த்துக் குரல் எழுப்பினால், அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம். ஆளுகின்ற ஆட்சியின் மீதும், அதிகாரிகள் மீதும் உண்மையான குற்றத்தைக் கண்டுபிடித்து அரசியல் களம் கண்ட அதிமுக தலைவர்கள் மீதும், முன்னாள் அமைச்சர்கள் மீதும், லஞ்ச ஒழிப்புத்துறை எனும் ஆயுதத்தைத் தொடர்ந்து திமுக அரசு இயக்கிக் கொண்டிருக்கிறது.

இலவு காத்த கிளியாக 10 ஆண்டுகளாகச் சட்டமன்றத்திற்கு வெளியே முதல்வர் நாற்காலிக்காகக் காத்துக் கொண்டிருந்த மு.க.ஸ்டாலின், அந்த இருக்கை கிடைத்த உடனே, எதிர்க்கட்சியாக இருந்தபோது என்னவெல்லாம், என்னென்னவெல்லாம் கூப்பாடு போட்டோம், என்னென்னவெல்லாம் மக்களைத் திரட்டி போராட்டம், ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் மக்களுக்கு பெரும் துயரத்தைக் கொடுத்தோம் என்பதையெல்லாம் மறந்து, இன்றைக்கு மக்கள் விரோத அரசை நடத்திக் கொண்டிருக்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டபோது, சட்டமன்ற உறுப்பினரைச் சந்திக்க மறுத்த மாவட்ட ஆட்சியரைக் கண்டிக்கும் விதமாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று பிரச்சனையை எதிர்கொண்ட ஒரே காரணத்திற்காக, தருமபுரி மாவட்ட சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி கூட திமுகவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் கிடைக்கவிடாமல் செய்த, சமரசம் இல்லா சமரன் கே.பி.அன்பழகனை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பழிவாங்கும் நடவடிக்கைதான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை” என்று குறிப்பிட்டுள்ளனர்.

திமுக ஒருபோதும் எங்களை சாய்த்துவிட முடியாது என்று கூறியுள்ள அவர்கள், “ஆட்சிக் கட்டிலில் ஏறி குடியரசு தின அணி வகுப்பில் தமிழகத்தின் சார்பில் ஊர்தியைப் பங்குபெற வைக்க முடியாத திமுக அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய நிர்வாகத் திறமை இன்மையை மறைக்கவே தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்” என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *