இபிஎஸ் Vs ஒபிஎஸ் – சசிகலா என்ட்ரி- அதிமுக தலைமைக் ’கலகம்!’

politics

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி செப்டம்பர் 18 ஆம் தேதி மாலை சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிரொலித்தது.

தலைமைக் கழகத்துக்கு ஓபிஎஸ், இபிஎஸ் வரும்போதே வருங்கால முதல்வர் என்றும், நிரந்தர முதல்வர் என்றும் முழக்கங்கள் எழும்பின. அதன் பின் சிறிது நேரத்தில் கூட்டம் தொடங்கியது.

அவைத் தலைவர் மதுசூதனன் உடல் நலம் இல்லாமையால் வரவில்லை. எனவே அவைத் தலைவர் இன்றியே கூட்டம் தொடங்கியது.

முதலில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி பேசினார்.

“அண்ணாதிமுகவின் இரு பெரும் தலைவர்கள் இங்கே இருக்கிறீர்கள். நீங்கள் இருவருமே கட்சிக்கு முக்கியம், நீங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதிமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். **அம்மா ஆட்சி அமைப்போம் என்று நாம் சொல்வதை சில நாட்களுக்கு முன் தினகரனும் சொல்லியிருக்கிறார். அவர் வச்சிக்கிட்டிருக்கிற ஒரு கட்சி எந்த அளவுக்கு இருக்குனு எல்லாருக்கும் தெரியும். அப்படிப்பட்ட நிலைமையிலயும் அம்மா ஆட்சியை அமைப்போம்னு சொல்கிறார்னா யாரை நம்பி சொல்றாரு? அது எனக்கு சந்தேகமா இருக்கு”** என்று பேசியிருக்கிறார்.

அடுத்து துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேசும்போது, “ஆட்சி நன்றாக நடக்கிறது. ஆனால் கட்சி ரொம்ப மோசமாக சென்றுகொண்டிருக்கிறது. கீழ் மட்ட நிர்வாகிகளுக்கு ஆட்சி இருந்தும் என்ன இல்லாட்டி என்ன என்ற எண்ணம் உண்டாகிவிட்டது. நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கைவிட்டுவிட்டால் அப்புறம் மீண்டும் ஆட்சியை எப்படி பிடிக்க முடியும்? எனவே நிர்வாகிகள், தொண்டர்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் ஆட்சியின் பலனும் சென்று சேர வேண்டும்” என்று பேசினார்.

அடுத்து அமைச்சர் தங்கமணி பேசினார். “எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை கட்சி ஒற்றுமையாக சந்திக்க வேண்டுமென்றால் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும். **தோழமைக் கட்சியாக இருப்பவர்கள் கூட முதல்வர் வேட்பாளரை முடிவு செய்து அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள். (பாமகவை குறிப்பிடுகிறார்) ஆனால் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் நாம் முதல்வர் வேட்பாளரை அறிவித்து களமிறங்குவதுதான் சரியாக இருக்கும்** என்பது என் தாழ்மையான கருத்து”என்று கூறினார்.

அப்போது மனோஜ் பாண்டியன், “அணிகள் இணைந்தாலும் எண்ணம் இணையவில்லை என்பதுதான் மூன்று வருடமாக நடந்துகொண்டிருக்கிறது. நாங்கள் அண்ணன் ஓபிஎஸ் அணியில் இருந்தோமென்பதால் அந்த அணியைச் சேர்ந்தவர்கள் எல்லாம் புறக்கணிக்கப்படுவது என்ன நியாயம்? அணிகள் இணைந்ததால்தான் இன்று வரை ஆட்சி தொடர்கிறது. அதை எண்ணிப்பார்க்க வேண்டும்” என்றார்.

ஜே.சி.டி பிரபாகர் பேசுகையில், “எனக்கு ஐயா துணை முதல்வர் அவர்களை பல ஆண்டுகளாக தெரியும். அம்மா இருக்கும்போதும் அம்மாவுக்குப் பிறகும் இந்த கட்சிக்கும் ஆட்சிக்கும் அவர் பட்டுவரும் பாட்டை நான் அறிவேன். ஒன்றே ஒன்றை சொல்கிறேன். **அவர் இப்போதும் அம்மாவின் ஆத்மாவின் வழி நடப்பவர். அவருடைய நெஞ்சத்தில் யாருக்கு எதிராகவும் எந்த சூதுவாதும் கிடையாது. அவர் மனதை நோகடிக்கவைத்தால் அது நன்றாக இருக்காது”** என்று உருக்கமாகப் பேசினார்.

இப்படி பேசிக் கொண்டிருக்கும்போதே **அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எழுந்து, “நமக்கு தேவை இப்போது மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும். சின்னம்மா விடுதலையாகி வெளியே வந்தால் அவரை சேர்த்துக் கொண்டு நாம் தேர்தலை சந்தித்தால் இன்னும் எளிதில் வெற்றி காண முடியும்” என்றார்.** அப்போது கூட்டத்தில் சில சலசலப்புகள் எழுந்தன.

உடனே **அமைச்சர் செல்லூர் ராஜூ எழுந்து, “சின்னம்மாவை சேர்ப்பதில் நமக்கு என்ன இருக்கிறது. அவர்களை சேர்த்துக் கொள்வது நன்மையைத்தான் தரும் அதிமுகவுக்கு”** என்று கூறினார்.

அப்போது எழுந்த அமைச்சர் ஜெயக்குமார், “இப்படி நீங்களெல்லாம் ஒன்றாக சேர்ந்துவிட்டால் என் நிலைமை என்னாவது? நீங்கள் சொல்லிதானே நான் அவர்களை எதிர்த்து அவ்வளவு பேசினேன். நீங்கள் எல்லாம் இப்படி சேர்ந்துகொண்டீர்களென்றால் நான் என்ன ஆவது?” என்று கேட்க அப்போது சில சலசலப்புகள் மீண்டும் எழுந்தன.

சி.வி.சண்முகம் இடையில் எழுந்து, **“இந்த ஆட்சியில் எல்லா பலன்களும் குறிப்பிட்ட சமூகத்துக்குதான் போகிறது என்ற எண்ணம் மக்களிடையே உருவாகிக் கொண்டிருக்கிறது. அதை உருவாக விடக் கூடாது”** என்று கூற அதற்கு சில எதிர்க்குரல்கள் எழுந்தன. “நான் சட்ட அமைச்சர் பேசிக்கிட்டிருக்கேன் யாரு எதிர்த்துப் பேசறது?” என்றபடியே அவர் தொடர்ந்தார். “எல்லாருக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டு எல்லாரும் நன்மை அடைய வேண்டும் “என்றார் சண்முகம்.

கடைசியாக மைக் பிடித்து ஓ.பன்னீர் பேசுகையில், “ஆட்சியும் கட்சியும் சிறப்பாக செல்ல வேண்டும் என்பதுதான் என் எண்ணம். என்னை சந்திக்கிறவர்களிடத்திலெல்லாம் நான் சொல்லிவருவதும் இதைத்தான். சில நாட்களுக்கு முன்பு கூட சகோதரர் எடப்பாடி பழனிசாமியிடம், ‘ தலைமைக் கழகத்துக்கு வாரம் இருமுறை வந்து தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்துப் பேசலாம் என்றிருக்கிறேன் என என் கருத்தை வெளிப்படுத்தினேன். அவரும் உடனே வரவேற்று… நானும் வருகிறேன் என்று சொன்னார்.

கட்சிப் பணியை ஒழுங்காக ஆற்றினால்தான் அம்மா ஆசைப்பட்டது மாதிரி மீண்டும் அம்மா ஆட்சியை அமைக்க முடியும். கட்சியை விட்டுவிட்டால் என்றைக்கும் ஆட்சியை பிடிக்க முடியாமல் போய்விடும். எனவே **புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா நம் கையில் கொடுத்த மிகப்பெரிய சொத்து கட்சிதான். அதை வைத்துதான் ஆட்சியை பிடிக்க வேண்டும். ஆட்சியை வைத்து கட்சியை பிடிக்கக் கூடாது**.

ஆட்சியில் இருக்கும் பதவியில் இருந்து விலகி கட்சிப் பணியாற்றத் திட்டமிட்டேன். பத்து அமைச்சர்களும் விலகி கட்சிப் பணியாற்ற வேணும் என்று கூறினேன்.

இந்த நிலையில் நாம் ஒன்றாக இணைந்தபோதே கட்சிக்காக 11 பேர் கொண்ட ஆட்சி மன்றக் குழு, வழிகாட்டுதல் குழு அமைக்க வேண்டும் என்று ஒப்புக்கொண்டோம். அதை நாம் இன்னமும் செய்யவில்லை. உடனடியாக அந்த ஆட்சிமன்றக் குழுவை அமைத்து அதன் வழியே தேர்தல் முடிவுகளை நாம் மேற்கொள்ள வேண்டும்” என்று பேசினார்.

பன்னீர் பேசியதை அடுத்து மீண்டும் பேசிய எடப்பாடி பழனிசாமி, “இப்போதே நான்கு ஒருங்கிணைப்பாளர்கள் இருக்கிறோம்.அமைச்சர் பெருமக்களுடனும் ஆலோசித்துதான் முடிவெடுக்கிறோம். இந்த நிலையில் இன்னொரு குழு எதற்காக வேண்டும்? அமைப்புச் செயலாளர்கள் பல பேர் இருக்கிறார்கள்.அவர்களில் யாரை நாம் ஆட்சி மன்றக் குழுவில் சேர்க்க முடியும்? எனவே அது இப்போது சாத்தியம் இல்லை”என்று பன்னீர் பேச்சுக்கு நேருக்கு நேர் மறுப்பு தெரிவித்தார். அத்தோடு கூட்டம் முடிந்தது.

அதன் பின் இருவரும் அரைமணி நேரம் அறைக்குச் சென்று ஆலோசனை நடத்தினார்கள். அப்போது ஓபிஎஸ். சென்னை மாநகரத்தில் மாவட்ட அமைப்புகளை மறு வரையறை செய்து நிர்வாகிகளை நியமிக்கும் பட்டியலை நான் ஏற்கனவே கொடுத்துவிட்டேன். அது என்னாச்சு என்று கேட்டிருக்கிறார். அப்போது எடப்பாடி, ‘சென்னையில இப்ப இருக்குற நிலைமையில கட்சி அமைப்புல மாற்றம் பண்ண வேணாம்னு நினைக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.

இப்படி உள்ளே-வெளியே இரு இடங்களிலும் ஓபிஎஸ்- இபிஎஸ் முரண்பாடான கருத்துகளையே கொண்டிருக்கிறார்கள்.

**-மின்னம்பலம் டீம்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *