kயார் யாருக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை?

politics

கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 48,84,726 நகைக்கடன்களில் 35,37,693 நகைக்கடன்கள் தள்ளுபடி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்று நகைக்கடன் தள்ளுபடி. திமுக ஆட்சி அமைத்து 7 மாதங்கள் கடந்த நிலையில், [எப்போது நகைக்கடன் தள்ளுபடி ஆகும் என்ற எதிர்பார்ப்பு கடன் பெற்றவர்கள் மத்தியில் நிலவி வந்தது.](https://minnambalam.com/politics/2021/12/27/34/When-will-the-jewelry-loan-discount-come-true)

இந்நிலையில் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர், சண்முக சுந்தரம் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்குச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், நகைக் கடன்கள் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்துக்கு 5 பவுனுக்கு உட்பட்டும் நகைக் கடன்களை சில தகுதிகளின் கீழ் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும்.

தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐந்து பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்காக அரசுக்கு ஏற்படும் செலவு பூர்வாங்க மதிப்பீடுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் 6,000 கோடி ரூபாய் ஆகும் என தெரிய வருகிறது.

நகைக்கடன் தள்ளுபடி பெறுவதற்குத் தேவையான தகுதிகள் குறித்தும் கடன் தள்ளுபடி பெறுவதற்கு எந்தெந்த நேர்வுகளில் தகுதியில்லை என்பது குறித்தும் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் அரசால் வெளியிடப்பட்டன. அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உத்தேசமாகத் தகுதி பெறும் பயனாளிகளின் பட்டியலும் நகைக் கடன் தள்ளுபடிக்குத் தகுதி பெறாத நபர்களின் பட்டியலும் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கும் எக்ஸெல் படிவத்தில் ஏற்கனவே அனுப்பப்பட்டது.

இந்நேர்வில் பொது நகைக் கடன்களை கள ஆய்வு செய்வதற்கு அயல் மாவட்டங்களில் உள்ள அலுவலர்களைக் கொண்டு குழு அமைக்கப்பட்டு, சேலம் மாவட்டம் தவிர அனைத்து மாவட்டங்களிலும் சரிபார்ப்பு பணி முடிவடைந்து தகவல் பதிவேற்றும் பணி நடந்து வருகிறது.

இந்தப்பணி முடிவடைவதற்கு மேலும் காலதாமதம் ஆகும் என்பதைக் கருத்தில்கொண்டும் கூட்டுறவுச் சங்கங்களுக்குத் தேவையின்றி நிதி இழப்பு ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டும் டிசம்பர் 28ஆம் அன்று நடைபெற்ற கூகுள் காணொளி காட்சியில் பின்வரும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

ஏற்கனவே மண்டல இணை பதிவாளர் அலுவலகங்களில் இருந்து பெறப்பட்ட 48,84,726 நகைக் கடன் விவரங்கள் அனைத்தும் கணினி மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு அதில் 35,37,693 கடன்களுக்கு அரசாணையில் கண்டுள்ள நிபந்தனைகளில் கீழ்க்கண்டவற்றின் அடிப்படையில் நகைக் கடன் தள்ளுபடி பெறாத நேர்வுகள் என்று முடிவு செய்யப்பட்டு அந்த பட்டியல்கள் அனைத்தும் மண்டல இணைப்பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்டன.

**யார் யாருக்குப் பொருந்தாது?**

ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்கள் மற்றும் குடும்ப அட்டையின் படி இடம்பெற்றுள்ள அவர்தம் குடும்பத்தினர்.

நகைக் கடன் தொகை முழுமையாகச் செலுத்தியவர்கள்.

40 கிராமுக்கு மேற்பட்ட நகைக் கடன் பெற்ற குடும்பத்தினர்,

கூட்டுறவுச் சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்.

கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்.

அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்.

குடும்ப அட்டை , ஆதார் எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள்.

எந்தப் பொருளும் வேண்டாத குடும்ப அட்டையினர்.

ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நகைக்கடைகள் மூலம் மொத்த எடை 40 கிராமுக்குக் கூடுதலாகப் பெற்ற AAY குடும்ப அட்டைதாரர்கள்.

அரசாணையில் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு தள்ளுபடி தகுதிபெறும் நகைகளில் மாவட்ட வாரியான பட்டியலும் அந்த மண்டல இணைப்பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்குக் கண்டனம் தெரிவித்துள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காகச் சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அள்ளி தெளித்து அதிகாரத்திற்கு வந்துவிட்டு, இப்போது அதிலிருந்து தப்பிக்கக் காரணங்களைத் தேடுவது மக்களுக்குச் செய்யும் துரோகமாகும். எனவே, பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டோருக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை என்ற புதிய உத்தரவை தி.மு.க அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால், தி.மு.க என்றாலே தில்லுமுல்லு என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் ஒருமுறை உணர்ந்து கொள்வார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *