நான் ஹெலிகாப்டரில் பறப்பதற்கு மக்கள்தான் காரணம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். முதன்முறையாகத் தேர்தலில் களம் இறங்கும் கமல் கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது நானும் குடும்ப அரசியல் தான் செய்கிறேன் என தன் வழக்கமான பேச்சில் மக்களைக் குழப்பிய கமல், பின் மக்கள் தான் என் குடும்பம் என கூறி கொங்கு மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில், கமல் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஹெலிகாப்டர் பயன்படுத்துவது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதுதொடர்பாக இன்று விளக்கமளித்துள்ள கமல், “நான் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தவன் தான். எனக்கு ஹெலிகாப்டர் ஒன்றும் தேவையில்லை. என்னை ஹெலிகாப்டரில் போக வைத்ததே மக்கள் தான். அதற்காகத் தான் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை ஹோஸ்ட் செய்கிறேன். நான் ஒன்றும் அரசு பணத்தில் ஹெலிகாப்டரை பயன்படுத்தவில்லை. சொந்த செலவில் தான் பயன்படுத்துகிறேன். மாணவர்களிடம் பேசிவிடக்கூடாது என தடுக்கப்பட்டேன். குறுகிய காலத்தில் நான் சென்றடைய வேண்டிய இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதால் ஹெலிகாப்டரை பயன்படுத்துகிறேன்” என்று தெரிவித்தார்.
”நாங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக சொன்னதை எல்லாம் இப்போது வாக்குறுதியாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மேற்கு வங்க முதல்வரும் இல்லத்தரசிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். நான் அறிவித்த திட்டம் அனைத்து கட்சி தேர்தல் வாக்குறுதிகளிலும் இடம் பெறும் நாள் வெகுதூரம் இல்லை எனக் காங்கிரஸின் சசிதரூர் தெரிவித்திருந்தார். அது தற்போது நடந்துகொண்டிருக்கிறது. மக்கள் நீதி மய்யம் முன்னோடியாக இருக்கிறது” என்று குறிப்பிட்டார் கமல்.
தனது, சொத்து மதிப்பு 176 கோடி ரூபாய்க்கு அதிகமாகவும், கடன் 49 கோடி ரூபாய்க்கும் அதிகமாகவும் உள்ளது என கமல் வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
**-பிரியா**
�,